ஜேர்மனி கேவலார் நகரில் இரு நூல்களின் வெளியீடு! … ஏலையா க.முருகதாசன்.

ஜேர்மனி கேவலார் நகரில,; எழுத்தாளர் திருமதி.கீத்தாராணி பரமானந்தம் அவர்களுடைய கலையாத கனவுகள் என்ற கவிதை நூலும் சொல்லாத கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பு நூலும் கடந்த 19.09.26 அன்று ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினால் மண்டபம் நிறைந்த சபைபயோர் முன்னிலையில் வெளியீடு செய்யப்பட்டிருந்தன.
நடனக் ஆசிரியை திருமதி.ரஜனி சத்தியகுமார் அவர்களின் மாணவியின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான, இவ்வெளியீட்டு விழாவுக்கு,ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்: தலைவரும்,ஜேர்மனி தமிழ்க் கல்விச் சேவையின் தலைவரும்,திருவள்ளுவர் பாடசாலையின் பொறுப்பாளரும் எழுத்தாளரும் என ஒருங்கிணைந்த பன்முக ஆளுமையாளருமான திரு.பொன்.சிறீஜீவகன் அவர்கள் தலைமை வகிக்க,எழத்தாளரும்,மண் சஞ்சிகையின் ஆசிரியரும் தாயக மக்களின் துயர் தடைக்கும் அறப் பணியைச் செய்து வருபவருமான திரு.வைரமுத்து சிவராஜா, எழுத்தாளரும் கவிஞரும் அறிவாலய கல்விநிலையத்தின் தமிழ்மொழி ஆசிரியருமான திரு.அம்பலவன்புவனேந்திரன்,சிறப்பு விருந்தினராக ஒல்லாந்து நாட்டிலிருந்து வருகை தந்த பவானி சற்குணசெல்வம்,எழுத்தாளரும் பன்முக ஆளுமையாளருமான ஏலையா க.முருகதாசன் ஆகியோர் மேடையில் வீற்றிருக்க இரு நூல்களின் வெளியீடுகளும் அரங்கேறின.
விழாவுக்குத் தலைமை தாங்கிய திரு.பொன்.சிறீஜீவகன்,திரு.வைரமுத்து சிவராஜா,விழாவக்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த பவானி சற்குணசெல்வம் ஆகியோர் நூலாசிரியரின் நீண்டகால எழுத்துப் பணி,தமிழ்மொழிக்கான ஆசிரியப் பணி ஆகியவற்றை விதந்துரைத்ததுடன்,நூலாசிரியரின் தந்தையாரும் ஒரு எழுத்தாளர் என்பதையும் குறிப்பிட்டிருந்தனர்.
கலையாத கனவுகள் என்ற கவிதை நூலை விமர்சனம் செய்த திரு.அம்பலவன்புவனேந்திரன், நூலில் காணப்பட்ட கவிதைகளின் உள்ளீட்டுச் சாரசம்சத்தை,சுட்டி நின்ற சமூகத் தன்மைகளை,சொல் நிரைகளில் காணப்பட்ட நவரசங்களை தனக்கே உரித்தான சொல்நயத்துடன்; சபையோருக்கு எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து சொல்லாத கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள ஒவ்வொரு சிறுகதைகளும் என்னென்ன மையக்கருத்தினை உணர்த்துகின்றன,அவற்றை வெளிப்படுத்துவதற்கு ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன,என்பதை எவ்வாறு கதையாசிரியர் கையாண்டிருக்கிறார் என்பதை எழுத்தாளரும்,நடிகருமான ஏலையா க.முருகதாசன் அவர்கள் சபையோருக்கு எடுத்துக்கூறினார்.

இவ்விழாவில் பலரும் வாழ்த்துரையாற்றியிருந்தனர்.இவ்விழாவுக்கு வருகை தந்தோரை வரவேற்று நூலாசிரியரின் கணவரான திரு.பரமானந்தம் அவர்களும்,தாயாருக்கு மகனாக விசேட வாழ்த்தினை செல்வன்.ப.ராம் அவர்களும்லுநன்றியுரையை செல்வி.ப.அபிராமி அவர்களும் ஆற்றினார்கள்.

நூலாசிரியரின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு நண்பர்களின் ஒத்துழைப்பு உபசரிப்பு ஆகிய பண்பினால் ஒழுங்கமைக்கப்பட்ட இவ்விழா சிறப்பாக இடம்பெற்று நிறைவுபெற்றது என்பதில் அதில் பங்குகொண்டவன் என்ற ரீதியில் எனக்குப் பெரும் மகிழ்ச்சியே.
வாசித்தல் அறிவை மேம்படுத்தும்.

![]()