கதைகள்
பாலை_நிலா!….. 04 …. ( நாவல் ) …. க. ஷியா.



அதன் பின்னர் கதீஜாவின் எஜமானன் மீண்டும் அந்த இலங்கைச் சாரதியை வீட்டுக்கு அழைத்து கதீஜாவோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றால் பத்தாயிரம் றியால்களைத் தந்து விட்டுச் செல்ல என்று கதீஜாவிற்குச் சொல்லவே அவளும் சலிக்காமல் வாதாடினாள். இப்படி உறக்கம் திறந்து உழைக்கத் தன்னால் முடியாது. தொழிலுக்குத்தான் வந்தேன் இப்படி அடிமாடாகிச் சிதைய வரவில்லை என்று அழுதாள். ஆனாலும், அவர்களுக்குள் கருணை பூக்கவில்லை. இனி என்ன வழி எப்படி இதிலிருந்து மீள்வது என்று அறியாமல் மொழிபெயர்க்க வந்த இலங்கைச் சாரதியிடம் அவளின் நிலை பற்றியும், குழந்தைகள் செய்யும் கொடுமைகள் பற்றியும், எஜமானி தன்னை வைத்துத் தினமும் மசாஜ் செய்யச் சொல்லி கஸ்ரப்படுத்துவது பற்றியும் சொல்லி அழுதாள். ஆனாலும் அந்தச் சாரதியால் என்ன செய்ய முடியும்?
வறுமையால் வந்து விட்டோம். பொறுமையாக இருங்கள் சகோதரி இரண்டு வருடங்கள் கண்ணை மூடித் திறப்பதற்குள் ஓடி விடும் என்று ஆறுதல் கூறியவனாக அச்சாரதி அங்கிருந்து விடை பெற்றார்.

இப்படியே அவதிகளுக்கு மத்தியில் இரண்டு மாதங்கள் கழிந்தது. கதீஜா கடைகளுக்கோ, மாலுக்கோ சென்று வரும் வழிகளில் பொலிஸ் நிலையம் எங்கிருக்கிறது அதை அடைய எப்படிச் செல்ல வேண்டும். அந்தப் பாதைகளில் டெக்ஸி வண்டிகள் ஏதாவது திரிகிறதா என்றெல்லாம் அவதானிக்க ஆரம்பித்தாள். இப்படி இருக்கையில் ஒருமுறை எஜமானன் அவரது சகோதரியின் வீட்டுக்கு கதீஜாவை அழைத்துச் செல்லவே அங்கு இன்னும் பல இலங்கைப் பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக இருக்கக் கண்டாள். அவர்கள் அனைவரும் கதீஜாவைப் பார்த்து முதலில் கேட்ட கேள்வியாவது.
இங்கு இவர்கள் வீட்டில் எப்படி வேலை செய்கிறாய். கொஞ்சம் கவனமாக இருந்து கொள் உன்னுடைய எஜமானன் சற்று நடத்தை சரியில்லாதவன். இந்தக் குழந்தைகள் இதற்கு முதலில் இருந்த வேலைக்காரியை மிகவும் சித்திரவதை செய்தவர்கள். என்றெல்லாம் சொல்லவே கதீஜா இன்னும் பயத்தின் உச்சத்தில் நின்றாள்.
அது சமயம் ஒரு பெண் சொல்கிறாள் உன் கிழவனை (எஜமானன்) சமாளித்துப் போனாய் என்றால் உன்னை ராணி மாதிரி வைத்துக் கொள்வான். இரண்டு வருடங்கள் கழித்து நீ நாடு திரும்பும் போது நல்ல செல்வாக்கோடு போகலாம் என்றாள். இதைக் கேட்ட கதீஜாவுக்கோ ஆத்திரம் தலை குடைந்தது.
அந்தப் பெண்ணைப் பார்த்துக் கதீஜா சொன்னாள் இந்த மானம் கெட்ட பிழைப்பு பிழைப்பதற்கு நம் நாட்டில் பிச்சையெடுக்கலாம் அக்கா. நான் எனக்குப் பயிற்சி நிலையத்தில் சொல்லித் தந்தது போல் பொலிஸில் சென்று வீடு மாறப் போகிறேன். அதற்கு வழி சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் என்றாள். அதற்கு அவர்கள் சொன்னார்கள் அது அப்படிச் செய்வது என்றால் டவுனுக்குச் செல்லும் போது அவர்கள் கவனிக்காத நேரம் பார்த்து நீ ஒழித்து ஓடிவிடு வீதிகளில் தோறும் பொலிஸ் வண்டிகள் நிற்கும் அதை நோக்கி ஓடிச்சென்று உன் நிலையை அவர்களிடம் சொன்னால் அவர்கள் காவல் நிலையத்தில் கொண்டு உன்னை விசாரித்து எம்பேஸில் சேர்த்து விடுவார்கள். அதன் பிறகு நீ நாட்டிற்கு செல்லலாம். அல்லது வீடு மாறி வேலை செய்யலாம் என்றார்கள். அப்போது கதீஜா சென்னாள் நாட்டிற்குச் செல்ல நான் விரும்பவில்லை எனக்குத் தொழில் தான் வேண்டும் ஆனால் தொந்தரவு இல்லாத இடத்தில் இருக்க வேண்டும் என்றாள்.
அவர்களின் அறிவுரை எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டவளாக வீதி வேலைக்கு வரும் பலருக்கு கடிதம் மூலம் உதவி கேட்டு பல முயற்சிகள் செய்த போதும் மொழி தெரியாத காரணத்தால் யாருடைய உதவியும் அவளுக்கு கிடைக்கவில்லை. ஒரு நாள் காலையில் எஜமானி சொன்னாள் கடைக்குப் போய் காலை உணவு வாங்கி வரும் படி கடைக்குச் சென்ற அவளோ அவர்களிடமும் உதவி கேட்டாள் கிடைக்கவில்லை. அன்றே அவள் முடிவெடுத்தாள் உடனே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று. அதுபோலவே எஜமானிக்குச் சாப்பாட்டைக் கொடுத்து விட்டு அவளது முகக்கவசத்தை அணிந்து கொண்டு தன் ஆடைகள் இருந்த பையையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தாள் கதீஜா.
ஓட்டம் பிடித்தவளுக்கோ பொலிஸ் நிலையம் வெகு தூரமாக இருந்ததால் ஒழிந்து ஓடக்கூடிய வகையில் பாதையில் மறைவுகளோ வீடுகளோ இல்லை காரணம் வெறும் பாலை வனத்தினாலான வீதிகளே அவை ஆகையால் எதுவானாலும் வீதியூடகத்தான் செல்ல வேண்டும். அப்படிச் செல்லும் வழியில் தனது எஜமானன் கண்டு விட்டால் மரண அடி நிச்சயம் என்று மனதுக்குள் புழுவாகத் துடித்தபடி வீதியில் வரும் வாகனங்களுக்குக் கை நீட்டி உதவி கேட்டாள் கதீஜா, வந்த வாகனக்காரர்கள் எல்லாம் அரபியர்கள் என்பதால் யாரும் அவளுக்கு உதவ முன்வரவில்லை. ஒவ்வொரு வாகனத்தினரும் எங்கே போகிறாய் என்று கதீஜாவைக் கேட்கவே அவளும் வெள்ளெந்தியாக தான் பொலிஸ் நிலையம் செல்ல வேண்டும் உதவுங்கள் என்று அழுதழுது கேட்கவே பொலிஸா முடியாது, முடியாது என்று அவளைப் புறக்கணித்து விட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.
வெகு தூரம் ஓடிக் களைத்தவளாக நின்றிருந்த கதீஜாவுக்கோ இப்போது எவ்வகையிலாவது ஒழிந்து கொள்ள ஒரு வாகனம் வேண்டும். தட்டுத்தறி கெட்டவளாக பாலை வீதியில் நின்று
“””” ஓ…….. என்னுடைய ரப்பே
நான் உன்னை நம்பி வந்தவள்,
நீ உனது அருள் கொடைகளால் இந்த பாலைவனத்தைக் கூடப் பசுமையாக்க வல்லவன். இங்கு இத்தனை உயிர்களைப் பாதுகாக்கிறாய். நான் இப்போது நிராயுதபாணியாக இவ்வீதியில் நிற்கிறேன். எனக்கு உன்னடியார்களில் சிலர் தீங்கு விளைவித்து விட்டார்கள் அவர்களிடமிருந்து மீளவே இப்போது நான் போராடுகிறேன். நீயே என்னைப் பாதுகாக்கப் போதுமானவன். நீ என்னைப் பொருந்திக் கொண்டு தீனில் (நேரிய வழியில்) நிலைக்கச் செய்தது உண்மையானால் எனக்கு இப்போது ஒரு வழியைக் காட்டு இறைவா……..

என்னை வேட்டைக்காரர்களிடமோ, காமுகர்களிடமோ, எனது எஜமானனிடமோ சிக்க வைத்து விடாமல் பாதுகாத்து நீ யாரையெல்லாம் நீதியாளர்களாகக் காண்கிறாயோ அவர்களிடம் என்னை ஒப்படைத்து விடு என் இறைவா””””
என்று வானை நோக்கி இரு கரங்களையும் உயர்த்தி அழுது பிரார்த்தனை செய்தவளாக, நின்றவளுக்கு தன் மனதில் ஒரு எண்ணம் குறுக்கறுக்கிறது. அவளின் மனம் சொல்கிறது. கதீஜா, உடனே நீ முன்னோக்கி ஓடத் தொடங்கு இங்கு ஒரு நொடியும் தாமதித்து விடாதே என்று, அவளும் தனது பயணப் பையைக் கையிலெடுத்தவளாக ஓடத் தொடங்குகிறாள். பாலையின் அணல் காற்று அவள் முகத்தில் அறையவே கண்ணீர்த் துளிகளை குளிப்பாட்டுகிறது வியர்வைத் துளிகள். தன் அணலால் அறையும் காற்றுக்குக் என்ன கருசனையோ தெரியவில்லை அவள் கண்ணீரை வழித்து வழியெங்கும் தெளித்துப் போகிறது. கதீஜாவின் ஓட்டமும், நடையும் இன்னும் வேகமாகவே தண்ணீர்த் தாகத்தால் தொண்டைக்குழிக்குள் உள்ள நாளக்குழாய்கள் இறக்கத் துடிக்கும் ஆத்தமா போலலறுகிறது. வரண்ட தொண்டை நாளக்குழாய்களுக்குத் தூக்குக் கயிறிட்டிருக்க வேண்டும் போல அப்படி இறுகிப் போனது அவள் குரல்வளை. இனியும் இயலாது என்ற கட்டத்திலும் அவள் ஓடவே செய்கிறாள். ஓடிய அவளோ ஒரு பாலத்தின் மருங்கினை அடைகிறாள். அப்போது அங்கு ஒரு கார் வண்டி இவளைக் கண்டு வேகத்தைக் குறைத்து இவளருக்கில் ஊர்கிறது. இதைக் கவனித்த கதீஜா.
“”யா….அஹி (என் சகோதரனே)””
என்று கைகளை நீட்டவே வண்டியும் நின்றது. அவளுக்குத் தெரிந்த வகையில் அரபு பாஷையினால் தனது நிலையை விழக்கி தன்னைப் பொலிஸ் நிலையத்தில் கொண்டு சேர்த்து விடுமாறு கெஞ்சி அழுதாள். அந்த அரபிய வாலிபனும் உடனே கார் கதவுகளைத் திறந்து விட்டுக் கதீஜாவை வண்டியில் ஏறும்படி சொன்னான்.
அப்போது இனி மயக்கம் வந்து விடும் என்ற தாக நிலையில் இருந்த கதீஜாவுக்கோ அவனது வண்டியில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டியின் குளிர் பட்டதும் கொஞ்சம் தாகம் தீர்ந்து கொஞ்சம் சுகமானது. இருந்தும் தண்ணீர் அருந்தினால் போதும் என்பதுபோல் இருந்தது. அப்போது அவனிடம் தண்ணீர் கேட்டாள் கதீஜா. அவனும் அவளுக்குத் தண்ணீரைக் கொடுத்து விட்டு வண்டிடை நகர்த்தத் தொடங்கினான். அப்போதைக்கு அவளுக்கு ஒரு நிம்மதியாக இருந்தாலும் பொலிஸ் நிலையம் சென்றடைவதற்குள் பெரும் புயலைத் தாண்ட வேண்டியிருந்தது என்னவோ உண்மை தான். வண்டியில் மறைந்தவளாக வீதியில் நகர்கிறாள் கதீஜா……..
ஒளிரும்……..
க.ஷியா
![]()