துப்பாக்கிச் சூட்டு கொலைகளும் இனந்தெரியாத சடலங்களும் உயர்வு

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியதன் பின்னர் பல பொலிஸ் குழுக்கள் அத்திட்டத்துடன் இணைந்து செயற்படும் நிலையில், மறுபுறம் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மற்றும் இனந்தெரியாத சடலங்கள் கண்டுபிடிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

தெஹிவளை மவுண்ட் சிறிபுர பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படேவிட்ட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சவிந்து தரிந்து என்பவர் உயிரிழந்துள்ளார்.

இவர் டுபாய் நாட்டில் மறைந்திருந்த பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கொஸ் மல்லி என்பவரின் சீடர் என்றும் கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்த வந்த சந்தேக நபர் 47 வயதுடையவர் எனவும் அவர் படோவிட்ட அசங்கவின் குழுவைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஸ் மல்லிக்கும் படோவிட்ட அசங்கவுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ்விரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த முரண்பாடு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேற்கு மற்றும் தெற்கு பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பன தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும் அடையாளம் தெரியாத நிலையில், மில்லனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்தொட்ட கால்வாய், கிரியெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகம்மோதர பிரதேசத்தில் களுகங்கை மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடை குளம் ஆகிய பகுதிகளில் மூன்று சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை மேல் மாகாணத்தில் உள்ள 17 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கான காரணங்களைத் தெரிவிக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலான இடமாற்றங்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் செய்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான உளவுத்துறை அறிக்கைகளே காரணமென கூறப்பட்டது. எவ்வாறாயினும், பொலிஸ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றில் எந்தவொரு ஒழுக்காற்று விசாரணை மற்றும் குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பதிவுகள் எதுவும் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *