சிங்கப்பூரில் சிலகாலம்!… 27…. (உண்மைக் கதை)…. ஏலையா க.முருகதாசன்.

யோகமலருக்கு தாலி கட்டும் நாளின் நினைப்பும்,நாமிருவரும் ஒன்றாக கணவன் மனைவியாக வாழப் போகிறேமே என்ற நினைப்பும் வந்த போது மகிழ்ச்சியும் தடுமாற்றமும் வரவே செய்தது.
இடைவேளைச் சாப்பாட்டுக்கு யோகமலர் பெரிய பிளாஸ்ரிக் பெட்டியில் பிரியாணி கொண்டு வந்திருந்தாள்.பிளாஸ்ரிக் பெட்டியைத் திறந்ததும் வாசனையே பசியைத் தூண்டியது.
முதல் நாள் இரவு எங்களுடைய வீட்டுக்கு முன் பில்டிங் வீட்டு பொம்பிளைப் பிள்ளைகளின் லீடர் விமலா அவர்களின் வீட்டடில் வைச்சு பிரியாணி தந்திருந்தார்.அது வேறு ஒரு வாசனையிலும் உருசியிலும் இருந்தது.யோகமலர் சமைச்சுக் கொண்டு வந்த இந்த பிரியாணி இன்னும் அதிகமான உருசியாக இருக்கும் என்பது வாசனையிலிருந்து தெரிய வந்தது.
ஒரே பிளாஸ்ரிக் பெட்டியிலிருந்து கரண்டியால் நானும் யோகமலரும் எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.’எப்படி இருக்குதுங்க, ரேஸ்ற்றா இருக்குதா’ என்று யோகமலர் கேட்க, நல்ல உருசியாய் இருக்குது நேற்றுச் சாப்பிட்டதைவிட இது நல்லாய் இருக்குது’ என்றன்.
„இதவிட ரொம்ப ரேஸ்ற்றா சமச்சு தருவேணுங்க,விதம் விதமா சமைச்சுத் தருவேணுங்க உங்களோட ஒண்ணா வாழப் போற நாட்கள எதிர்பார்த்து எண்ணிக் கொண்டிருக்கேனுங்க, என்னோட அண்ணாக்கள் சாய்ச்சியில நாங்க இரண்டு பேரும் இருக்கப் போற வீட்டுக்கு பேர்ணிச்சேர்ஸ் வாங்கிப் போட்டுட்டாங்க, அண்ணாக்களுக்கு ஒரு கவலை இருந்துகிட்டேயிருந்துதுங்க,
எனக்கு குடும்ப வாழ்க்கை கிடைக்குமான்னு யோசிச்சுட்டு இருந்தாங்க, ஒவ்வொரு வருடமும் என்னோட பேர்த்டே வர்றப்போ அவங்களும் அப்பா அம்மாவும் சந்தோசமா இருந்ததவிட அவங்களுக்கு கவலைதான் அதிகமா இருந்;ததுங்க.ஏன்னா ஏறிக் கொண்ணு போற என்னோட வயதுதான் காரணம்’.
„என்னோட விதியோ அல்லாட்டி உங்களோட விதியோ தெரியாது சிறீலங்காவில இருந்து உங்கள சிங்கப்பூருக்கு வரவழைச்சு என்னை உங்கள சந்திக்க வச்சுதுங்க’
„அக்காவுக்கு தாலி கட்டி மனைவியாக்கியது போல எனக்கும் தாலி கட்டி என்னை உரிமையுடன் பெண்டாட்டியாக்கப் போறீங்க.இது சரியா தப்பா என நான் யோசிக்கல.ஆனா கொஞ்சு நாளைக்காவது உங்களுக்கு எல்லாமா நான் உங்க பெண்டாட்டியா வாழனும்’ என்று யோகமலர் சொல்லிக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டுமிருந்தாள்.நெகிழ்ச்சியால் அவள் குரல் கரகரத்தது.
அவள் சொல்வதை அமைதியாக கேட்டபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தன்.மனம் அலை பாய்ஞ்சது.மனைவி மீது எவ்வித குறைவுமில்லாத பாசம் காதல் மிகுந்த அக்கறை இருந்தது.
„இந்த நாட்டைவிட்டு எவ்வளவு சீக்கரம் போக முடியுமோ அவ்வளவு சீக்கரம் போக வேண்டும் என்று மனம் அந்தரிச்ச போதும் யோமலர் மீதும் தீராத காதல் ஏற்பட்டு அவளோடும் வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்று மனமும் மூளையும் முடிவெடுத்தது’
„எதோ விதிப்படி நடக்கட்டும் என மனம் ஆறுதலடைந்தது.ஆனால் ஒரு விசயம் எனக்கு புரியாத புதிராகவே இருந்தது.அது கல்யாணம் செய்து மனைவி பிள்ளைகள் இருந்த என்னை அது தெரிஞ்சும் ஏன் எதற்காக
விரும்பினாள் தாலி கட்டுவிக்க வேணுமென்று ஏன் விரும்பினாள் என்பதுதான் அது’.
„அவளின் விருப்பத்தை நான் ஆராய முயற்சிக்கவில்லை.அவளும் அதற்கான விளக்கத்தை அவளோடு வாழ்ந்த இறுதி நாட்கள் வரை சொல்லவே இல்லை.உங்களோடு கொஞ்ச நாட்கள் வாழ்ந்தாலே போதும், உங்களுடைய மடியில் இறக்கும் பேறு எனக்கு வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருந்தாள்.
இந்த வியாழக்கிழமையோடு; இந்தப் பக்ரறியுடன் இருக்கும் உறவு இனி இல்லாமல் போய்விடும் என்பதாலும் புதிய பக்ரறியொன்றில் ஒன்றாக வேலை செய்யப் போவது மட்டுமல்ல ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து ஒரே படுக்கையில் படுத்து படுக்கையை பகிர்ந்து கொள்ளப் போகிறேமே என்ற நினைப்பு என்னையும் யோகமலரையும் ஆட்கொண்டு நின்றது.
இந்த பக்ரறியை விட்டுப் போகப் போகிறேமே என்ற நினைப்பு வந்தவுடன் சிறீலங்காவிலிருந்து வந்து எனக்கு இந்த பக்ரறியில் வேலை கிடைச்சதை எண்ணி ஒருபுறம் நன்றியுணர்வும் இன்னொரு புறம் கவலையும் ஏற்பட்டது.
இந்த பக்ரறிக்கு வராமல் விட்டிருந்தால் யோகமலரை சந்திக்காமல் விட்டிருப்போனோ, அப்படிச் சந்திக்காமல் விட்டிருந்தால் எனது சிங்கப்பூர் வாழ்க்கை வேறு திசையில்கூடச் சென்றிருக்கலாம்.
ஓவ்வொருவர் வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவங்கள் விதிப்படியே நடக்கிறது என பரவலாக எல்லா நாட்டு மக்களுமே நம்புகிறார்கள்.
பிரச்சினைகள் ஒக்வொன்றினதும் முடிவுகள் அவை நல்லவையாக இருந்தாலென்ன தீமையானவையாக இருந்தாலென்ன இறுதியில் இதுதான் விதியாக்கும் என
விதியின் மேல் பாரத்தைப் போட்டு விடுவது போன்று மலேசியாவின் ஜோகூர்பாரு என்ற இடத்து திருநெல்வேலி வம்சாவழிப் பெண்ணுடன் கணவன் மனைவியாக வாழப் போவதை விதி என்று எண்ணி அடிக்கடி மனதில் வந்து போகும் எண்ணத்தின் முடிவான நடப்பது நடக்கட்டும் என்று பேசாமலிருந்தேன்.
சாப்பிட்டு முடிஞ்சதும் எனது தோளில் சாய்ந்தபடியே’ எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்குமென்னு நான் கனவிலும் நினைக்கேலீங்க’என்று சொல்லிக் கொண்டே கண்ணீர் ததும்பிய கண்களுடன் திரும்பிப் பார்த்தாள்.
அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு தலையைத் தடவிக் கொடுத்தேன்’ கடவுள் எனக்குக் கொடுத்த பரிசு நீங்கள் „என்றாள்.
வழமை போல மீண்டும் வேலை ஆரம்பித்தது.வேலை முடிய அவளை அவளின் பஸ்ஸில் கொண்டு போய் விட்டிட்டு, அவளின் பஸ் வெளிக்கிட அவள் எனக்குக் கைகாட்டிய பின் நான் எனது பஸ்ஸில் ஏறினேன்.
ஓவ்வொரு நாளும் அவளைச் சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, அவள் வேலை முடிஞ்சு போகும் போது இனி நாளைக்குப் பின்னேரந்தானே அவளைச் சந்திக்கப் போறன் என்று நினைக்கும் போது கவலையாக மாறிவிடும். அடுத்த நாள் அவளின் முகத்தைப் பார்த்தவுடனேயே மனம் உற்சாகமாகிவிடும்.
அவளோடு ஒரே வீட்டில் வாழப் போகிறேனே என்ற எண்ணம் அதற்குரிய நாட்களைத் தாண்டி வேகமாக இரவு முடிந்து அடுத்த நாளாக விடிய வேண்டும், விடிந்த நாளும் வேகமாக மாலையாகி இரவாகி அடுத்தடுத்த நாட்களாகி வெள்ளிக்கிழமை என்ற நாள் வரவேண்டும் என்று மனம் தவியாய்த் தவித்தது.
அவளுக்கும் அதே மனநிலைதான்.இப்ப கொஞ்ச நாட்களாக துப்பரவாக எனக்கு இரவு நித்திரை இல்லை.விடிய விடிய முழிப்பு இருக்க வேண்டியதாகிப் போய்விட்டது.
கல்யாணம் என்றாலே ஒரு ஆண் தனக்கு மனைவியாகப் போகிறவளின் உடலை ஸ்பரிக்கப் போகிறேனே, அந்த நாள் விரைவாக வருவேண்டும் என்று நினைப்பது இயல்பு.
வெளியில் சொல்லாவிட்டாலும் கல்யாணத்தின் மூலம் தனக்குத் துணையாக வரப் போகிறவன் உடலாலும் தன்னை ஆட்கொள்ளப் போகும் நாளை கல்யாணப் பெண்ணும் மௌனமாக முகம் சிவக்க எதிர்பார்த்து நிற்பது இயல்பே.
நானும் யோகமலரும் அதே எதிர்பார்ப்பில்தான் இருந்தோம்.அடுத்த நாள் வேலைக்குப் போன போது எனக்காக ஓய்வெடுப்பதற்காகக் கதிரை மேசையிருக்கும் இடத்தில் உள்ள மேசையில் சாய்ந்தபடி எனக்காக காத்திருந்தவள் நான் வருவதைக்; கண்டதும் என்னை நோக்கி வந்தவள்,எனது முகத்தை உற்றுப் பார்த்தாள்.முகம் வாடி கண்கள் சிவந்திருந்ததைக் கண்டதும் „ ஏங்க நைற் தூங்கலையா, கண்கள் ரெண்டும் சிவந்திருக்கே „ என்றவள் மீண்டும் என்னோடு மேசையடிக்கு வந்தவள்,
சாப்பாட்டுப் பைக்குள்ளிருந்து மண்ணிறத் தாளில் சுற்றியிருந்த கொழுக்கட்டைகளில் ஒன்றை எடுத்து தந்து „சீக்கிரமாகச் சாப்பிடுங்கள்’ என்று அவள்: சொல்லவும்,வேலை தொடங்குவதற்கான மணி அடிக்கவும் சரியாக இருந்தது.
வேகமாக கொழுக்கட்டையை வாயக்குள் அடைஞ்சு கொண்டே வேலைக்கு ஆயத்தமானேன்.
(தொடரும்)
![]()