இலங்கை

வெளிநாடுகளில் வாழ்வோருக்கு வாக்குரிமை அளித்தால் புலம்பெயர் தமிழர்களால் ஆபத்துக்கள் ஏற்படலாம்; உதய கம்மன்பில கடும் எதிர்ப்பு

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை வழங்கும் முன்மொழிவுகளுக்கு பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் எதிர்கால தேர்தல் முடிவுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தும் முன்மொழிவுக்கு எதிராக 13 அம்சங்களைக் கொண்ட ஆட்சேபனைக் கடிதமொன்றை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தமது கட்சி சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதேவேளை, தகுதியுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் இலங்கைப் பிரஜைகளின் சந்ததியினருக்கு இலவச குடியுரிமை வழங்கும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் இடம்பெற்றுள்ள ‘உலகளாவிய இலங்கை மரபுரிமைக் குடியுரிமை’ (Global Sri Lankan Heritage Citizenship) திட்டத்தையும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்த இரு முன்மொழிவுகளும் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட்டால், வெளிநாடுகளில் வாழும் சுமார் 60 இலட்சம் பேருக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்கக்கூடும் எனவும், இது விரிவுபடுத்தப்பட்ட வாக்காளர் தொகையில் சுமார் 25 சதவீதமாக அமையக்கூடும் எனவும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக புலம்பெயர்ந்த தமிழர்களின் சில பிரிவுகளுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தனது வலையமைப்புகளைப் பேணி வந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், வெளிநாடுகளில் வாழும் பெருந்தொகையானோருக்கு குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதன் மூலம், பிரிவினைவாதத்திற்கு ஆதரவான குழுக்களின் அரசியல் செல்வாக்கு அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் அரசாங்கத்திற்கான ஆதரவு குறைந்து வருவதால், வெளிநாட்டு வாக்காளர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனது கட்சியின் எதிர்ப்புக்கான ஆறு முக்கிய காரணங்களையும் கம்மன்பில முன்வைத்துள்ளார்.

1. தேர்தல் முடிவுகளில் தாக்கம்: பெருந்தொகையான வெளிநாட்டு வாக்காளர்கள் தேர்தல் முடிவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், நாட்டில் வசிக்கும் வாக்காளர்களின் தேர்தல் செல்வாக்கையும் குறைக்கக்கூடும்.

2. வெளிநாட்டு குடியுரிமை: இலங்கை குடியுரிமையைத் துறந்தவர்களையும், தற்காலிகமாக வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கைப் பிரஜைகளையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

3. வாக்களிப்பின் விளைவுகள்: வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தமது வாக்குகளின் மூலம் தெரிவுசெய்யப்படும் அரசாங்கத்தின் பல்வேறு முடிவுகளால் நேரடியாகப் பாதிக்கப்படுவதில்லை.

4. அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல்: பணவீக்கம், வேலையின்மை, மருந்துகள் மற்றும் உரத் தட்டுப்பாடு போன்ற உள்நாட்டுப் பிரச்சினைகளால் வெளிநாட்டு வாக்காளர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவதில்லை.

5. தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்துதல்: தேர்தல் பிரசாரச் செலவு வரம்புகள் மற்றும் தேர்தலுக்கு முன்னரான கட்டாய 48 மணிநேர அமைதிக் காலத்தை வெளிநாடுகளில் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

6. சமமற்ற பிரசார வாய்ப்புகள்: சில நாடுகளுக்கான விசா கட்டுப்பாடுகள் காரணமாக வேட்பாளர்கள் வெளிநாட்டு வாக்காளர்களிடம் நேரடியாகப் பிரசாரம் செய்வதில் பாதிப்புகள் ஏற்படலாம்.

சர்ச்சைக்குரிய கருத்து

இதற்கிடையில், முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் குறிப்பிட்ட கம்மன்பில, பல தசாப்தகால ஆயுதப் போராட்டத்தின் மூலம் அடைய முயன்ற இலக்குகளை, பிரிவினைவாதக் குழுக்கள் தேர்தல் செல்வாக்கின் ஊடாக அடைந்துகொள்ளக்கூடும் என சர்ச்சைக்குரிய கருத்தொன்றையும் முன்வைத்துள்ளார்.

எனவே, நாட்டின் தேசிய நலன்களுக்கும் இலங்கையில் வசிக்கும் மக்களின் ஜனநாயக விருப்பத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிட்டு, குறித்த முன்மொழிவுகளை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *