முச்சந்தி

செம்மணிப் புதைகுழியில் இரண்டு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் மீட்பு; மேலும் 6 எலும்புக் கூடுகளும் மீட்பு 

இரண்டு குழந்தைகளின் மனித என்பு தொகுதிகள் உள்ளடங்கலாக எழு மனித என்பு தொகுதிகள் செம்மணி மனித புதைகுழியில் இருந்து நேற்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 16ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், ருகுணு பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட குழுவினர் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.

இதன்போது புதிதாக 8 மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டு 7 மனித என்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மொத்தமாக 283 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே 279 மனித என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அகழ்வில் சான்றுப் பொருட்களாக ஒரு மனித என்பு தொகுதி நல்லடக்கம் செய்யப்பட்டதாக கருதப்படும் நிலையில் பிரேதப் பெட்டியினுடைய சில பாகங்கள் மீட்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதியில் ஒரு பகுதியை ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் அகழ்வு செய்து வரும் நிலையில் அப்பகுதியில் 3 மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன் மேலும் சில என்பு தொகுதிகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அவை சுத்தப்படுத்தப்பட்ட பின்னர் இலக்கமிடப்படும் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button