விடுதலை செய்யப்பட உள்ள பணய கைதிகளில் 3 பேரின் பெயர் பட்டியலை வெளியிட்ட ஹமாஸ்

இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்கு மேல் நீடித்து வந்தது. இந்த போரை நிறுத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. அதன் அடிப்படையில், காசா முனையில் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது.

அதேபோல், காசாவில் தாக்குதலை நிறுத்தவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. போர் நிறுத்தம் மொத்தம் 3 கட்டங்களை கொண்டது.போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.

இந்த போர் நிறுத்தம் மதியம் 12 மணிக்கு (இஸ்ரேல் நேரப்படி காலை 8.30 மணிக்கு) அமலுக்கு வரவிருந்தது. போர் நிறுத்தத்தின் முதல் நாளில் இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டும். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் 90 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும். அதேவேளை, ஒப்பந்தப்படி இரு தரப்பும் விடுதலை செய்யப்பட உள்ள நபர்களின் பெயர் விவரங்களை 24 மணிநேரத்திற்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்.

அதன்படி, இஸ்ரேல் விடுதலை செய்ய உள்ள 90 பாலஸ்தீனியர்களின் பெயர் விவரத்தை நேற்றே வெளியிட்டுவிட்டது. ஆனால், ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டிய இஸ்ரேலிய பணய கைதிகளின் விவரங்கள் மதியம் 2 மணிவரை (இஸ்ரேல் நேரப்படி 10.30 மணி) வெளியாகவில்லை.

இதனால், போர் நிறுத்தம் அமலுக்கு வராமல் இருந்தது. இதையடுத்து, காசா முனையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 108 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில், சுமார் 2 மணிநேர தாமதத்திற்குபின் விடுதலை செய்யப்பட உள்ள இஸ்ரேலிய பணய கைதிகள் 3 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, பணய கைதிகளான ரோமி கொனின் (வயது 24), ஏமி டமாரி (வயது 28), டோரன் ஸ்டான்பிரிசர் (வயது 31) ஆகிய 3 பேரை இன்று விடுதலை செய்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. விடுதலை செய்யப்பட உள்ள பணய கைதிகள் 3 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் தற்போது வெளியிட்டுள்ள நிலையில் மதியம் 2.45 மணி முதல் (இஸ்ரேல் நேரப்படி காலை 11.15 மணி) முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *