கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!…. 23 …. (உண்மைக் கதை) ….. ஏலையா க.முருகதாசன்

யோகமலர் உணர்ச்சிவசப்படும் போதெல்லாம் முகம் சிவந்து உடல் நடுங்குவதை பலமுறை நான் கண்டதனால் அவளை இறுக்கி அணைத்து வைச்சிருந்தன்.

அதைக் கடைக்கண்ணால் பார்த்த மச்சாளின் மகளின் முகம் கறுத்ததை நானும் கவனித்தன் யோகமலரின் தோழியும் கவனித்துவிட்டாள்.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே அது போலத்தான் போல மச்சாளின் மகளின் ஒவ்வொரு செய்கையும் எனக்கு மனதில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அவள் எனது சிங்கப்பூர் வாழ்க்கையைப் பற்றி தனது தாயாருக்கு எழுதினாலும் எழுதலாம்,எனது மனைவியும் மாதத்தில் இரண்டு தடவையாவது மச்சாளின் வீட்டுக்குப் போய் வருவதாக அறிந்திருந்தேன்.மச்சாளும் எங்களுடைய வீட்டுக்கு வந்து போவதாக மனைவி கடிதங்களில் எழுதியிருந்தார்.

படம் பார்ப்பது என்றால் அமைதியான சூழலில் பார்த்தால்தான் அதை இரசிக்க முடியும்.பாரதிராஜாவின் படம் என்றால் அதில் ஏதாவது புதுமையிருக்கும் என்ற எதிர்பார்ப்புடன்தான் அந்தப் படத்திற்கு வந்திருந்தோம்.படம் நன்றாகவே இருந்தது ஆனால் மனக்குழப்பச் சூழ்நிலையால் அந்தப் படத்தை முழுமையாக என்னாலும் யோகமலராலும் இரசிக்க முடியவில்லை.

படம் முடிந்ததும் கீழே வந்தோம். தியேட்டரைவிட்டு எல்லோரும் போய்க் கொண்டிருந்தார்கள்.கொஞ்சம் தாமதித்து தியேட்டரைவிட்டு வெளியே போகலாம் என்று நாங்கள் நால்வருடன் இன்னும் சுண்ணாகவம்சாவழிப்பிள்ளையும் அவளின் தோழியும் நின்ற போது காங்கேசன்துறை இராஜநாயகித் தியேட்டருக்கு அருகில் இருக்கும் இளைஞன் என்னை நோக்கி வருவதைக் கண்டதும் அவன் ஏதாவது அறிய வருகிறானோ என்று யோசித்த நான் யோகமலரிடம் நில்லுங்கள் வருகிறன் என்று சொல்லிக் கொண்டே அவனை நோக்கிப் போய் அவனுக்கு கைலாகு கொடுத்து அவனைத் தடுத்து நிறுத்தினன்.

அவனுக்கு அருகில் ஓபிசி பில்டிங் மூன்று பிள்ளைகளும் நின்றிருந்தாரக்ள்.’பிரண்ட்ஸ்ஸோடை படத்துக்கு வந்தனீங்களோ’ என்று அவன் கேட்க,’மச்சாளின் மகளைக் காண்பித்து, அவ என்னுடைய மச்சாளின் மகள் மற்றவையை எனக்குத் தெரிஞ்சவை „ என்று மழுப்பலாக பதில் சொல்ல, „கம்பாயம் போட்டிருக்கிறவா …என அவன் சொல்லி விசயத்தை அறிய முயற்சிக்கிறான் என்பதை உணர்ந்து சடாரென்ற யோகமலர் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு „ அவை போகப் போகினமாம் நான் வாறன் „ என்று

சொல்லிக் கொண்டே நான் போக „ அவனுடன் நின்றவளில் ஒருத்தி,மலேசியன் கேர்ளை கல்யாணம் கட்டப் போறதை நீங்கள் கேட்டிடுவியள் என்று தப்பிச்சுப் போறார் என்று சொல்வது எனது காதில் விழுந்தது.

„எங்கேயாவது சாப்பிடுவோமா’ என யோகமலர் கேட்டாள்.தியேட்டர் இருந்த இடத்தில் தமிழ் உணவகங்கள் எதுவும் இல்லையென்பதைத் தெரிந்து கொண்ட நாங்கள் தியேட்டருக்கு அருகில் இருந்த சந்தைக் கட்டிடத்துக்குள் நுழைந்தோம்.

அங்கு எல்லா நாட்டுக்காரர்களின் உணவு வகையும் இருந்தன. „என்னங்க எப்பவும் நம்ம சாப்பாட்டைத்தானேங்க சாப்பிடுறோம். இன்னைக்கு வேறு சாப்பிடுவோமா „ என்று யோகமலர் கேட்டாள்.நான் மச்சாளின் மகளையும் சுண்ணாக வம்சாவழிப் பிள்ளையையும் அவளுடைய தோழியையும் பார்த்தேன் அவர்கள் „ ஓகே எமக்குப் பிரச்சினை இல்லையென்பதைப் பொல தலையை ஆட்டினார்கள்.

சீனரின் கடையில் நூடில்ஸ் சாப்பிட்டு முடிஞ்சதும் கிரீன் ரீ குடிச்சோம்.கொஞ்ச நேரம் அந்த இடத்திலிருந்து கதைச்சுக் கொண்டிருந்த போது மச்சாளின் மகள் „சித்தப்பா இந்தப் படம் உங்களுக்கு பிடிச்சிருந்ததா „ என்று கேட்டவள்,’ நீங்கள் படம் பார்த்திருந்தால்தானே அதைப்பற்றிச் சொல்வதற்கு „ என்றவள் சொகுசாக நித்திரை கொண்டதை நானும் பார்த்தேனே „ என்றாள்.

யோகமலர் அதற்குப் பதில் சொல்வதற்கு வாயெடுக்க நான் அவளின் தொடையில் மெதுவாக தட்ட அவள் நிறுத்திக் கொண்டாள்.

ஆனால் , „படம் முழுவதையும் பார்த்தனான் „ என்று நான் சொல்ல ,’ அவர் என் தோளில சாய்ஞ்சிருந்தாலும் முழுபு;படத்தையும் அவரும் பார்த்தாரு’ என்று யோகமலர் „சொல்ல, „ஆமா அவர் பார்த்ததை நானும் கவனிச்சேன் „ என்று சுண்ணாக வம்சாவழிப் பிள்ளை சொல்ல, அவளைப் பார்த்து யோகமலர் புன்னகைத்தாள்.

„ஏங்க உங்களுக்கு இரவுச் சாப்பாடு ஏதாவது வாங்கிக் கொண்டு போங்க „ என்று சொன்ன யோகமலர் அவங்களையும் கேளுங்க என்று சொல்ல , மச்சாளின் மகளிடம் உங்களுக்கும் வாங்கிறன் என்ற நான் அவளின் பதிலுக்குக் காத்திராமல் ,சீனக் கடைக்குப் பக்கத்திலிருந்த தமிழரின் றொட்டிக் கடையில் எனக்கு இரண்டு றொட்டி யோகமலருக்கும் தோழிக்கும் நான்கு றொட்டி மச்சாளின் மகளுக்கு இரண்டு றொட்டி சுண்ணாக வம்சாவழிப் பிள்ளையளுக்கு தேவையான றொட்டி எத்தனை என்று கேட்க „ வேண்டாம் லா நாங்க வீட்டுக்குப் போயிடுவோம்ங்க இரவுச் சாப்பாடு வீட்டில செய்திருப்பங்க லா,உங்களை தியேட்டரல சந்திச்சதாலயும் நீங்க கேட்டதாலயும் உங்களோட சாப்பிட்டம் லா. எல்லாத்துக்கம் மெனி மெனி

தாங்ஸ் லா என்று சொன்ன சுண்ணாக வம்சாவழிபஇ பிள்ளை இரவுச் சாப்பாடு வேண்டாம் என்று அடியோடு மறுத்துவிட்டார்.

நாங்கள் எல்லாரும் சந்தைக் கட்டிடத்தைவிட்டு பஸ் ஸ்ராண்டுக்குப் போனம்.அங்கு காங்கேசன்துறை யைச் சேர்ந்த இளைஞனும் மூன்று பொம்பிளைப் பிள்ளையளும் நிற்பதைக் கண்டம்.

அவர்களும் யூரோங் இன்ரர்சேன்ஜ்யுக்குப் போகிற பஸ்சுக்காக காத்திருப்பதை ஊகித்துக் கொண்டன்.பஸ் வர அதில் அவர்களும் ஏறஉ சுண்ணாக வம்சாவழிப் பிள்ளையும் அவளின் தோழியும் எங்களுக்கு கையைக் காட்டிவிட்டு ஏறினார்கள்.

அடுத்து ஜோகூர்பாருவிற்கு போகவிருக்கும் பஸ் நிற்கும் இடத்திற்கு போகும் பஸ் வரவே அதில் நானும் யோகமலரும் தோழியும் மச்சாளின் மகளும் ஏறிக் கொண்டோம்.

பத்து நிமிடங்களுக்குள் குறித்த இடத்திற்கு பஸ் போய்ச்சேர யோகமலரும் தோழியும் பஸ்ஸிலிருந்து இறங்கி ஜோகூர்பாருவுக்கு போகவிருந்த பஸ்ஸில் ஏறப் போகும் போது , எனது கையிலிருந்த றொட்டிப் பார்சலைக் கொடுத்தன்.

„உங்களைப் பார்க்க ஒரு நாள் காத்திருக்க வேண்டியிருக்குதுங்க காலைல ரெலிபோன் எடுங்க மறக்காதீங்க’ என்று எனக்கு மட்டுமே கேட்கத்தக்கதாகச் சொன்ன யோகமலர், மச்சாளின் மகளின் பக்கம் திரும்பி „அவரோட நீங்க போயச் சேர்ந்ததும் டிலேய் பண்ணாம அவரை அனுப்பிவிடுங்க அவர் தூங்கனும்ங்க குட்பை என்று சொல்லி அவள் பஸ்ஸில் ஏற தோழியும் ஏறினாள்.

பஸ்ஸிற்குள் இருந்து யோகமலர் கைகாட்ட அவளுக்காக காத்திருந்தது போல பஸ்சும் புறப்பட்டது.

மச்சாளின் மகளின் முகத்தைப் பார்த்தேன்.நிறையக் கேள்விகளுடன் அவள் காத்திருப்பது போல எனக்குத் தோன்றியது.

„சித்தப்பா நிறைய நிறைய உங்களோடை கதைக்க வேண்டியிருக்கு வீட்டை போய் கதைப்பம், இங்கை வெண்டாம்.நான் இண்டைக்கு படத்துக்கு வராமல் விட்டிருக்கலாம் என்றவள் கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

மச்சாளின் மகள் இருக்கும் இடமான ரோபாயோ வுக்கூடாகப் போகும் பஸ் வர அதில் ஏறினோம்.அவளும் நானும் அருகருகாக உட்கார்ந்திருந்தோம்.

கொஞ்ச நேரம் பஸ் யன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தவள் „சித்தப்பா அவளுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்ன உறவு உண்மையைச் சொல்லுங்கள் „ என்று கொஞ்சம் கோபமாகக் கேட்டாள்.

அவள் என்னிடம் இப்படியான கேள்வியைத்தான் கேட்பாள் என்று எதிர்பார்த்திருந்த நான் „ என்னோடை வேலை செய்யிற பிள்ளை ஒரு பிரண்ட் மாதிரி அவ்வளவுதான்’ என்றன்.’அப்பட்டமான பொய் சொல்லுகிறீர்கள், இவளுக்குத்தான் நெற்றி உச்சியிலும் நெற்றியிலும் கோவிலில் வைச்சு குங்குமப் பொட்டு வைச்சு விட்டனீங்களோ „ என்றாள்.நான் அவள் சொன்னதைக் கேட்காத மாதிரி இருந்தன்.

„நீங்கள் அமைதியாக இருக்கிறதிலையிருந்தே தெரியுது அவளை நீங்கள் பெண்டாட்டி மாதிரி வைச்சிருக்கிறது போகிற போக்கைப் பார்த்தால் அவளுக்குத் தாலி கட்டினாலும் கட்டுவியள் போல என்று அவள் சொன்னதும்; எனக்குப் பகீர் என்றது.

„ச்சா அப்படியொன்றுமில்லை சும்மா தேவையில்லாமல் கற்பனை பண்ண வேண்டாம் நான் பிழைவிடக்கூடிய ஆளலல்ல „ என்றதும் ,அவள் „தெல்லிப்பழையில் பார்த்த அம்மாவின் மச்சான் அல்ல நீங்கள் தலைகீழாக மாறிவிட்டீர்கள், அது என்ன சித்திக்கு தைச்சு அனுப்பிய கம்பாயம் மாதிரி அவளுக்கும் தைப்பிச்சுக் கொடுத்திருக்கிறியள்.சித்தி தலைமயிரை முன்னுக்கு விட்டு படம் எடுத்து அனுப்பிய மாதிரி அவளும் அதே என்னுடைய வீட்டிலை இருக்கேக்கை தலைமயிரை முன்னுக்கு விட்டிட்டு இருக்கிறா, அது எனக்காகத்தான் என்னை வெறுப்பேற்றச் செய்கிறா என எனக்குத் தெரியும் , அது புடிக்காததாலைதான் நான் படத்துக்கு வரேலை என்று சொன்னனான்.நீங்கள் அவளின்ரை தோளிலை தலைவைச்சு நித்திரை கொண்டதையும் கட்டிப் பிடிச்சதையும் நானும் பார்த்துக் கொண்டிருந்தனான்’ என்று அவள் சொல்லச் சொல்ல அவள் சொல்வதைக் கேட்க விருப்பமில்லாவிட்டாலும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தன்.

தொடரும்.

 

 

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *