நடுகைக்காரி!….தொடர் 17 ….. (குறுநாவல்)…. ஏலையா க.முருகதாசன்.

![]()
மகாஜனாக் கல்லூரியின் கிழக்குப் பக்கத்து எல்லையை ,பாறுவை தனது சைக்கிளில் எற்றிக் கொண்டு வந்த ஞானத்தின் சைக்கிள் கடக்கும் போது ஞானத்தின் காதிலும் பாறுவின் காதிலும் „ எடியே சத்தி கெதியிலை வாடி வந்து இந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பாரடி தவசியின்ரை நடுகைக்காரிப் பெட்டையை சுப்பையற்றை கடைசி மதவடிப் பிரபு சைக்கிள் பாரிலை வைச்சு ஏற்றிக் கொண்டு போற கூத்தைப் பாரடி „ என்று சொல்வது கேட்க,ஞானம் திரும்பிப் பார்க்கிறான்
வடக்குப் பக்கமாக இருந்த ஒரு வீட்டு கேற்றின் முன்னால் மாலினியும் சத்தியும் நிற்பதையும் அங்கிருந்துதான் இந்தக் குரல் வந்திருக்க வேண்டும் என்று கண்டுகொண்ட ஞானம் அவர்களுக்கு வேணுமென்றே கையைக்காட்ட பாறுவும் தலையால் எட்டி அவர்களைப் பார்க்கிறாள்.
„பாரன் தவசியின்ரை மோளுக்கு வந்த காலத்தை.ஆற்றை சைக்கிளிலை ஏறிப் போறாளென்று பாரன்’ என்று மாலினி சொல்ல,’அவள் ஆற்றை சைக்கிளிலை ஏறிப் போனால்தான் உனக்கென்ன, உதைக் காட்டவே சுடுது மடியைப் பிடி என்று கூப்பி;ட்டனி’ என்று சொல்லிக் கொண்டே சத்தி வீட்டுக்குள் போறாள்.
„யார் இப்படிக் கதைச்சவை „ என்று பாறு கேட்க,’ எனக்குத் தெரிஞ்சவைதான் அதை விடுங்கோ எல்லாற்றை கதைக்கும் காது குடுக்கேலாது, இன்னும் இதைவிட மோசமாகவும் கதைப்பினம், அதையெல்லாம் யோசிச்சுக் கொண்டிருந்தால் நாங்கள் எந்த வேலையும் செய்ய முடியாது’ என்று சொன்ன ஞானம் லிங்கம் கபேக்கு மேற்கேயுள்ள மதவடிக்கு வந்ததும்,அதிலை சைக்கிளை நிற்பாட்ட „ ஏன் இப்ப இதிலை சைக்கிளை நிற்பாட்டிறியள்’ என்ற பாறு கேட்க,’ மத்தியானச்
சாப்பாட்டுக்கு லிங்கண்ணையிட்டை சொல்லியிட்டன் என்டாலும் ஒருக்கா ஞாபகபடுத்தினால் நல்லது’ என்று ஞானம் சொல்லிக் கொண்டிருக்க’ என்னைக் கொண்டு போய் தோட்டத்திற்கு தனம் அக்காவும் பூரணி அக்காவும் வந்ததும் என்னை அவையோடை அங்கை விட்டிட்டு பிறகு இஞ்சை வந்து சொல்லுங்கோ,அங்கையங்கை நிற்பாட்டி பெண்டாட்டியைக் காட்டப் போறியளே போங்கள் „ என்று சொன்னதும் ஞானம், „ கடவுளே இப்பவே இப்படியென்றால் இனி என்னென்ன நடக்கப் போகுதோ தெரியாது. அம்பனை ஞான வைரவா தெல்லிப்பழை புளியடி வைரவா நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்’ என்று அவன் சொல்லிக் கொண்டே நிற்பாட்டினை சைக்கிளை விளக்க பாறு மெதுவாக வாய்விட்டுச் சிரிச்சாள்.
தோட்டத்துக்கு போனதும் கிணத்தடி ஆடுகாலோடிருந்த பைக்குள்ளிருந்து ஒரு கைலியை எடுத்து பாறுவிடம் குடுத்து சட்டைக்கு மேலை இடுப்பிலை கட்டச் சொல்கிறான்.
„ஏன் இதைக் கட்டச் சொல்கிறியள்’ என்று அவள் கேட்க, „இங்கை நீங்கள் புல்லுப்பிடுங்கத் தேவையில்லை, மற்றவை இரண்டு பேருந்தான் பிடுங்குவினம் நீங்கள் என்னோடை இருந்தால் போதும், பெரிசாக பிடுங்கிற அளவிற்கு வெங்காயத்திற்குள்ளை புல்லுகளும் சடைச்சுக் கிடக்கேலை நீங்கள் கீழை இருக்கேக்கை கட்டியிருக்கிற கைலி சட்டையிலை ஊத்தை பிடிக்காமல் பாதுகாத்துக் கொள்ளும் என்னையும் குழப்பாமல் இருக்கும்’ என்று ஞானம் சொல்ல,’ ஊத்தை பிடிக்காமல் என்று சொன்னது சரி அது என்ன என்னைக் குழப்பாமல் என்று சொன்னது விளங்கவில்லையென்று „அவள் கேட்க அவன் மெதுவாகச் சொன்ன விசயத்தைக் கேட்டு அவள் வெட்கத்துடன் „இராத்திரி கும்மிருட்டிலை நடந்ததே அம்மா பெரிய பிரச்சினையாக நினைக்கிறா அதுக்குள்ளை அவற்றை நினைப்பு’ என்று சொல்லிக் கொண்டே அவனைக் கிள்ளினாள்.
ஞானம் மூன்று கற்களை எடுத்து அடுப்பாக்க, பாறு கிணத்திலையிருந்து வாளியாலை தண்ணியை அள்ளி கேத்தலில் ஊற்றி அடுப்பில வைச்சுக் கொண்டிருக்கும் போதே தனமும் பூரணியும் ஞானத்தின் தோட்டத்தை நோக்கி வரம்பால் நடந்து வந்து கொண்டிருப்பதைக் கண்ட ஞானம் தான் கொண்டு வந்த சாக்குளையும அட்டாளையிலிருந்த சாக்குகளையும் எடுத்து அட்டாளையின் கீழ்த்தரையில் விரிச்சவன் „பாறு இதிலை வந்து இருங்கோ,கேத்தில் கொதிக்க முந்தி லிங்கண்ணையிட்டை மத்தியானச் சாப்பாட்டுக்குச் சொல்லிப் போட்டு, சீனியம்மானின்ரை கடையிலை தோசையும் சுண்டலும் வாங்கிக் கொண்டு வாறன், அதோடை சீனியம்மானிட்டை நன்னாரிக் கிழங்கு கேட்டுப் பார்க்கிறன் தந்தால் வாங்கிக் கொண்டு வாறன்,கேத்தலுக்குள்ளை போட்டு அவிச்சால் தேத்தண்ணி வாசமாயும் உருசியாயும் இருக்கும் அவையும் வந்திட்டினம் கதைச்சுக் கொண்டு இருங்கள், இனி இந்த தோட்டத்திற்கு நீங்கள்தானே சொந்தக்காரி…என்று சொல்ல திகைப்புடன் ஞானத்தைப் பார்க்கிறாள் பாறு.
தனமும் பூரணியும் கிட்ட வந்ததும் „மூன்று பேரும் கதைச்சுக் கொண்டிருங்கள், டக்கென்று போயிட்டு டககென்று வாறன், தண்ணி கொதிச்சாலும் தேத்தண்ணி போட வேண்டாம் பாறு, நன்னாரியோடை வாறன் „ என்ற ஞானம் சைக்கிளில் உட்கார்ந்து போகப் போக சொல்லிக் கொண்டே போகிறான்.
வரம்பினில் சைக்கிள் ஓடுவது சுலபம்.ஆனால் தண்ணி போகும் வாய்க்கால் வரம்பில் சைக்கிளில் போவதென்றால் அதுக்கு சரியான பலன்ஸ் வேணும் திரும்பிப் பார்த்துக் கொண்டே சைக்களில் போவதென்றால் அதுக்கு நல்ல பயிற்சி தேவை.இந்த விசயத்தில் ஞானம் விண்ணன்தான்.
ஏனெனன்றால் தண்ணி போகும் வாய்க்கால் வரம்பின் தடிப்புக்கும் சைக்பகிள் ரயரின் தடிப்புக்கும் பெரும் வித்தியாசமிருக்காது.மட்டுமட்டாகத்தானிருக்கும். தனமும்
பூரணியும் அட்டாளைக்கு கீழே போட்டிருந்த சாக்குக்கு மேலே உட்காருகிறார்கள்.
தண்ணி போற மெல்லிய வரம்பில் சைக்கிளில் போன ஞானத்தை வியப்புடன் பார்த்த பாறு „ பார்த்தியளே அக்கா என்ரை அவரின்ரை கெட்டித்தனத்தை „ என்று பாறு சொல்ல, தனமும் பூரணியும் திகைப்புடன் பாறுவைப் பார்க்கிறார்கள்.
பாறுவின் முகத்தில் கண்களை நிலை நிறுத்தி பார்த்த தனம்’ பாறு நீ அந்தத் தம்பியைச் சந்திச்ச பிறகு அழகு பேர்ந்து போய்க் கிடக்கிறாய் என்ன அப்படி இரகசியம்’ என்று கேட்க’அப்படி ஒன்றுமில்லையக்கா,பொறுங்கோ நெருப்பை அணைய விடாமல் விறகை அடுப்புக்குள்ளை தள்ளிப் போட்டு வாறன் அப்பதான் தண்ணி கேத்தலிலை சலசலவென்று கொதிச்சுக் கொண்டிருக்கும் என்று எழுந்து போன பாறுவின் காதிலை கேட்கத்தக்கதாக’ஓமோம் …அடுப்பு எரிஞ்சால்தான் தண்ணி கொதிக்கும் அது உன்ரை முகத்திலேயே தெரியுதே, விறகைத் தள்ளிப் போட்டு வா உன்னோட கனவிசயம் கதைக்க வேணுமென்கிறாள்’ பூரணி.
அட்டாளைக்கு கைக்கெட்டும் தூரத்திலேயே அடுப்பு இருந்ததால் அட்டாளையிலிருந்து எழுந்து அடுப்புக்குள் விறகைத் தள்ளிப் போட்டு அப்படியே குனிஞ்சு அட்டாளைக்குள் உட்கார்ந்தவளின் வாயைக் கிளறத் தொடங்கினர் தனமும் பூரணியும்.
„அது சரி பாறு எப்படிப் போகுது உங்கள் இரண்டு பேற்றை காதல் பயணமும், நீயும் துணிஞ்சு அந்தத் தம்பியின்ரை சைக்கிளிலை ஏறிப் போறாய் வாறாய் நாங்கள் ஆரெண்டும் அவை ஆரெண்டும் தெரியுந்தானே அவை அடுவல் அல்ல தடிச்சவை என்று கதைக்கினம்.என்னன்டடி உனக்கு இவ்வளவு துணிச்சல் வந்தது’ என்று தனம் கேட்க,,என்னமோ எனக்கும் தெரியாது,றோட்டாலை போகேக்கை வரேக்கிலை அவர் மதகிலையிருந்து முசுப்பாத்தியாக் கதைச்சதைப் பார்த்திருக்கிறான்’
„ஒரு நாள் இரவு அவரைப் பற்றி யோசிச்சுக் கொண்டிருக்க அவர்மீது தீவிரமான காதல் ஏற்பட்டது.அதுதான் நடக்கிறது நடக்கட்டும், நான் ஆராக இருந்தாலும் பரவாயில்லை என்று கடிதம் ஒன்றை எழுதி அவரின் நெஞ்சைக் குறிபார்த்து எறிஞ்சன், அவரும் என்னைப் போல நினைச்சாரோ தெரியாது காதலுக்கு கண்ணில்லை என்பார்களே அது மாதிரி எங்கள் காதல் இப்படித்தான் ஆரம்பிச்சது. தீவிரமாக மாறும் என்று நானும் நினைக்கேலை அவரும் நினைக்கேலை,இப்ப நான் அவரை என்ரை புருசனாகவே நினைக்கிறன் அவரும் என்னை தன்ரை மனுசியாகவே நினைக்கிறார்……’என்று பார்வதி உட்கார்ந்திருந்த சாக்கில் கைவிரல்களால் ஞானம் என்று எழுதி சக குறியீடு போட்டு பாறு என்று எழுதுவதும் திரும்பத் திரும்ப எழுதுவதுமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.
„நீ சொல்வது சரிதான் அந்தத் தம்பியை முழுசாய் நம்பிறியா „ என்று கேட்க, „எனக்கு அவரை நான் காதலிக்க வேண்டுமென்ற எண்ணமும் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற துணிச்சலும் எப்படி வந்தது என்று எனக்கே தெரியேலை, அதுதான் இன்னார்க்கு இன்னார் என்ற விதியோ என்று நினைக்கிறன், அவர் சைக்கிளில் ஏறச் சொன்னால் ஏறுகிறன்’.
„ என்னை அவர் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போகும் போது றோட்டிலை போவோர் வருவோர் இல்லாட்டில் அவருக்குத் தெரிஞ்சவர்களோ இல்லாட்டி எங்களுக்குத் தெரிஞ்சவர்களோ பார்த்துவிடுவார்களே என்ற பயமும் வருகுது இல்லை, அவர்தான் என்ரை மனுசன் என்ற எண்ணம் மட்டுந்தான் என்ரை மனசிலை இருக்குது.
நான் நினைக்கிறன் புளியடி வைரவர் அந்தத் துணிச்சலைக் குடுக்கிறாரோ தெரியாது „ என்று சொல்லிக் கொண்டிருந்த பாறுவை கூர்ந்து கவனிச்ச பூரணி’ எங்களோடு அந்தத் தம்பியின் தாய் தகப்பன் மதிப்புக் குடுத்து எங்களையும் மனுசராகத்தான் நடத்திறார்கள்….மற்றத் தோட்டக்கார்கள்
எங்களுக்கு சிரட்டையிலும் போத்தலிலும் தேத்தண்ணி தரேக்கிலை அவை வீட்டிலையிருந்து பித்தளை மூக்குப் பேணி கொண்டு வந்து அதிலை தருகினம்….ஆனால் உன்னை அவை மருமகளாக ஏற்றிக் கொள்வீனம் என்று நம்பிறியே….உன்னை அந்தத் தம்பி விரும்புறது வீட்டிலை தெரியுமாமோ’ என்று கேட்க „தெரியேலை அக்கா, என்ரை ஆள் பார்த்தால் முசுப்பாத்திக்காரர்தான் ஆனால் துணிச்சல்காhர்.கட்டாயம் வீட்டிலை எங்கடை விசயத்தைச் சொல்லாமல் விடமாட்டார் „ என்று பாறு சொல்கிறாள்.
பாறு சட்டைக்கு மேலை கைலி உடுத்திருந்தை அப்பதான் அவையிரண்டு பேரும் கவனிச்சிருக்க வேணும் „ என்ன பாறு கைலியை சட்டைக்கு மேலை கட்டியிருக்கிறாய், அவற்றை கைலிதானே, அது சரி ஏன் இப்படிக் கட்டியிருக்கிறாய்’ என்று தனம் கேட்க, „அவர்தான் கட்டச் சொன்னவர் சட்டை ஊத்தையாகமல் இருக்க வேண்டுமாம்,அதோடை இன்னொரு விசயத்தையும் சொன்னவர்….’ ஏன்று சொல்லி கீழை சாக்கையே பார்த்துக் கொண்டு கீழை இருக்கேக்கை தற்செயலாக முழங்காலுக்கு மேலே சட்டை சிரைஞ்சு துடை தெரிஞ்சால் தன்ரை மனம் குழம்பிப் போமாம்…..இராத்திரி ஒரு விசயம் நடந்துது ஆனந்தா பேக்கறிக்கு அவர் சிங்களம் படிக்க என்று போக அவரோடை போயிட்டு அங்கையிருந்து புளியடி வைரவர் கோவிலடியாலை நடந்து நானும் அவரும் வீட்டை போனம்.அம்மா தேத்தண்ணி போட்டுக் குடுக்க அவர் குடிச்சிட்டு வெளிக்கிட „ என்று ..
„பொறு பொறு ….தேத்தண்ணி குடிச்சவரே „என்று தனம் கேட்க,
„குடிச்சவர்’ என்று பாறு சொல்ல’ பாறு இஞ்சை வா சுத்தி வளைச்சு கதை சொல்லாமல்’ இராத்திரி என்ன நடந்தது என்று உடைச்சுச் சொல்லு’என்று பூரணி ஆவல்பட „அவரைக் கொண்டு போய் படலையடியில் விடேக்கை கும்மிருட்டு…அவர் கட்டிப்பிடிச்சு இங்கை’ என்று சொண்டுகளைக் காட்டி எதுவும் சொல்லாமல் கீழை பார்த்தபடி இருந்து கொண்டே ……திரும்பி வீட்டுக்குள்ளை
போகேக்கிலை ஏன் சொண்டு இரண்டும் சிவந்திருக்குது என்று அம்மா கேட்டா, நான் பூச்சி கடிச்சது என்று சொன்னதை அம்மா நம்பேலை, இன்டைக்கு காலமையும் புத்திமதி சொல்லித்தான் விட்டவா….அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பூரணி „ சுப்பையற்றை வீட்டை மருமகளாய் போகேக்கிலை அவைக்கு பேரப்பிள்ளையையும் கொண்டுதான் போகப் போறாய் என்று சொல்ல தனம் வாய்விட்டுச் சிரித்தாள்
(தொடரும்)
![]()