இருட்டும் வெளிச்சமும்!… ( சிறுகதை ) … சங்கர சுப்பிரமணியன்.

![]()
கண்களைத் திறக்க முடியவில்லை. எங்கும் இருட்டு. கருமை சூழ்ந்திருக்கிறது. கை கால்களை அசைக்க முடியவில்லை. என்னைச்சுற்றி பலர் நிற்பதுபோல் ஓர் உணர்வு. ஏதேதோ பேசிக் கொள்கிறார்கள். ஆனால் தூரத்தில் பேசுவது போன்று கேட்கிறது. யாரோ என் கண்களின் கீழ்ப் பகுதியை கீழ்நோக்கி இழுத்துப் பார்க்கிறார். நெஞ்சில் ஏதோ ஊர்வதுபோல் தெரிகிறது. படுக்கையில் கிடக்கும் என்னை யாரோ ஒருவர்
திருப்புகிறார். முதுகிலும் ஏதோ ஊர்கிறது. இது மருத்துவர் வேலையாகத்தான் இருக்கும். என் யூகம் சரிதான்.
கிணற்றுக்குள் இருந்து கேட்பதுபோல் ஒரு குரல்,
“என்ன டாக்டர்?”
“…………….”
மருத்துவர் பதிலேதும் சொல்லவில்லையா? அல்லது என் காது கேட்க மறுக்கிறதா?
“முக்கியமானவங்களுக்கு சொல்லிவிடலாமா?”
“கொஞ்சம் பார்க்கலாம்”
திரும்பவும் தூரத்திலே இருந்து இருவர் பேசுவது கேட்கிறது. காது கேட்கத்தானே செய்கிறது. அது ஏன் தூரத்தில் இருந்து பேசுவதுபோல் கேட்கிறது? இருட்டாக இருப்பதற்கும் கைகால்களை அசைக்க முடியாமல் இருப்பதற்கும் பேசமுடியாமல் போனதற்கும் ஒப்பிடும்போது தூரத்தில் பேசுவது மாதிரியாவது காது கேட்கிறதே என்று மனம் ஆறுதல் அடைந்தது.
மனம் ஆறுதல் அடைந்தாலும் எதை எதையெல்லாமோ நினைக்கிறது. சம்பந்தம் இல்லாமல் இப்போது பல நினைவுகள் அடுக்கடுக்காய் வருகின்றன. நான் பிறந்த ஊர், நான் படித்து வளர்ந்த என் தாத்தா ஊர், அங்கு காலையில் குளிக்க வயல் வரப்புகளில் நடந்து போவது, அப்போது பஞ்சாயத்து போர்டு அலுவலகத்திலிருந்து
ஓலிபெருக்கிமூலம் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்கள்,
காதில் விழுந்து நெஞ்சில் பதிந்துவிட்ட அப்பாடல்கள் எல்லாம் என் நினைவுக்கு
வருவது இவ்வாறாக ஏன் நினைவுகளெல்லாம் வலம் வருகின்றன.
“இன்னும் தாமதிக்க வேண்டாம். சொல்ல வேண்டியவங்களுக்கு எல்லாம்
சொல்லி விடலாம்”
“அது சரி. நடக்க வேண்டியத பார்ப்போம். இன்னும் ஒன்றிரண்டு நாளில் முடிந்து விடும்.”
என்ன இது தூரத்தில் பேசுவது போல் இதுவரை கேட்டது இப்போது அருகில் பேசுவதுபோல் கேட்குது. ஆனால் சத்தம் கேட்காமல் ஏதோ இரகசியம் பேசுவதுபோல் கிசுகிசுப்பாய் கேட்கிறதே? அப்படி என்ன ரகசியம்? இன்னும் ஒன்றிரண்டு நாளில் அப்படி என்ன முடிந்துவிடும்? அல்லது எனக்குத்தான் காதும் சரியாக கேட்கவில்லையோ?
எப்பவுமே இருட்டாக இருப்பதால் பகல் எது இரவு எது என்பதே தெரியவில்லை. ஆள் நடமாட்டமும் சத்தமும் இல்லாவி்ட்டால் இரவென்றும் ஆள்நடமாட்டமும் சத்தமும் கேட்டால் பகலென்றும் குறிப்பால் உணரமுடிகிறது. இந்த காதும் எவ்வளவு நாட்கள் கேட்குமோ? இந்த நினைவுகளான உணர்வு எவ்வளவு நாள் இருக்குமோ?
நினைவலைகள் தொடர்ந்தன. நான் பெங்களூர் வந்து படித்து பணிபுரிந்தது, திருமணம் நடந்தது, குழந்தைகள் பிறந்தது என்று வந்து போனது. நான் சந்தித்த பெண்களும் ஆண்களும் கனவில் வந்தனர். நெஞ்சை கவர்ந்த பெண்களை நினைக்கும்போது அந்த நாட்களெல்லாம் வரமறுத்ததில்லை. வெளிநாடு வந்தது பிள்ளைகளெல்லாம் படித்து பணிபுரிந்தது அவர்களுக்கும் திருமணமாகி பேரக் குழந்தைகள் பிறந்தது வரை ஏன் திரைப்படம் போல் வந்து போகிறது?
தமிழிலும் ஆங்கிலம்திலும் நான் எழுதியது தமிழ்ச்சங்கங்களில் தொண்டான்றியது எனக்கு கிடைத்த தமிழ்ப்பற்றாளர்கள் எல்லாம் என் நினைவுக்கு வந்தனர். என்னை கௌரவப்படுத்திய அன்பர்களெல்லாம் இப்போது ஏன் நினைவுக்கு வருகின்றனர். தமிழ் என்றால் ஏன் என்கண்களில் கண்ணீர் வருகிறது?மறுபிறப்பு இருக்குமா? திரும்பவும் நான் தமிழ்நாட்டில் பிறப்பேனா? இளமையில் வறுமையில் வாடிய வாழ்க்கை என்றாலும் எனக்குப் பிடித்த இந்த வாழ்க்கை திரும்பவும் கிடைக்குமா என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது.
திரும்பவும் தமிழனாகப் பிறப்பேனா? எத்தனையோ தமிழ்த் தலைவர்கள் இருந்தாலும் தலைவர் பிரபாகரன் மட்டும் ஏன் இப்போது என் கண்களில் தெரிகிறார்? தமிழ் ஈழம் கிடைக்குமா? தமிழனுக்கென்று ஒரு நாடு இவ்வுலகில் எங்காவது மலருமா?
கடலில் மிதக்கும் கப்பல்களும் வானில் பறக்கும் விமானங்களும் ஆகாயத்தில் ஏவப்படும் செயற்கைக் கோள்களும் தமிழ் எழுத்துக்களை சுமந்து செல்லுமா?
சில கோடி மக்களைக் கொண்ட இனமெல்லாம் தலை நிமிர்ந்து வாழும்போது பலகோடி மக்களைக் கொண்ட என் இனமும் தலை நிமிர்ந்து நிற்குமா? அல்லது தனித்தனி தீவுகளாய் நின்று அழிந்து போகுமா?
இனப்பற்றாளர்கள் அனைவரும்
நாடுகடந்து தழுவி நம்மினத்தை பெரிய தேசிய இனமாக பறைசாற்றி பார்புகழ மீண்டும் எழுவோமா?
என்னவாயிற்று எனக்கு? மூச்சு விடமுடியவில்லை, என் வாயில் எதையோ ஊற்றுகிறார்கள். நீ ஊற்று நீ ஊற்று என்று ஒவ்வொருவராக சொல்ல ஒவ்வொருவராக என் வாயில் எதையோ ஊற்ற அது கடைவாய் வழியே வழிந்தோடுவதை என்னால் உணரமுடிகிறது. என் மனைவி குழந்தைகளெல்லாம் என்மீது விழுந்து அழுகிறார்கள். என் பேரக்குழந்தைகள் உறவுகளெல்லாம் என்னைச்சுற்றி நின்று அழுவது கேட்கிறது.
திடீரென நெஞ்சை அடக்கிறதே? மூச்சுவிட முடியவில்லை. நெஞ்சு வலிக்கிறதே? ஒருவேளை கடவுள் இல்லை என்று நான் சொன்னதால் அவர் இப்போது
என்னை பழிவாங்குகிறாரா? இருக்காது. ஒருவேளை அப்படியே இருந்தாலும் இவர்கள் சொல்வதுபோல் அவர் கருணை இருப்பவராய் இருந்தால் பழிவாங்கமாட்டார் என்று உணர்ந்தேன்.
வலி பொறுக்கமுடியாமல் நெஞ்சை உயர்த்தி இறக்கும்போது எனது நெஞ்சின் மேல் கைவைத்து அழுத்தி வேகமாக தேய்த்து விடுகிறார்கள். ஏதோதோ சொல்கிறார்கள் அழுகிறார்கள. எங்கோ வெகுதொலைவில் பேசுவதுபோல் கேட்கிறது. படிப்படியாக பேசுவதோ அழுவதோ எதுவுமே கேட்கவில்லை.
நெஞ்சு வலிக்கிறதா என்றுகூட தெரியவில்லை. அந்த வலியை உணரவும் முடியவில்லை.யாரும் என்னை எங்கும் அழைத்துச் செல்லவில்லை. ஆனால் நான் மட்டும் தனியாக எங்கோ போகிறேன். அட என்ன அதிசயம்? கண்கள் தெரிகிறதே.
ஆனால் எதையும் பார்க்க முடியவில்லை. வீடு வாசல் மனைவி மக்கள் சுற்றம் நட்பு பணம் நகை பட்டம் பதவி புகழ் எல்லாம் எங்கே சென்று ஒளிந்த கொண்டன.
வெளிச்சம்…வெளிச்சம்… எங்கும் பெருவெளிச்சம்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()