இலங்கை

நேர்முகத் தேர்வை இடைநிறுத்தி தங்களுக்கு நியமனம் வழங்குமாறு யாழில் சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம்; ஆளுநர் அலுவலகமும் முற்றுகை 

கடந்த பல வருடங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகாதாரத் தொண்டர்களாகச் சேவையாற்றி வரும் நிலையில் நியமனம் வழங்கலுக்கான நேர்முகத் தேர்வில் தம்மை உள்வாங்காது அநுர அரசு திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகவும், சனிக்கிழமை (06) நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வை இடைநிறுத்தித் தமக்கான வாய்ப்பை வழங்க வேண்டுமெனக் கோரியும் பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் கவனயீர்ப்புப் பேரணியொன்றை முன்னெடுத்தனர்.

வெள்ளிக்கிழமை காலை-09 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப் பேரணி யாழ்.சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை சென்று அங்கும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மதியம் வரை போராட்டம் நீடித்தும் எவராலும் வாக்குறுதி வழங்கப்படாத நிலையில் நிறைவுக்கு வந்தது.

பல்வேறு கோரிக்கைகளைச் சுட்டிக்காட்டித் தமக்கான நியாயத்தைக் கோரிய போராட்டக்காரர்கள் தீர்வு கிடைக்காவிடின் சனிக்கிழமை நடைபெறவுள்ள நேர்முகத்தேர்வை நடைபெறவிடாது தடுத்துப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் கூறினர்.

கடந்த 05 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறித்த சேவையை நிலையான ஊதியம் கூடக் கிடைக்காது மேற்கொண்டு வருகிறோம். தற்போதைய அநுர ஆட்சியில் நாம் கொழும்பில் துறைசார் அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது சேவையிலிருக்கும் 170 பேருக்கும் சேவையின் அடிப்படையில் நியமனம் வழங்கும் போது உள்வாங்குவதாகவும் வாக்குறுதி வழங்கியிருந்தனர். ஆனால், இன்று அவர்களது வாக்குறுதி போலியாகிவிட்டதெனப் பாதிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் குற்றம் சாட்டினர்.

நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வுக்கு 92 பேர் அழைக்கப்பட்டுள்ள நிலையில் சேவையிலிருந்த 15 பேரே அதில் உள்வாங்கப்பட்டுள்ளனர். மிகுதி 77 பேரும் வைத்தியசாலையில் எந்தவொரு சேவையையும் முன்னெடுக்காத அனுபவமற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இதனைவிட மோசடியான விடயமாக 2019 ஆம் ஆண்டின் சுற்றுநிருபத்தின் பிரகாரம் அதற்கு முந்தைய காலத்தில் 180 நாட்கள் சேவையிலிருந்திருந்தால் அவர்கள் உள்வாங்கப்படுவர் என்று கூறப்படுகின்றது.

ஆனால், 2000 ஆம் ஆண்டின் பின் பிறந்த அதிகமானோர் அதில் உள்வாங்கப்பட்டுள்ளது எந்தச் சுற்றுநிருபத்தின் பிரகாரம் என்று தெரியவில்லை. இது இந்த அரசின் மோசடியாகவே இருக்கின்றது. எனவே, எமக்கான நியமனம் கிடைக்க வேண்டும். அல்லது நாம் தொடர்ந்தும் போராடுவோம் எனவும் குறிப்பிட்டனர்.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button