கட்டுரைகள்

நடுகைக்காரி 91…  ஏலையா க.முருகதாசன்

வீட்டுக்குள்; நுழைந்த தமையன் தாயிடம் புட்டா அவிக்கப் போறியள் என்று கேட்டுக் கொண்டே தானும் அண்ணியம் இருக்கும் அறைக்குள் நுழைந்து கொண்டிருந்ததைக் கண்ட மங்களம,; அவளின்: மனதோரத்தில், அண்ணைக்கு ஞானம் என்னோடு படிக்கிறவர் என்று தெரியும்,நான் ஞானத்தை ஆரென்றே தெரியாது என்று அண்ணிக்குச் சொல்லிட்டன்,தங்கச்சியோடைதான் ஞானம் படிக்கிறவர் என்று அவர் அண்ணிக்குச் சொன்னாரென்றால் பிரச்சினையாகிவிடுமோ என்று நான் குழம்பத் தொடங்கினேன்.

-மங்களெஸ்வரி

சில விடயங்களை சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக மற்றவர்களுடன் கதைத்து பகிர்ந்து கொள்வதில்லை.சங்கத்தில் தனது அண்ணிக்கு எற்பட்ட சங்கடங்கள்,பார்வதிக்கு சார்பாக சங்க முகாமையாளருக்கும் தலைவருக்கும் அண்ணியைப் பற்றிப் புகார் அளிக்கச் சென்ற தன்னோடு படிக்கிற ஞானனத்தை தமையனுக்குத் தெரியும்.தமையனும் ஞானமும் இன்னும் சில நண்பர்களும் சேர்ந்து சிரமதானப் பவணிகளைச் செய்பவர்கள் மட்டுமல்ல, ஒரு ரீமாக வேறு வேறு ஊர்களுக்னுகுப் போய் அங்குள்ள விளையாட்டுக் குழுக்களுடன் உதைபந்தாட்டம் கிரிக்கெட் கிளிக்கோடு போன்ற போட்டிகளில் ஈடுபடுவதுண்டு.
அண்மையில்கூட எங்களுடைய அயல் கோவிலான ஞானவைரவர் கோவில் வீதியில் இருந்த பத்தைகளை வெட்டி சிரமதானப் பணியில் பன்னாலையில் இருக்கிறவர் என்றாலும் ஞானமும் ஈடுபட்டது மங்களேஸ்வரிக்குத் தெரியும்.
ஞானம் தன்னோடு படிக்கிறவன் என்பது அண்ணிக்குத் தெரியாது.தாயுடன் சங்கத்தின் கடைக்கு துணிவாங்க வந்தவன் பார்வதிக்கு நடந்த அவமானத்துக்குச் சாமட்சியாக ஞானம் சங்க முகாமையாளர்,தலைவர்வரை புகார் செய்யப் போவான் என மங்களேஸ்வரி எதிர்பார்க்கவுமில்லை நினைக்கவும் இல்லை.
வாய்தடுமாறித தங்கச்சியோடை ஞானம் படிக்கிறவன் என்று தமையன் சொல்லிவிட்டால் தன்னைப்பற்றி அண்ணி ஓ நீயும் உடந்தையா என பிழையாக விளங்கிக் கேட்டாலும் கேட்டுவிடுவார்.அண்ணி நல்லவர்தான் ஆனால் எப்பவும் ஒரே மாதிரி இருக்கமாட்டார்.காலமை ஒரு குணம் மத்தியானம் ஒரு குணம் என அவரின் இயல்பு அதுதான். எதுவாக இருந்தாலும் யாராக இரந்தாலும் முகத்துக்கு நேரே நேரிடையாகப் பேசுவார்.இரட்டை அர்த்தத்தில் பேசுபவர்களைத் துப்பரவாக அவருக்கு பிடிக்கவே பிடிக்காது.

அண்ணியை வெளிப் பார்வைக்குப் பார்த்தால் கோபக்காரி மாதிரித்தான் தெரியும்,ஆனால் அந்த கோபத்தின் பின்னால் ஒரு நியாயமும் இருக்கும்.
என்னிடமே ஏன் மங்களம் உன்ரை கொண்ணைக்கு வேற பொம்பிளை கிடைக்காமலா இவளைப் போய்க் காதலிச்சவன் என்று சொந்தக்காரர் தொட்டு அயல்வீட்டுக்கார் வரை சொல்லியிருக்கிறார்கள்.பிடிச்சால் புளியங்கொப்பைப் பிடிக்க வேண்டும் என்றோ பட்டதாரியைப் பிடிச்சிருக்கிறான் போலை என்றும் போகிற போக்கிலை சொல்லிவிட்டுப் போனவர்களும் உண்டு.

எனக்கு அண்ணியின் நடவடிக:கைகளைப் பார்க்கும் போது இராமசாமி மாஸ்ரரின் ஞாபகந்தான் வரும்.அவரும் அப்படித்தான் அசெம்பிளியென்றால் அசெம்பிளியில் ஒரு மாணவன் எப்படி அதன் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அப்படி நிற்க வேண்டும்,வகுப்பிலை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டுமென்பார்.

அண்ணைக்கு என் நிலைமையச் சொல்ல வேண்டுமென்றால் அண்ணி கொஞ்ச நேரந்தன்னும் இந்த இடத்தைவிட்டுச் செல்ல வேணும அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த நான் அண்ணி கவலையிலை முகம் காய்ஞ்சு போய்க் கிடக்குது.முற்றத்து வாளியிலை தண்ணி இருக்கு போய்க் கொஞ்சம் கழுவிப் போட்டு வந்தால்: நல்லது என்று சொல்ல சிலம்பரசியும் நீ சொல்வதும்சரிதான் என தனது முகத்தைக் கழுவ எழுந்து போகிறாள் .

சிலம்பரசி அந்த இடத்தைவிட்டு எழுந்து போய் வாளித்தண்ணீரை முகத்திலடிச்சு கழுவின சத்தத்தை உறுதிப்படுத்திய நான்; வேகமாக ஆனால் மெதுவாக அண்ணை ஞானம் என்னோடை படிக்கிறதெண்டு அண்ணிக்குத் தெரியாது.பார்வதிக்கு ஞானந்தான் சப்போர்ட் பண்ணினவன்,அதாலை அண்ணிக்கு ஞானத்திலையும் ஆத்திரம்,அதாலை, ஞானம் என்னோடை படிக்கிறது என்று சொல்லிப் போடாதையுங்கோ என்று சொல்ல அண்ணை நீ பயப்படாதை நான் சொல்ல மாட்டன் என்கிறார்.

ஏன்ன அண்ணையும் தங்கச்சியுமாக இரகசியம் கதைக்கிறியள் என்று கேட்டபடியே ஈர முகத்துடன் வந்த அண்ணிக்கு துடைப்பதற்கு துவாயைக் குடுத்தபடியே அப்படியொன்றும் இரகசியமில்லையண்ணி அண்ணை சொன்னார் மருமோளைக் கண்டதும் அம்மா மணக்க மணக்க புட்டவிக்கிறா என்று பகிடியாகச் சொல்லிச் சமாளித்தன்.

மாமி எனக்கு ருசியாகப் புட்டவிக்கிறது அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் கொதி போல என்று துடைச்ச துவாயைத் தோளில் போட்டபடியே அடுப்படியை நோக்கிப் போகிறாள் சிலம்பரசி.

அடுப்படிக்குள் நுழைந்த சிலம்பரசி,தேங்காய் துருவும் திருவலையை எடுத்துப் போட்டு அதில் இருந்தபடியே,“மாமி என்ன குழல்புட்டு இவ்வளவு வாசனையாக இருக்குது „என்று கேட்க,அரிசிமாவும் புதுசு,தேங்காய்ப்பூவும் செத்தல் தேங்காயைத் துருவின தேங்காய்ப்பூ இது, „தம்பிக்குத் தூள் பனங்கட்டி போட்டு அவிக்கிற புட்டென்றால் அது அவனுக்கு நல்ல விருப்பம் அது நீராவியிலை வெந்து வர ஒரு வாசம் வரும் அதுதூன் இந்த வாசம் „என்று மாமியார் சொன்னதும் தனது நாசியில் ஏறிய புட்டின் மணத்தை இரசித்தவளின் முகம் திடீரென வாடியது,தலையைக் குனிந்த சிலம்பரசியின் கண்களிலிருந்து கண்ணீர் ததும்பி கண்மடலைவிட் வழிய அதைத் தோளில் போட்டிருந்த துவாயால் துடைத்தாள்.
வேலையில் பிராக்காயிருந்தாலும் மாமியார் மருமகளின் கண்களிலிருந்து கண்ணீர் வந்ததையம் அதனைத் துவாயால் துடைத்ததையும் கீழ்க்கண்ணால் பார்த்தவர் „இப்ப எதற்காகப் பிள்ளை கண்கலங்குகிறாய் யூனியனில் நடந்ததை பெரும் அவமானமாக நினைச்சுக் கலங்காதை.அதை மறக்க முயற்சி செய் வாழ்க்கை என்றால் எப்பவும் ஒரே மாதிரி இருக்காது,மழை காற்று சூறவாளி வெள்ளம் மாதிரி,நோய் நொடி மாதிரி எல்லாம் வாழ்க்கையில் வரத்தான் செய்யும்,எல்லாத்தையம் சகிச்சுக் கொண்டும் தாங்கிக் கொண்டும் வாழத்தான் வேண்டும் கவலைப்படாதை பிள்ளை „என்கிறார் மாமியார்.

„எனக்கு அந்தப் பெட்டையிலை கோவமில்லை,தேவையில்லாமல் தான் ஒரு பெரிய நியாயவாதியென்ற நினைப்பில் அந்தப் பெட்டைக்கு வேலிக்கு ஓணான் சாட்சி என்ற மாதிரி அவள் பின்னாலை போன பொடியனிலைதான் கோவம்.அவன் யார் அந்தப் பொடியன் என்று தெரியேலை எங்கையாவது என்ரை கண்ணிலை படாமலா இருக்கப் போகிறான் அப்ப தெரியும் இந்த சிலம்பரசி யாரென்று „என்று முகத்தில் கோபம் தெறிக்க சிலம்பரசி சூடாகச் சொல்கிறாள்.

ஞானம் தனது மகனின் சினேகிதன் என்று தனபாக்கியத்துக்குத் தெரியுமாகையால் அந்தத் தம்பியா என்று தனபாக்கியம் விளிக்க,மாமி அவனைத் தம்பியா என்று விளிக்கிறாவே என்று மாமியாரை வியப்புடன் பார்த்து சிலம்பரசி என்ன மாமி அவனைத் தம்பியென்று பாசமாகச் சொல்கிறியள் என்று கேட்டதும்,பிள்ளை மருமகளே எமது எதிரிகளாக இருந்தாலும் நாம் அவர்களைப் பற்றி மரியாதையாக கதைப்பதில் எமக்கென்ன குறை வந்துவிடப் போகுது.அத்தத் தம்பி எங்கடை மகன்ரை என்று சொல்லும் போது அதைக் கேட்டுக் கொண்டே அடுப்படிக்குள் கால் வைத்த முருகதாசனும் மங்களேஸ்வரியும் தாயார் ஞானத்தை எங்கடை குடும்பத்துக்கே தெரியும் என்று சொல்லப் போகிறாரே என்ற பதட்டத்துடன் அதில் முருகதாசன் தங்களை தாய் நிமிர்ந்து பார்த்த அந்தச் சில விநாடிகளுக்குள் ஞானம் தங்களுக்குத் தெரிஞ்சவர்தான் என்றதைச் சொல்ல வேண்டாம் என்பதை தாய்க்கு உணர்த்த தனது வலது கையால் தனது வாயைப் பொத்தித் தலையை இடது வலதாக ஆட்டுகிறான் .

மகன் என்ன சொல்ல வருகிறான் என்பதைப் புரிஞ்சு கொண்ட தனபாக்கியம் சடாரென்று சொல்ல வந்ததை நிறுத்த,அதே நேரம் தனது கணவனும் மைத்துனியும் அடுப்படிக்குள் வருவதைத் தலையைத் திருப்பிப் பார்த்துக் கொண்டே மாமி அவனைப் பற்றி இப்ப ஏதோ சொல்ல வந்தியள் சட்டென்று நிற்பாட்டிப் போட்டியள் உங்களுக்கு அவனைத் தெரியுமா என்று சிலம்பரசி கேட்க ச்சாச்சா ஏதோ ஞாபகப் பிராக்கிலை ஏதோ சொல்லிட்டன் பிள்ளை அதை விடு, அதையே நினைச்சுக் கொண்டிருக்க வேண்டாம்,தேவையில்லாத யோசனைகளும் முதுகிலை நனைச்சுச் சுமக்கிற பாரம் மாதிரித்தான் இப்ப சாப்பிடுவம்,மங்களம் அப்பாவை கூப்பிடு என்று தாய் சொல்லி முடிக்க முந்தி முருகதாசன் அப்பா வாங்கோ சாப்பிட என்று கூப்பிடுகிறான்.

முருகதாசன் சிலம்பரசியைக் கல்யாணம் செய்ததற்கு பிறகு ஒவ்வொரு நாளும் பெற்றோரிட்டை வந்து போனாலும் தாய் கொடுக்கும் சாப்பாட்டை சிலம்பரசியின் வீட்டுக்குக் கொண்டு போய் மனைவியுடன் சேர்ந்து சாப்பிடுவது வழக்கம்.தாயோ தகப்பனோ தங்கச்சியாரோ இஞ்சை சாப்பிட்டுப் போ என்று வற்புறுத்தவது இல்லை,மகன் சந்தோசமாயிருந்தால் அது போதும் என்று தாயும் தகப்பனும் நினைச்சுக் கொள்ளுவினம்.

அதனால் தகப்பனை ஆசைதீரக் கூப்பிட்டான்.எல்லோரும் அடுப்படிக்குள் இருந்த பலகைகளைப் போட்டுச் சாப்பிடத் தொடங்கினார்கள்.மங்களேஸ்வரிக்கு பலகை கிடைக்கவில்லை தடுக்கை எடுத்துப் போட்டு சாப்பிடத் தொடங்கினாள்.
வாலையிலையிலே அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.மத்தியானம் சோற்றுக்குச் சமைத்த விளைமீன் குழம்பு,முருக்கங்காயும் பிலாக்கொட்டையம் போட்ட கூட்டுக்கறி,பச்சை மிளகாயச் சம்பல் என குழல் புட்டுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அப்பொழுது மாமி கறியளும் சம்பலும் புட்டும் அருமையாயிருக்கு முருக்கங்காயும் பிலாக்கொட்டையம் போட்ட கறி நல்ல ருசியாயிருக்கு என்றவள்,இப்படியாக ஒன்றாக இருந்து சாப்பிடுறது சந்தோசமாயிருக்கு என்ற சொன்னவள் இப்படியான பாசமான குடும்பத்துடனா நான் முரண்டு பிடிச்சுக் கொண்டிருந்தேன் என்றதை நினைச்சு மீண்டும் கண்கலங்கத் தொடங்க சிலம்பரசிக்கு இடது பக்கத்தில் உட்கார்ந்திருந்த மங்களம் அண்ணி என்ன அண்ணி சின்னப் பிள்ளை மாதிரி அழுகிறியள் அழாமல் சாப்பிடுங்கள் என்கிறாள்

(தொடரும்….)

குறிப்பு:இந்தக் கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தடுக்கு என்பது இலங்கையில் பல ஊர்களில் பனையோலையால் ஒரு மீற்றர் சற்சதுரத்தில் பாய்போல இழைத்து அதனை குழந்தைகளை வளர்ப்பதற்கு பயன்படுத்துவார்கள்.குழந்தைகள் தவழ்வதற்கு முன்னர் அவர்களின் உடலில் எண்ணை பூசுகிற நாட்களிலும் தடுக்கிலே வளத்திவிடுவார்கள்.எங்கள் வீட்டிலும் இருந்தது.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *