முச்சந்தி

மத்திய கிழக்கில் ஈரானின் தாக்குதல்கள்: அமெரிக்க ஆதிக்கத்திற்கு சவாலா?….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(பிபிசி மேற்கொண்ட ஆய்வில் பயன்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் படங்களும் காணொளி ஆதாரங்களும், போர் தொடங்கியதிலிருந்து ஈரான் குறைந்தது இருபது அமெரிக்க இராணுவத் தளங்களைச் சேதப்படுத்தியுள்ளதாகக் காட்டுகின்றன. மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் இருந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது)
 
 
இந்த வருடம் மார்ச்சில் வளைகுடா போர் தொடங்கியதிலிருந்து ஈரான் இருபது அமெரிக்க இராணுவத் தளங்களை பாரியளவில் சேதப்படுத்தியுள்ளது என பிபிசி (BBC) ஆய்வு செய்த செயற்கைக்கோள் படங்களும் காணொளிகளும் வெளியாகியுள்ளன. இது, பகிரங்கமாக மேற்குலக ஊடகங்கள் ஒப்புக் தெரிவித்ததை விட இந்தத் தாக்குதல்கள் மிகவும் விரிவானவை என்பதை உணர்த்துகிறது. பெப்ரவரி மாத இறுதி முதல், ஈரான் மத்திய கிழக்கில் உள்ள எட்டு நாடுகளில் உள்ள முக்கிய வசதிகளைக் குறிவைத்துத் தாக்கியுள்ளது. இதனால், அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் ரேடார்களுக்கு மில்லியன் கணக்கான டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
 
மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் இருந்திருக்கலாம் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. போர் தொடங்கியதிலிருந்து ஈரான் குறைந்தது இருபது அமெரிக்க இராணுவத் தளங்களைச் சேதப்படுத்தியுள்ளதாகக் காட்டுகின்றன. இந்த தகவல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இதுவரை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் பகிரங்கமாக ஒப்புக்கொண்ட சேதங்களை விட உண்மையான தாக்குதல்களின் பரவலும் தீவிரமும் அதிகமாக இருந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. குறிப்பாக பிப்ரவரி மாத இறுதியிலிருந்து ஈரான் தனது தாக்குதல்களை விரிவுபடுத்தி, மத்திய கிழக்கின் எட்டு நாடுகளில் அமைந்திருந்த அமெரிக்க இராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு அழித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களின் விளைவாக, அமெரிக்காவின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள், எரிபொருள் நிரப்பும் இராணுவ விமானங்கள், ரேடார் கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் பல்வேறு ஆதரவு கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. பல மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இராணுவ உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. இது வெறும் பொருளாதார இழப்பு மட்டுமல்ல. அமெரிக்காவின் உலகளாவிய இராணுவ ஆற்றலின் முக்கிய அங்கமாக விளங்கும் மத்திய கிழக்குப் பிராந்திய தளங்களின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளையும் எழுப்புகிறது. உலகின் மிகவும் முன்னேறிய பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்ட நாடாக அமெரிக்கா கருதப்படுகின்ற நிலையில், ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் அவற்றின் பலவீனங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன.
அதேவேளை இந்தத் தாக்குதல்கள் ஈரானின் இராணுவத் திறன்கள் குறித்த புதிய மதிப்பீடுகளுக்கும் வழிவகுக்கின்றன. ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்), மற்றும் ஒருங்கிணைந்த தாக்குதல் உத்திகள் மூலம் ஈரான் தனது தாக்கத்தைப் பரவலாக செலுத்தும் திறனை நிரூபித்துள்ளது. இதன் மூலம், நேரடி மோதல்களைத் தவிர்த்தபடியே எதிரிக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தும் “சமச்சீர் அற்ற போர்” (Asymmetric Warfare) முறையில் ஈரான் அதிக நிபுணத்துவம் பெற்றிருப்பது தெளிவாகிறது.
அதேவேளை, இந்த நிலைமை மத்திய கிழக்கில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை தொடர்பான அச்சங்களையும் அதிகரித்துள்ளது. அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தைத் தொடர்ந்து வலுப்படுத்த முயல்கின்ற வேளையில், ஈரானும் தனது பிராந்திய செல்வாக்கை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் விளைவாக, இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடையும் அபாயம் நிலவுகிறது.
தற்போது வெளியாகி உள்ள இந்த அறிவிப்பு மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மறைமுகப் போராட்டத்தின் உண்மையான பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது. அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. மாறாக, பிராந்திய அதிகாரச் சமநிலையை மாற்றக்கூடிய ஒரு நீண்டகால மூலோபாயப் போட்டியின் பகுதியாகவே அவற்றைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்த மோதலின் அடுத்த கட்டம் மத்திய கிழக்கின் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழலை எவ்வாறு மாற்றும் என்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
சேதங்களை மூடிமறைத்த அமெரிக்கா:
தாக்குதல் குறித்த சேதத்தின் உண்மையான அளவை அமெரிக்க அரசு இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்கா பொதுவாகத் தனது இராணுவத் தளங்களில் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை. அதேவேளை செயற்கைக்கோள் படங்கள், திறந்த மூல புலனாய்வுகள் மற்றும் ஊடக ஆய்வுகள், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட அதிகமான சேதங்கள் சில தளங்களில் ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன. ஓடுபாதைகள், விமானக் காப்பகங்கள், ரேடார் அமைப்புகள் மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் பல இடங்களில் பாதிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வளைகுடா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள் மேற்கொண்ட தாக்குதல்கள், பிராந்திய பாதுகாப்புச் சூழலை மேலும் பதற்றமடையச் செய்துள்ளன. அய்ன் அல்-அசாத், அல்-தன்ஃப், டவர் 22 போன்ற தளங்கள் இந்த மோதலின் நேரடி சாட்சிகளாக உள்ளன. இந்தத் தாக்குதல்கள் அமெரிக்காவின் இராணுவ இருப்பையும், மத்திய கிழக்கில் அதன் மூலோபாயக் கணக்கீடுகளையும் மறுபரிசீலனை செய்யத் தூண்டியுள்ளன. வளைகுடாவில் உருவாகியுள்ள இந்த புதிய பாதுகாப்பு சவால், எதிர்காலத்தில் அமெரிக்கா – ஈரான் உறவுகளின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கும்.
வளைகுடாவில் அமெரிக்க இராணுவ பிரசன்னம்:
வளைகுடா பிராந்தியம் பல தசாப்தங்களாக அமெரிக்காவின் உலகளாவிய இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கின் முக்கிய மையமாக இருந்து வந்துள்ளது. எண்ணெய் வளங்கள், கடல் வர்த்தகப் பாதைகள் மற்றும் மத்திய கிழக்கு அரசியலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்கில் அமெரிக்கா பெரும் இராணுவப் பங்களிப்பை மேற்கொண்டது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தது. தற்போது போரை நடாத்தி வருகிறது.
இந்த போரின் விளைவாக மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் ரீதியிலும் மாற்றங்கள் தென்படுகின்றன. வளைகுடா நாடுகள் அனைத்தும் அமெரிக்காவையே ஒரே பாதுகாப்பு கூட்டாளியாகக் கருதும் காலம் மாறி வருகிறது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட சக்திகள் பிராந்தியத்தில் தங்களது செல்வாக்கை விரிவுபடுத்துகின்றன. பல வளைகுடா நாடுகள் தற்போது பல்துறை வெளிநாட்டு கொள்கையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன. இதனால் அமெரிக்காவின் பாரம்பரிய ஆதிக்கம் சவாலுக்கு உள்ளாகியுள்ளது.
இன்றைய வளைகுடா அரசியல், வெறும் இராணுவ வலிமையால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது. ட்ரோன் தொழில்நுட்பம், ஏவுகணைத் திறன், பொருளாதார கூட்டணிகள் மற்றும் புதிய புவிசார் அரசியல் மாற்றங்கள் அமெரிக்காவின் நிலையை சிக்கலாக்கியுள்ளன. அமெரிக்கா இன்னும் வளைகுடாவில் முக்கிய சக்தியாக இருந்தாலும், முன்பு இருந்த முழுமையான ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வது கடினமாகி வருகிறது.
எனவே, வளைகுடாவில் அமெரிக்கா சந்திக்கும் இழப்பு என்பது வெறும் இராணுவ சேதம் மட்டுமல்ல. அது பொருளாதாரச் சுமை, அரசியல் செல்வாக்குக் குறைவு, புதிய உலக சக்திகளின் எழுச்சி மற்றும் பிராந்திய நாடுகளின் மாறிவரும் வெளிநாட்டு கொள்கைகளின் கூட்டு விளைவாகும். எதிர்காலத்தில் வளைகுடாவின் அரசியல் அமைப்பு மேலும் பல்துருவ உலக ஒழுங்கை நோக்கி நகரும் போது, அமெரிக்காவின் பங்கு எந்த வடிவத்தில் தொடரும் என்பது உலக அரசியலின் முக்கிய கேள்விகளில் ஒன்றாக இருக்கும்.
வளைகுடா அரசியலில் தொடரும் அமெரிக்காவின் இராணுவ, பொருளாதார, புவிசார் அரசியல் இழப்புகளால் புதிய அரபு நாடுகளின் தலைமைத்துவம் மாற்றங்களை நோக்கி நகரும் என்று கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button