யுத்த கால பாரிய மனித உரிமை மீறல்கள் பொறுப்புக் கூறலுக்கு அநுரவும் தயாரில்லை
யுத்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக் கூறப்படுதல் அவசியம் என்பதை, இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் ஆதரிக்கவில்லை என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த அறிக்கையில் ( 2025) தெரிவித்துள்ளது
இது தொடர்பில் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திலிருந்து, தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட வேளை இலங்கையின் அரசியல் பாதைமாறியது.
அநுரகுமார திஸாநாயக்க அதிகளவு சமத்துவமான பொருளாதார கொள்கைகளை முன்வைத்தார். ஊழலிற்கு எதிராக போராடுவது பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்பது உட்பட நீண்டகால மனித உரிமை கரிசனைகளிற்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.
எனினும் முன்னைய இலங்கை அரசாங்கங்கள் போல 1983 முதல் 2009 வரையான காலப்பகுதியில் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களிற்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்பதை அவர் ஆதரிக்கவில்லை.
பொறுப்புக்கூறலும் நீதியும்.
இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை கண்காணித்து அவை குறித்து மதிப்பிடுவதற்கான, எதிர்கால பொறுப்புக்கூறல் செயற்பாடுகளிற்காக இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இழைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மேலும் ஒருவருடத்திற்கு நீடித்திருந்தது.
இதில் திசநாயக்கவின் கட்சியான ஜேவிபியின் கிளர்ச்சியின்போது இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களும் அடங்கும். இந்த கிளர்ச்சி பாதுகாப்பு படையினர் இழைத்த ஆயிரக்கணக்கான கொலைகள் மற்றும் பலவந்தமாக காணாமல்போகச் செய்தல் ஆகியவற்றுடன் 1980 களின் பிற்பகுதியில் முடிவிற்கு வந்தது.
1983 முதல் 2009 வரை இடம்பெற்ற அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையிலான உள்நாட்டு போரில் இரண்டு தரப்பினரும் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர்.
எனினும் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இந்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதுடன் ,பாதுகாப்பு படைகளில் உள்ள குற்றமிழைத்தவர்களை பாதுகாத்தனர்.
கடந்த வருடம் மே மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம், தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கடும் கண்டனத்துடனான அறிக்கையொன்றை வெளியிட்டதுடன்,யுத்த கால மீறல்களிற்கு தீர்வைக் காண்பதற்காக சர்வதேச விசாரணைகள் வழக்கு தொடரல்,உட்பட ஏனைய பொறுப்புக் கூறல் நடவடிக்கைகளிற்கு அழைப்பு விடுத்திருந்தது.
யுத்தகால அநீதிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்னைய விக்கிரமசிங்க அரசாங்கம் உண்மை நல்லிணக்கம் ஐக்கியம் ஆகியவை குறித்த ஆணைக்குழு என்ற மற்றுமொரு அமைப்பை உருவாக்கும் யோசனையை முன்வைத்தது.இது முன்னைய தவறுகளை மீண்டும் இழைக்கும் விதத்திலானதாக காணப்பட்டது.மேலும் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை புறக்கணித்ததுடன் ,இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளை பூர்த்தி செய்யும் வலுவற்றதாக காணப்பட்டது.
விக்கிரமசிங்க அரசாங்கம் உண்மை மற்றும் பொறுப்புக் கூறலிற்காக குரல்கொடுப்பவர்களை தொடர்ந்தும் இலக்குவைத்தது.
மேலும் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது உயிர்நீத்த தமிழர்களை நினைவு கூருபவர்களையும் இலக்குவைத்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()