முச்சந்தி

இலங்கைக்கு சீனா எப்போதும் உதவும்; தயாராக இருக்கிறது என்கிறார் சீனத் தூதுவர்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான தொழிற்துறை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக அனைத்து சந்தர்ப்பங்களிலும் கைகொடுக்க சீனா தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங் தெரிவித்தார்.

கண்டி, பல்லேகலையில் அமைந்துள்ள ‘கெலன் லைஃப்சயின்சஸ்’ (Kelun Lifesciences) மற்றும் ‘செலோஜென்’ (Celogen) ஆகிய நிறுவனங்களுக்கு கள விஜயம் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

“இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான தொழிற்துறை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு சீனா எப்போதும் உறுதுணையாக நிற்கும். சீனா எப்போதும் இலங்கையின் வளர்ச்சியை விரும்பும் ஒரு நாடு என்பதால், அந்த வளர்ச்சிக்காகக் கல்வி மற்றும் நவீன தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இலங்கையில் இயங்கி வரும் இதுபோன்ற தொழிற்துறை நிறுவனங்கள் மூலம் பெருமளவிலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். எனவே, இத்தகைய தொழில்களை மேலும் விரிவுபடுத்தி வளர்ச்சி பெறச் செய்வதற்கு சீனா தனது முழு ஆதரவையும் வழங்கும். அத்துடன், இதுபோன்ற முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக இலங்கை அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை சீன அரசாங்கம் பெரிதும் பாராட்டுகிறது” என்றார்.

சீனா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கூட்டுப் பங்களிப்புடன் பல்லேகல முதலீட்டு வலயத்தில் இயங்கி வரும் இந்நிறுவனங்கள், நாட்டின் முன்னணி சேலைன் உற்பத்தி நிறுவனங்களாகும். இலங்கையிலுள்ள மருத்துவமனைகளுக்குத் தேவையான சேலைன் மருந்துகளை விநியோகிக்கும் இரு முக்கிய நிறுவனங்களாகவும் இவை விளங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *