ரத்த குளியல்!” மருத்துவர்களுடன் சீக்ரெட் மீட்டிங்! புதின் குறித்து கிளம்பும் புதுப்புது மர்மங்கள்

மாஸ்கோ: உக்ரைன் போருக்கு முக்கிய காரணமாகக் கருதப்படும் ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்து சில முக்கிய தகவல்களை அந்நாட்டின் புலனாய்வு ஊடகம் வெளியிட்டுள்ளது.

உக்ரைன் போர் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போர் ரஷ்ய அதிபர் புதினின் சுயநலத்திற்காக மட்டுமே நடைபெற்று வருவதாகப் பரவலாக விமர்சனம் முன் வைக்கப்பட்டு வருகிறது.

பொதுவாகவே மர்மங்கள் நிறைந்த மனிதானாகவே புதின் அறியப்படுகிறார். அவரது குடும்பம், உடல்நிலை குறித்த தகவல்கள் எதுவுமே வெளிப்படையாகப் பொதுவெளியில் வெளியிடப்படுவது இல்லை.

ரஷ்ய அதிபர் புதின் இந்தச் சூழலில் ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்து அந்நாட்டின் புலனாய்வு ஊடகமான ப்ரோக்ட் சில முக்கிய செய்திகளை வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அதிபர் புதின் தனது உடல்நிலையில் அதிக அக்கறை கொண்டுள்ளார் என்றும் மாஸ்கோவின் மத்திய மருத்துவமனை மருத்துவர்களுடன் சோச்சி நகருக்கு அடிக்கடி பயணம் செய்கிறார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் அடிக்கடி சோச்சி நகருக்குப் பயணம் செய்வதால், அவர் தங்குவதற்கு ஏற்ப அங்குள்ள விடுதியுடன் மருத்துவமனை நிர்வாகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ரகசிய சந்திப்பு

இந்த ஒப்பந்தத்தின்படி 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் புதின் 5 முறை அங்கு மருத்துவர்களுடன் சென்று இருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு புதின் அங்கு 9 முறை சென்றதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல கடந்த சில ஆண்டுகளாகவே புதினை அடிக்கடி சில குறிப்பிட்ட மருத்துவர்கள் சந்தித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகப் புற்றுநோய் நிபுணர்-அறுவை சிகிச்சை நிபுணர் எவ்ஜெனி செலிவனோவ் என்பவர் புதினை அதிக முறை சந்தித்துள்ளார். கடந்த 2016 முதல் 2020 வரை அவர் 35 முறை புதினை சந்தித்துள்ளார். இந்த 4 ஆண்டுகளில் எவ்ஜெனி செலிவனோவ் புதின் உடன் மொத்தம் 166 நாட்கள் செலவிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

என்ன தகவல்

மேலும், காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர் ஒருவரும் புதினை அடிக்கடி சந்தித்துள்ளார். தைராய்டு நோய்கள் மற்றும் புற்றுநோய்களைக் கண்டறிவதில் இந்த மருத்துவர்கள் முதன்மையானவர்கள் என்று என்றும் ப்ரோக்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த செப். மாதம் புதின் திடீரென தன்னை தானே 16 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். அப்போது நடைபெற்ற டுமா தேர்தலில் கூட அவர் ரிமோட் மூலம் வாக்களித்திருந்தார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது புதினுக்கு சிக்கலான தைராய்டு நோய் ஏற்பட்டு இருக்கலாம்.

ரத்த குளியல்

அதேபோல ரஷ்யாவின் மற்றொரு செய்தி நிறுவனமான மெடுசாவும் புதின் உடல்நிலை குறித்தும் சிகிச்சை முறை குறித்தும் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் புதின் மருத்துவ முறைகள் மட்டுமின்றி, அறிவியலுக்கு ஒப்பாத சில மருத்துவ முறைகளிலும் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது குறிப்பாக மான் கொம்புகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையில் திரவத்தில் புதின் குளித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோகுவின் பரிந்துரைப்படியே புதின் இந்த வகையில் குளியலை எடுத்து வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

என்ன காரணம்

2000களின் நடுப்பகுதியில், ஷோகு பரிந்துரை அடிப்படையில் புதின் முதல்முறையாக இந்த பழகத்தை தொடங்கியுள்ளார். சிகிச்சையின் ஒரு பகுதியாக அல்தாய் என்ற பகுதியில் வசிக்கும் சிவப்பு மானின் கொம்புகளிலிருந்து எடுக்கப்பட்ட ரத்தம் கலந்த திரவத்தில், இப்படிப் பல முறை புதின் குளித்துள்ளார். மான் கொம்புகளில் இருந்து எடுக்கப்படும் இந்த திரவம் இருதய அமைப்பை மேம்படுத்தும் என்றும் சருமத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் என்றும் நம்பப்படுகிறது. இப்படி உயிருள்ள மான்களின் கொம்புகளை வெட்டுவது மனிதனின் விரல் நகங்களை அகற்றுவதற்கு ஒப்பானது என்று விலங்கு நல ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்,

ரஷ்ய அரசு

இருப்பினும், இந்த தகவல்கள் குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை தரப்பில் இருந்தோ ரஷ்ய அரசு தரப்பில் இருந்தோ எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. மேலும், ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்தும் சிகிச்சை முறை குறித்தும் தகவல்களை வெளியிட்ட ப்ரோக்ட் மற்றும் மெடுசா செய்தி நிறுவனங்கள் அந்நிய நாடுகளுடன் சேர்ந்து சதி செய்வதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button