நடுகைக்காரி!…..தொடர் 12 ….. ( குறுநாவல் ) …. ஏலையா க.முருகதாசன்.

தொடர் 12
ஞானம் நேற்றும் வந்தவன் இன்றைக்கும் ஏன் வருகிறான் என யோசித்த மார்க்கண்டு’ என்ன ஞானம் அடிக்கடி இப்ப என்ரை தோட்டத்திற்கு வாறாய் நீ விசயமில்லாமல் வரமாட்டியே „ என்று மார்க்கண்டு கேட்க ,’இல்ல சும்மாதான் வந்தனான், நாளைக்கு எங்கடை வெங்காயத்துக்குள்ளை புல்லுப் பிடுங்க வேணும் என்று சொன்னதும் „ பாறு வெட்கத்துடன் தலையைக் குனிய மற்றையவர்கள் கிலுக்கென்று சிரிச்சதை ஞானம் ஏன் இவர்கள் சிரிக்கிறார்கள் என்பது தெரிஞ்சிருந்தும் தெரியாத மாதிரி பாவனை செய்து கொண்டே அதுதான் இவையை நாளைக்கு புல்லுப்பிடுங்கப் கூப்பிடுவம் என்று வந்தனான் „ என்று அவன் ஏதோ இப்பத்தான் கேட்பதுபோல நடித்தான்.
பாறுவும் இன்னும் இரண்டு பேர் வந்தால் போதுமென்று காலையிலேயே அவன் அவர்களுக்குச் சொல்லி வைச்சுவிட்டான்.
இப்ப பாறுவும் அவனும் மற்றையவர்களும் நன்றாகவே நடிச்சார்கள். தனலக்சுமி என்ற தனம் „ தம்பி நாளைக்கோ, நாளைக்கு ஒரு இடத்திற்கு போறனெண்டு இருக்கிறன், எதுக்கும் இஞ்சை வேலை முடிஞ்சு போகேக்கிலை முடிவைச் சொல்றன் „ என்று அவள் நடிக்க பாறுவும் ஞானத்தைக் கள்ளப் பார்வை பார்த்துக் கொண்டே „நாளைக்கு புல்லுப் பிடுங்கிறதுக்கு இண்iடைக்கு சுடுகுது மடியைப் பிடி என்பது போல வந்து சொன்னால் நாங்கள் என்ன செய்யிறது,நானும் வாறது ஐமிச்சம் என்று சொல்ல,ஏற்கனவே பாறுவைப் பற்றியும் ஞானத்தைப் பற்றியும் மார்க்கண்டு காற்றுவாக்கில „என்ன மார்க்கண்டர் சுப்பையற்றை மதவடிப் பிரபு அந்த புது நடுகைக்காரிப் பெட்டை தோட்ட வேலைக்கு வரத்தொடங்கிய பிறகு அடுக்கடி அது எங்கை வேலை செய்யுதோ அந்த தோட்டத்திற்கெல்லாம் போறாராம் அது
மட்டுமே சீனியம்மான் கடையிலும் லிங்கத்தின்ரை கடையிலும் வடை வாங்கிக் கொண்டு போய்க கொடுக்கிறார்ராமே,முருக்கை இலையும் சீக்காய்ப பனங்காயும் சீவித் தீத்தின கிடாய்மாதிரி தம்பி திமிறிக் கொண்டு திரியிறார் போல சுப்பையர் தலையிலை இனித் துண்டைப் போடப் போறார் என்று சிலர் சொன்னதை மார்க்கண்டு கேட்டும் கேளாதமாதிரி அதையும் அவதானமாக புதினம் சேர்க்கும் பகுதியில் சேர்த்துத்தான் வைச்சிருந்தார்.
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஞானம் ஆராய்வதும் இல்லை அதற்காக மெனக்கெடுவதும் இல்லை.ஆனால் தன்னைப் பற்றியும் பாறுவைப் பற்றியும் கதை பரவத்தான் போகிறது என்பதும் அவனுக்குத் தெரியும். அதற்காக தன்னைப் பற்றி அவர் என்ன நினைப்பார் இவர் என்ன நினைப்பார் என்பதற்காக அவன் கவலைப்படுவதும் இல்லை.
மார்க்கண்டுவுடன் கதைச்சுக் கொண்டிருக்கும் போதே, புல்லுப் பிடுங்கிதலை முடிச்சுக் கொண்ட நடுகைக்காரிகளில் ஒருத்தியான தனம் „ வேலை எல்லாம் முடிஞ்சுது, நாங்கள் போகப் போறம்’ என்று சொல்ல மார்க்கண்டு அவளின் கையில் சம்பளத்தைக் குடுத்து பகிர்ந்து எடுங்கள்’என்கிறார்.
ஞானமும் அந்த இடத்தைவிட்டு போகத் தொடங்குகிறான்.போகும் போது அவனின் கண்ணும் அவளின் கண்ணும் பேசிக் கொள்கின்றன.அவள் தலையாட்டுகிறாள்.அவன் கண்களால் வீதியில் காத்திருப்பதாக கண்களாலும் இமையாலும் சொன்னதை அவள் புரிஞ்சு கொள்கிறாள்.
கிணத்து ஆடுகால் மரத்தோடை சாத்தியிருந்த தனது சைக்கிளை எடுக்கப் போன சந்திரன் அங்கை ஐஞ்சு பித்தளை மூக்குப்பேணிகளை கழுவுp சாக்குக்கு மேல் கவிழ்த்து
வைச்சிருப்பதைக் கண்டதும் ஒருபுறம் மகிழ்ச்சியும் வியப்பும் கலக்க அவற்றை உற்றுப் பார்க்கிறான்.
நேற்றுப் பாறு தண்ணீர் குடிக்க சிரட்டையை எடுத்த போது அதை பறிச்சு எறிந்துவிட்டு முறிந்த மரமொக்கில் கொழுவியிருந்த பித்தளை மூக்குப் பேணியில் தண்ணீரை வார்த்துக் குடுத்ததை நினைச்சுப் பார்க்கிறான்.
மார்க்கண்டு மாமாவிடம் ஏதோ ஒரு மாற்றம் நடந்திருக்கு என்று யோசித்தவாறு பாறுவைக் கேட்டு தெரிஞ்சு கொள்ளலாம் என்று யோசித்தவன் திரும்பி பாறுவுக்கு கையைக் காட்டிவிட்டு சைக்கிளை வரம்பினில் ஓட்டிக் கொண்டு போகிறான்.
„என்னடி பாறு உன்ரை மகராசன் கையாலை சிக்னல் குடுத்திட்டுப் போறார் இண்டைக்கும் சைக்கிள் சவாரிதானோ’ என்று தனம் கிண்டலடிக்கிறாள்.
ஞானம் பாறு வரும் வரைக்கும் வீதியில் சைக்கிளில் ஏறி இருந்தபடி ஒரு காலை நிலத்தில் ஊன்றி வைச்சுக் கொண்டு காத்திருக்கிறான்.வரம்பினில் நடந்து கொண்டே „அவரோடை நான் இப்ப ஆனந்தா பேக்கறிக்குப் போகிறன்’ என்று பாறு சொல்ல’ என்ன பாண் வாங்கவா’என்று இன்னொரு நடுகைக்காரியான லக்சுமி கேட்க „இல்லை அவர் பேக்கறி முதலாளியின்ரை மகளிட்டை சிங்களம் படிக்கப் போகிறார் அதை நோட்டம்விட நான் போகிறன்’ என்று பாறு சொன்னதும்’ அவரையாடி நீ சந்தேகப்படுகிறாய் „ என்று லக்சுமி கேட்க, சந்தேகப்படேலை பேக்கறி முதலாளியின்ரை மகள் எப்படியான ஆள் என்று „ பார்க்கப் போகிறன்.’நீ சந்தேகப்படுவது உன்ரை ஆளுக்குத் தெரியுமாடி’ என்று தனமும் கேட்க’ தெரியும்….ஆனால்’ என்று பாறு இழுக்க’ ஏன்ரி உனக்கு விசரே அவர் சிங்களப் படிக்கப் போறதைப் பார்க்கப் போறன் எண்டு சொன்னால் அதிலை ஒரு நியாயம் இருக்கு, ஆனால் நோட்டம்விடப் போகிறன் என்றது பிழையடி, நீ யார் என்றதும் அவர் யாரென்றதும் உனக்குத் தெரியுந்தானே அப்படியிருந்தும் ஊர் உலகத்தை அவற்றை ஆட்களைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் உன்னை
விரும்புறது மட்டுமல்ல, உன்னைத்தான் கல்யாணம் கட்டுவன் என்று உனக்குச் சத்தியமும் செய்து தந்திருக்கிறார்……அவரைப் போய்…. ‘
„ நீ இப்ப கொஞ்ச நாளாகத்தான் தோட்ட வேலைக்கு வந்தனி ஆனால் நாங்கள் நாலைஞ்சு வருசமாக தோதரை அம்மான் கோவில் எல்லையிலையிருந்து அளவெட்டி வயல்வரை தோட்ட வேலைகளை செய்து வருகிறம்.அம்பனைச் சந்திக்கு வடமேற்கு மூலையில் இருப்பவர்கள் சாதாரண ஆட்களல்ல.எல்லாம் பார்ப்பவர்கள் அங்கையிருந்து வந்தவர்தான் உன்னுடைய ஆள்.அவரைப் போய் சந்தேகிக்கிறியே பொறு அவரிட்டையே சொல்லறன் „ என்று தனம் சொன்னதும்’ நல்லாய்ச் சொல்லுங்கோ அவர் என்னிடம் கோபிக்கமாட்டார்’ என்று எகத்தாளமாக பாறு தனத்திற்கு பதில் சொல்கிறாள்.
வயலைவிட்டு வெள்ளவாய்க்காலுக்குள் இறங்கி நடந்து மேலே வந்து வீதியில் ஏறவும் அங்கை ஞானம் தனக்காக காத்திருப்பதைக் காண்கிறாள் பாறு.
ஞானத்தைக் கண்ட லக்சுமி’ நீங்கள் ஆனந்தா பேக்கறி முதலாளியின்ரை மகளிட்டைச் சிங்களம் படிக்கப் போறதை உங்கடை பாறு நோட்டம்விட வாறாளாமே, உங்களுக்குத் தெரியுமா „என்று கேட்க எனக்குத் தெரியுமக்கா, அவ அப்படி நோட்டம் விடுவது பிழையில்லைத்தானே அது அவாவின்ரை உரிமையக்கா,தன்னுடைய ஆள் தன் பார்வையில் இருக்க வேண்டு என்று நினைப்பது சரிதானே ,என்னுடைய பாறு என்னை நோட்டம் விடுவதையோ சந்தேகப்படுவதையோ நான் விரும்புகிறன் கோபிக்க மாட்டன்’ என்று ஞானம் சொன்னதும் நடுகைக்காரிகள் வியப்புடன் மகிழ்ச்சியடைந்தாலும் அதைவிட ஞானம் தங்களை அக்கா என்று வயதுக்கு மதிப்புக் குடுத்து கதைச்சது இன்னும் அதிகப்படியான சந்தோசத்தை அவர்களுக்கு குடுத்தது.
„தம்பி எங்களை எங்களிலும் பார்க்க வயசுக்கு குறைஞ்சவையே பேர் சொல்லியும் நீ வா போ என்று
கூப்பிடுறவை ஆனால் நீங்கள் எங்களையும் சக ஆட்களாக மதிச்சு கதைக்கிறது உண்மையிலை சந்தோசமாயிருக்குது“ என்று தனம் சொல்கிறாள்
எல்லாரும் நினைக்கினம் நாங்கள் துப்பரவாய்ப் படிக்காதவை சுத்தமில்லாத ஆட்கள் என்று, பாறு எஸ்.எஸ்.சி வரை படிச்சு சோதனை எடுத்தவள்,மிச்ச ஆட்கள் நாங்கள் மூன்று பேரிலை நான் எஸ்.எஸ்.சி வரை படிச்சனான் ஆனால் சோதனை எடுக்காமலே பள்ளிக்கூடத்தாலை நின்றிட்டன்.நான் யூனியன் கொலிஜ்ஜிலைதான் படிச்சனான் இவையும் அங்கைதான் படிச்சவை ஆனால் எட்டாம் வகுப்புவரையும் படிச்சிட்டு விட்டிட்டினம்……’
„எல்லாரும் நினைக்கினம் எங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாதென்று.எங்களுக்கு எல்லாம் தெரியும்.இங்கிலீசில கையெழுத்துப் போடவும் தெரியும்.ஏனென்றால் நாங்கள் படிச்சது யூனியன் கொலிஜ்ஜில.
„நாங்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருக்க வேண்டுமென்று சிலர் நினைக்கினம்.நாங்கள் நடுகைக்காரிகள் தோட்ட வேலை செய்பவர்கள் என்பதால் அப்படி நினைக்கினம்.எங்களை அமத்தி வைக்க விரும்பினம்….’
„உண்மையிலை மனம் விட்டுச் சொல்றம், நீங்கள் யார் எவர் என்று பார்க்காமல் எல்லாரையும் மதிக்கிறியள், இப்ப எங்கடை பிள்ளையான பாறுவை விரும்பிறியள்.அவள் உங்களிலை சரியான நம்பிக்கை வைச்சிருக்கிறாள்.அவளை எந்த நிலையிலும் கைவிட்டிடாதையுங்கோ….’
„எங்களுக்கு நம்பிக்கையிருக்கு நீங்கள் போரடி வெல்லுவீர்களென்று’ தனம் ஞானத்தைப் பார்த்துச் சொல்லிக் கொண்டே நடக்க எல்லோருடனும் சேர்ந்து சைக்கிளை உருட்டிக் கொண்டு ஞானம் பாறுவின் அருகாக நடந்து கொண்டிருந்தான்.
தனம் சொல்லி முடிஞ்சதும் தனது கண்களில் ததும்பிய கண்ணீரை சீலைத்தலைப்பால் துடைக்க தன்னுடைய காதல் வெல்ல வைக்க வேண்டுமென்ற விருப்பத்தை நெகிழ்ச்சியுடன் சொன்ன தனத்தின் வார்த்தைகளால் பாறுவும் நெகிழ்ந்து அவளின் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது.
ஞானம் எவரைப் பற்றியும் கவலைப்படாமல் பாறுவின் கண்ணீரைத் துடைத்துவிடுகிறான்.ஞானமும் பாறுவும் தனியாக வரட்டும் என்பதற்காக „நாங்கள் போறம் பாறு, நீங்கள் ஆறதலாக வாருங்கள் நாங்கள் இளியாம்பி கடையிலை சாமான்களும் வாங்க வேணும் அங்கை சம்பளக் காசை மாத்திப் போட்டு நாளைக்குத் தரவா’ என்று தனம் கேட்க,’ஓமக்கா அது பிரச்சினை இல்லை,நாளைக்குத் தாங்கோ’ என்று பாறு சொல்கிறாள்.
அவர்கள் கொஞ்சத்தூரம் போனதும் பாறுவைச் சைக்கிள் காண்டிலில் ஏற்றிய ஞானம் அவர்களையும் கடந்து சைக்கிளில் போய்க் கொண்டிருந்தான்.
ஞானமும் பாறுவும் சைக்கிளில் வருவதைப் பார்ப்பதற்காகவே லோன்றி சின்னக்கண்டுவும் லிங்கம் கபே லிங்கமும் பாலத்திலை நிற்கிறார்கள்.
அவர்கள் நிற்பதைக் கவனித்த ஞானம் அவர்கள் பார்த்தால் என்ன என்பது போல லிங்கத்தையும் சின்னக்கண்டுவையும் நேராகப் பார்த்துவிட்டு வேகமாக பாறுவுடன் சைக்களில் போய்க் கொண்டிருந்தான்.
யூனியன் கொலிஜ் சேர்ச்சடிக்கு வந்ததும் „ இதிலை இறக்கிவிடுங்கள் நான் பேக்கறிக்க நடந்து வாறன், சில நேரம் அப்பா கடையில சாமான்கள் வாங்கவெண்டு சைக்கிளிலை வாறவர், நான் முன்னுக்குப் போறன் நீங்கள் மெதுவாக பின்னாலை வாருங்கள் „ என்று பாறு சொல்ல பாறுவை
இறக்கி விட்டிட்டு கொஞ்சம் தாமதிச்சு ஞானம் சைக்கிளில் போகிறான்.
பாறு நடந்து போனதைப் பார்த்த தெல்லிப்பழைச் சந்தியடியில் வாடகைக்கு கார் விடுபவர்களில் ஒருத்தர்’ உது யாரென்று தெரியுமே தவசியின்ரை மோள், நான் கேள்விப்பட்டனான் ஆரோ பொடியனோடை சைக்கிளிலை சுத்தித் திரியுதாம் என்று …..ஆ….அங்கை வாறானே அந்தப் பொடியன்தான் பசுவுக்குப் பின்னாலை நாம்பன் வருது „ என்று கிண்டலாகச் சொல்வது பாறுவின் காதில் விழ,அவள் கோபத்துடன் கடைக்கண்ணால் பார்த்து சொன்னது யார் எண்டு கண்டுவிடுகிறாள்.
ஞானமும் பாறுவும் ஆனந்த பேக்கறியடிக்குப் போய்ச் சேர்கையில் பேக்கறி முதலாளியின் மகள் காசுப் பட்டடையில் நிற்பதைக் கண்டதும் ஞானம் „குட் ஈவினிங் „என்று சொல்ல முதலாளியின் மகளும் சொல்லிவிட்டு „பிளீஸ் கம்’ என்று ஞானத்தை அழைக்க, „சால் ஐ கம் வித் கிம்’ என்று பாறு
ஞானத்தை காட்டிக் கேட்க,பேக்கறி முதலாளியின் மகள் முகத்தை அழகாக திருப்பி „யா, கூ இஸ் சி „ என்று கேட்க,’சி இஸ் மை லவ்வர் „ என்று ஞானம் பதில் சொல்ல வியப்புடன் பாறுவைப் பார்த்த முதலாளியின் மகள் „நோ புரபளம் „…என்றவள், யூ ஆர் வெரி பிரிட்டி கேர்ள்’ என்கிறாள்.பாறு புன்முறவலுடன்,…தாங்யூ என்கிறாள். மூவரும் உள்ளே போகிறார்கள்.
(தொடரும்)
![]()