சிறையிலுள்ள விடுதலைப் புலிகள் அப்பாவிகள்
சிறையிலுள்ள விடுதலைப் புலி சந்தேக நபர்கள் அப்பாவிகளே, அவர்களுக்கு நீதியை வழங்க அநுரகுமார அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அயல் வீட்டார் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒரு வாரகாலமாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த உதயங்க வீரதுங்க வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், நுகேகொட நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நான் ஒரு வாரகால விடுமுறையில் சிறையில் இருந்தேன். கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் இந்த காலத்தில் ராஜபக்ஷவாதியென்றால் அதனை காட்டிக்கொள்ள வேண்டாம். அப்படியென்றால் ஒருவாரத்திற்கு விளக்க மறியல்தான்.
அநுரகுமாரவின் வேலைத்திட்டங்களை பார்ப்பதற்காகவே மக்கள் ராஜபக்ஷக்களுக்கு அதிகாரத்தை வழங்கவில்லை. இவர்களின் வேலை பேர வாவியில் குப்பை அள்ளுவதாக இருக்கக் கூடாது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
வடக்கு மக்கள் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புடனேயே அநுரகுமாரவுக்கு வாக்களித்தனர். குறைந்தது 16 வருடங்களாக விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்று கூறி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 பேருக்கு நியாயத்தை வழங்குங்கள். அவர்கள் அன்று பிரபாகரனின் உத்தரவுகளை செயற்படுத்தினர். இந்நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு 16 வருடங்களாக வழக்குத் தொடர முடியவில்லையென்றால் இப்போது அவர்கள் புனர்வாழ்வடைந்துள்ளனர் என்றால் ஏன் விடுதலை செய்ய முடியவில்லை. நான் விடுதலைப் புலி சந்தேக நபருடனேயே சிறையில் உறங்கினேன். அவர்களிடம் இனவாதம் இருந்திருந்தால் என் கழுத்தை நெரித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. தினமும் காலையில் தேநீர் வழங்கினர். எந்தளவு அப்பாவிகளாக அவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுங்கள்.
இதேவேளை 600 பேர் இருக்க வேண்டிய சிறையில் மூவாயிரம் பேர் இருக்கின்றனர். இரண்டு மலசலக் கூடங்களே உள்ளன. இது தொடர்பில் கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்தில் நடவடிக்கை எடுங்கள். சிறையில் இருப்பவர்களும் மனிதர்களே. அங்குள்ளவர்களுக்கு வீட்டாருடன் தொலைபேசியில் உரையாடுவதற்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுங்கள்.
![]()