கதைகள்

அந்த நாலுபேர்!…. ( சிறுகதை )…. ஏலையா க.முருகதாசன்.

„போன மாசந்தானே டோட்முண்ட் புடவைக் கடையிலை எழுநூற்றி ஐம்பது ரூபாய்க்கு சாறி எடுத்தனீங்கள், இப்பவும் விலை கூடின சாறி எடுக்க வேணுமென்றால,காசுக்கு எங்கை போறது’

„அது போன மாசம் கனகேஸ்வரன்ரை வீட்டு சாமத்தியச் சடங்குக்கு போகவெண்டு வாங்கியது, இப்ப வாற சனிக்கிழமை சரஸ்வதியின்ரை மகளின்ரை கலியாண வீட்டுக்குப் போகப் போறம்,அதுக்குப் புதுச்சாறி வாங்க வேணும்,பொட்றப்பில் உள்ள கிந்திக்காரன்ரை கடைக்குப் போவம் எனக்குச் சாறி வாங்கிறதோடடை மதுசாவிற்கும் ஒரு சுடிதார் வாங்க வேணும்,அவளையும் கூட்டிக் கொண்டு போவம் „ என்று தாய் சொன்னதும் „அம்மா நான் வரேலை நீங்கள் போய் வாங்குங்கோ எனக்கு ஒண்டும் வேண்டாம் „ என்று அறைக்குள் இருந்து மகள் மதுசா சொல்ல „அப்ப நீ கலியாண வீட்டுக்கு என்னத்தைப் போடப் போறாய்’ என்று தாய் கேட்க,’இருக்கிற சுடிதாரிலை ஒன்றைப் போடலாம் அம்மா இல்லாட்டி ஏதாவது ஒரு சாறியைக் கட்டலாம் அது பிரச்சினை இல்லையம்மா „ என்று மகள் சொன்னதைக் கேட்டு திருப்தியடையாத தாய் „முந்திப் போட்ட சுடிதாருகளைப் போடாதை அதுமாதிரி முந்திக் கட்டின சாறியளைக் கட்டிப் போடாதை, கனகேஸ்வரன் சொன்னவர் தங்கடை கலியாண வீட்டுக்கு ஆயிரம் பேருக்குச் சொல்லிருக்கினமாம்,அவைக்குள்ளை எங்களை எல்லாரும் விசேசமாயப் பார்க்கோணும், நாலு பேர் வாற இடத்திலை எங்களைப் பிச்சைக்காரர் என்று யாரும் நினைக்கக்கூடாது „ என்று சொல்லியபடியே பரிமளா சாறியைக் கட்டிக் கொண்டிருந்தாள்.

பொட்றப் புடவைக் கடைக்குப் போவதற்காக காலை ஐஞ்சுமணியிலிருந்து பரபரத்த பரிமளா காலை பத்து மணியாகியும் இன்னும் சாறியைக் கட்டி முடிக்கவில்லை.

„சரி போவமப்பா „ என்று பரிமளா அறையைவிட்டு வெளியே கூடத்துக்கு வருவதும்,’ இது சரியில்லை கடைக்கு நாலு பேர் வர்ற இடம் வளம்கெட்ட மனுசராய்ப் போகக்கூடாது’ என்று சொல்லிக் கொண்டே திரும்பிப் போய் இன்னொரு சாறியைக் கட்டுவதுமாக இதுவரை ஏழு சாரிகளை கட்டியும் திருப்திப் படாத பரிமளம் கட்டி அவிழ்த்த சாரிகளை கட்டிலில் போட்டதால் சாரிக்குவியலாக கட்டில் காட்சி அளித்தது.

எட்டாவது சாரியில் ஓரளவு திருப்திப்பட்டுக் கட்டிக் கொண்டு கூடத்துக்கு வந்த பரிமளா’ புடவைக் கடைக்காரனுக்கு ரெலிபோன் செய்தனீங்களே’ என்று கணவன் சுந்தரலிங்கத்திடம் கேட்க’ ரெலிபோன் செய்தனான் எங்களுக்காக யாருக்குமே விற்காமல் இரண்டு மூன்று திறமான சாறிகளை எடுத்து வைச்சிருக்கிறதாக புடவைக்கடைக்காரர் சொன்னவர்’ என்று சொன்னதும்’ எனக்குத் தெரியும், கடைக்கார அமர்நாத் எங்களுக்கு ஸ்பெசலாக எடுத்து வைச்சிருப்பார் „ என்று பரிமளா சொல்லிக் கொண்டே காரடிக்குப் போனவள் காரை முறைச்சுப் பார்த்தபடி விருப்பமில்லாத காரில் அருவருப்புடன் ஏறுவது போல ஏறினாள்.

„இதை வித்துப் போட்டு எப்ப புது பென்ஸ் கார் வாங்கப் போறியள்’என்று பரிமளா கேட்க,காரை ஸ்ராட் செய்து ஓடிக் கொண்டே சுந்தரம் „ ஏன் இந்தக் காருக்கு என்ன குறைச்சல் இது கடைசியாய் வந்த பிஎம்வே மொடல் அதுவும் புத்தம் புதுசா ஆறு மாதத்திற்கு முன் வாங்கியது’ என்று சொல்ல.’இந்த மொடலை சந்திரகுமார் வாங்கிப் போட்டான், அண்டைக்கு சிஅண்ட்ஏ கடையிலை கண்ட இந்திராணி உங்கடை கார் மாதிரி நாங்களும் வாங்கிப் போட்டம் என்கிறாள்.எங்கடை சிற்றியிலை நாங்கள் மற்றவையை விட அவை வைச்சிருக்கிற கார் மாதிரி வைச்சிருந்தால் மரியாதை இல்லை.அவை போல நாங்களும் வைச்சிருந்தால் நாலு பேர் என்ன நினைப்பினம்.கெதியிலை புது பென்ஸ் எடுக்க வேணும் அதற்கு ஒரு வழி பாருங்கோ என்று பரிமளா தொண தொணக்க ‘ என்னத்தை வழி பார்க்கிறது,வீட்டுக் கடன் முடிய இன்னும் முப்பது வருசம் கிடக்குது.மலிவாய் றைக வீடு வாங்குவமென்றால் நாலுபேர் கதைக்கிற மாதிரி காணி வாங்கி வீடு கட்டுவம் எண்டியள்,கணக்க வட்டி எடுக்கும் வங்கியிலை கடன் வாங்கி வீடு கட்டினம்’ சந்தரம் சொல்லச் சொல்ல பரிமளாவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.

„இஞ்சருங்கோப்பா நாங்கள் சாப்பிட்டதையோ சாப்பிடாததையோ யாரும் பார்க்கப் போவதில்லை, விலாசமாய் கெத்துக் காட்டி வாழ்திறதைத்தான் நாலுபேர் கவனிப்பினம்.மற்றவை எங்களைப் பார்த்து பொறாமைப்படோனும்’

„சாப்பிடாமல் கெத்துக் காட்டிறதே வாழ்க்கை.வீடு கடன் இந்தக் கார் கடன்.கிழமை நாட்களில் பக்ரறி வேலை.சனி ஞாயிறு வேற வேலை.சனி ஞாயிறு நடக்கிற குடும்ப விழாக்களுக்கோ,கோவில் திருவிழாக்களுக்கோ போக முடியுதாவென்றால் அதுவும் அரைகுறையாக அங்கையும் இங்கையுமா நிற்க வேண்டியிருக்கு.பிள்ளைகள் இரண்டு பேரும் நாங்கள் சொன்னனான்களே உங்களை இவ்வளவு பெரிய வீடு கட்டச் சொல்லி

என்று கேட்கினம்.தங்களுடைய படிப்பு முடிஞ்சதும் உங்களோடை இருப்பம் என்று எதிர்பார்க்காதையுங்கோ எங்கினம்,ஒரு வருசத்தில பத்து நிகழ்ச்சி வந்தால் பத்துப் புதுச்சாறி வாங்க வேணும் என்கிறாய் கடைசிலை நடுக்கடலிலைதான் நிற்கப் போகிறம்’ என்று சுந்தரம் கொஞ்சம் கோபமாகவும் சலிப்பாகவும் சொல்லிக் கொண்டிருக்க பொட்றொப் நகரத்து புடவைக்கடைக்கார் அமர்நாத்தின் கடையும் வந்துவிடுகிறது.

அமர்நாத் கிந்திக்காரன்.சுந்தரத்தையும் பரிமளாவையும் கண்டதும் குட்மோகன் வணக்கம் நமஸ்தே என்று சொல்லி வரவேற்று.காசுப்பட்டடை கீழிருந்த அலுமாரியிலிருந்து மூன்று சாறிகளை எடுத்து பட்டடடை மேசையில் போடுகிறான்.

ஒரு சாறி எடுக்கிற யோசனையுடன் போன பரிமளத்திற்கு மூன்று சாரிகளையும் எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.அமர்நாத்திற்கு தமிழும் தெரியுமென்பதால் மூன்று சாரிகளையும் அவையின்ரை தலையில் கட்ட வேண்டும் எண்ணியவன் ஒரு சாறி ஐந்நூறு யூரோ மற்ற ரெண்டையும் ஒன்னுமுன்னூறுப்படி தாறன்.இந்த மூன்றுந்தானிருக்கு நேற்றுத்தான் மும்பையிலிருந்து வந்தது.பின்னேரம் உங்க சிற்றியிலிருந்து சந்திரகுமார் பமிலி வாறம் என்று சொன்னாங்க……’ என்று அமிர்நாத் சொல்லி முடிக்குமுன் „நாங்களே மூன்றையும் எடுக்கிறம்’ என்றவள் ஈசி கார்ட்டைக் குடுங்கோ என்று சொல்ல, அதிலை அவ்வளவு காசு இல்லை’ என்று சுந்தரம் சொல்ல மாஸ்ரர் கார்ட்டைக் குடுங்கோ என்று சொல்ல, அமிர்தநாத் தூபம் போடற மாதிரி „ நீங்கதானே உங்கட சிற்றியில விஜபி மாதிரி என்று சொல்ல புளகாங்கிதத்தில் செட்டை கட்டிப் பறந்தால் பரிமளா.

சுந்தரம் தொழிற்சாலை ஒன்றில் முழுநேர வேலையும் சனி ஞாயிறில் களவாகப் பாதியும் களவில்லாமல் பாதியும்n வேலை செய்கிறான்.பரிமளாவும் கிழமைக்கு மூன்றுநாள் பேக்கறியொன்றில் துப்பரவாக்கும் வேலைக்குப் போகிறாள்.

நாலுபேர் கதைக்க வேண்டுமென்பதற்கா வரவுக்கு மிஞ்சிய விலாசமான செலவால்.காற்றுப் போன ரயரைக் கொண்ட வண்டியை உயரமான ரோட்டில தள்ளுவது போல முக்கி முணகிக் கொண்டே அவர்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கிறது.

உடைகளால் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளாக வெளித் தோற்றத்தில் அவர்களிருந்தாலும் உள்ளுக்குள்ளை நிம்மதியின்மையும்,சீறிச்சினப்பும் இருக்கவே செய்தது.

ஊபர்சீகுங் என்ற மேலதிகப் பண எடுப்பால் அதற்கு வட்டி வேறு.மேலதிகப் பண எடுப்பை கடனாக்கி அது இன்னொரு கடன்.ஈசி கார்ட்,விசா கார்ட், மாஸ்ரர் காட் இவற்றையெல்லாம் பொருட்கள் வாங்கும் கடைகளில் கொடுத்துவிட்டு தனக்கருகில் நிற்கும் ஜேர்மன்காரர் தன்னைப் பார்க்கிறார்களா என்பதில் தனிச் சுகம் கண்டாள் பரிமளா.

சாறி வாங்கினது சர்வேஸ்வரன் சரஸ்வதியின்ரை மகளின்ரை கல்யாண வீட்டுக்கு கட்டிக் கொண்டு போக வேண்டுமென்பதற்காக.கல்யாண வீட்டுக்கு பென்ஸிலதான் நாலு பேர் கதைக்கிற மாதிரி போக வேண்டுமே என்பதற்காக கொடுக்க வேண்டிய விலையிலும் பார்க்க இரண்டாயிரம் யூரோ அதிகமாகக் கொடுத்து பென்ஸ் காரை வாங்கினார்கள்.

பென்ஸ் காரில் போய் இறங்கிய போது இவர்களை எல்லோரும் பார்த்தார்கள்.’சந்திரகுமார் சுந்தரத்தைப் பார்த்து கார் நுல் கிலோமீற்றரோ „ என்று கேட்க,வேறு வழியின்றி சுந்தரமும் கம்பீரமாக முகத்தை வைச்சுக் கொண்டு „யா’ன்று பதிலளித்தவர் மனைவி மகளுடன் கைத்தொலைபேசியையும் கார்ச்சாவியையும் ஒரு மேசையைப் பிடிச்சு மேசையில் வைச்சுக் கொண்டே உட்கார்ந்தனர்.

அடுத்த மேசையில் இருந்த கலா, பரிமளாக்கா கலக்கிறியள்,குருசந்திர யோகம் என்பார்களே அது உங்கடை குடும்பத்திற்குத்தான் பொருந்தும்’ என்று சொல்ல அவர்களின் மகள் இருக்கிற கடன் புகழுறவைக்கு எங்கை தெரியப் போகுது கடைசியிலை என்ரை தலையிலும் அண்ணையின்ரை தலையிலுந்தான் வந்து விழப் போகுது,யாழ்ப்பாணத்திலையிருந்து வந்த சனங்கள் எல்லாம் இப்படித்தானோ என்று மனதுக்குள் நினைச்சவள் பேசாமலிருக்க,அவர்களுக்கு இடது பக்கத்து மேசையிலிருந்த இன்னொருத்தி வடையைக் கடிச்சு விழுங்கியபடியே சுந்தரம் பரிமாளவின் மகளைப் பார்த்து „ ஏன் பிள்ளை மதுசா போன மாசமும் கனகேஸ்வரன்ரை சாமத்தியச் சடங்குக்கு இந்தச் சாறியைத்தானே கட்டிக் கொண்டு வந்தனி, இன்றைக்கும் இதைக் கட்டிக் கொண்டு வந்திருக்கிறாய்’ என்று கேட்க, அதற்கும் மௌனமாக மதுசா இருக்க’ சொன்னால் நீ கேட்டால்தானே, நான் கேட்டனான்தானே அமிர்நாத்தின்ரை கடையிலை சாறி இல்லாட்டில் சுடிதார் வாங்கிக் கொண்டு வாறன் என்று இப்ப பார் நாலு பேர் நாலு விதமாய்க் கதைக்கினம்’ என்று மகளுக்குச் சொல்ல’அம்மா அவை சொல்லுனம் இவை சொல்லுனம் என்று வாழ முடியாதம்மா, வரவுக்குத் தக்கதாகத்தான் வாழ முடியும் பேசாமலிருங்கள் „ என்று மதுசா சொல்ல’

கொம்மாவுக்கு எது சொன்னாலும் விளங்காது அவ நாலுபேர் பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காக வாழுறவ’ என்று தனது ஆதங்கத்தை சுந்தரம் சொல்லுகிறார்.

அந்த நேரம் பார்த்து நாலைஞ்சு மேசைக்கு அப்பால இருந்த இந்திராணி எழுந்து வந்து சுந்தரம் பரிமளா வெறுமனையாக கிடந்த அவர்களின் மேசைக் கதிரையில் உட்கார்ந்தாள். பரிமளா உற்றுப் பார்த்தாள் தான் உடுத்திருந்த அதே சாறி போல அவளும் உடுத்திருந்தாள்.

பரிமளாவிற்கு முகம் கறுத்துவிட்டது.இந்திராணியைப் பார்த்து என்ன விலைக்கு சாரி வாங்கினனீங்கள் எங்கை வாங்கினனீங்கள் „என்று கேட்க, முல்கைம் கடையிலை முன்னூறு யூரோவுக்கு வாங்கினான் என்று சொல்ல தான் ஐந்நூறு யூரோக்கு வாங்கினதை மூடிமறைச்சு இருநூற்றி ஐம்பது ரூபாய்க்கு வாங்கினது என்று பொய் சொன்னாள் பரிமளா.

அந்த ஏமாற்றத்தை போக்க „நீங்கள் இப்பவும் அந்தப் பழைய பிஎம்வே காரைத்தான் வைச்சிருக்கிறியளோ’ என்று பரிமளா நக்கலில்லாத நக்கலாகக் கேட்க,’ஒம் அதுதான் வைச்சிருக்கிறம்,அது பழசில்லை அதவும் புதுசுதான்’ என்று இந்திராணி சொல்ல,’நாங்கள் நுல் மீற்றரோடை டீச யார பென்ஸ் ஒன்று வாங்கிட்டம்’ என்று பரிமளா சொல்ல இந்திராணியின் முகம் கறுத்ததை பரிமளா இரசித்தாள்.

மதுசாவுக்கு தாயிடமும் இந்திராணியிடமும் வீண் விம்பம் காட்டுவதை இவர்கள் நல்ல வாழ்க்கை என்று நினைக்கிறார்கள் என்று கோபம் கோபமாக வந்தது.

நாலைஞ்சு மாதங்கள் சென்றன.அளவுக்கு மீறிய கடனால் சுந்தரத்தின் மாஸ்ரர் கார்ட் விசா காட் வங்கியால் செல்லுபடியற்றதாக ஆக்கப்பட்டது.பென்ஸ் காரை வாங்கிய விலையவிட எட்டாயிரம் குறைச்சு விற்க வேண்டியதாகிப் போய்விட்டது.

நாலு பேர் கதைக்க வேண்டும் என்பதற்காக மிக அதிகமான கடனால் தத்தளித்தது சுந்தரலிங்கம் பரிமளா குடும்பம்.கடனால் நல்ல தூக்கமில்லை.நிம்மதியில்லை.

வங்கியிலிருந்து மேலதிகமாக பத்து யூரோகூட எடுக்க முடியாத நிலையில் சூபாவின் கண்காணிப்புக்கு உட்பட்டது வங்கிக் கணக்கு.

நாலுபேருக்கா பொய்யாக வாழ்ந்தவர்களை „ என்ன அவைபட்ட பாட்டுக்கு இப்ப அவைஎ சூபாவிலாம்’ என்றதும் அந்த நாலுபேர்தான்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *