கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!…. 19 …. (உண்மைக் கதை)…. ஏலையா க.முருகதாசன்.

சாப்பாட்டு நேரம் முடிய உள்ளே போவதற்காக எழுந்தோம்.எல்லோரும் போய்விட்டார்கள்.

எனது கைகளை பிடித்தபடியே எழுந்த யோகமலர்,’ நன்றிங்க’என்றாள்.எதற்கென்றேன்.எல்லாத்துக்குந்தான் என்றவள் காதுக்குள் ஒரு விசயத்தைச் சொன்னாள்.

„எனக்குப் பிரச்சனையில்லை „ என்றன்.’ ஆ…..ங்…நம்பிறன் நம்பிறன்:…உங்களோட பழகின கொஞ்ச நாட்கள்ளேயே உங்க தேவை எதுன்னு எனக்குத் தெரியும்ங்க „என்றவள் வெட்கப்பட்டு தோளிலை சாய்ந்தாள்.

வேலை மீண்டும் ஆரம்பித்தது.உதிரிப்பாக மிசினை இயக்கத் தொடங்கினன்.யோகமலரின் மிசினடிக்கு வருவதும் வேலையுமாக நேரம் போனது.வேலை முடிந்து அவளை அவளின் பஸ்ஸடியில் கொண்டு போய் விட்டிட்டு மொலக்ஸை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன்.

இன்றுடன் அந்த வேலையும் முடியப் போகின்றது.மொலக்ஸில் வேலை செய்தவர்கள் அனைவரும் என்னையும் சேர்த்து ஐஞ்சு பேரும் தமிழர்கள் என்பது ஒரு மகிழ்ச்சியான விடயமே.

எனினும் அவர்களை இனிமேல் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காது என்று எண்ணியவாறு மொலக்ஸ் கட்டிடத்துக்குள் நுழைந்து நான் வேலை செய்யும் மேசையில் உட்கார்ந்து வேலை செய்யத் தொடங்கினன்.

அப்பொழுது இரவு வேலைக்கான லீடர் மகேந்திரன் என்னை நோக்கி வந்தவர் ஒரு என்வலப்பை என்னிடம் தந்தார்.இது என்னவென்று கேட்டன் உங்களோட சலறி என்றார்.

தாங்ஸ் என்ற நான் என்வலப்பைத் திறந்து பார்க்க விரும்பாது அதை அப்படியே சேர்ட் பைக்குள் வைத்தன். மகேந்திரன் நீங்க விரும்பினா உங்க யொப்பை நெக்ஸ் மண்டேயிலையிருந்து புரசீட் பண்ணலாம் பட் தட் இஸ் யுவர் விஸ் என்றார்.

ஆனால் நான் இல்லை இனி வரமாட்டன் என்று சொல்ல அவர் ஓகே தட் இஸ் யுவர் டிசிசன் என்று சொல்லிக் கொண்டே அவர் போய்விடுகிறார்.

கை வேலை செய்ததே தவிர மனம் ஒரு நிலையில் இல்லை.சலறியாக எவ்வளவு டொலர் என்வலப்புக்குள் இருக்குமோ தெரியாது,அது எவ்வளவாக இருந்தாலும் அவ்வளவையும் மனைவிக்கு அனுப்பிவிட வேண்டும்.

வீட்டுக்கு ஒரு எலக்றிக் கேத்தல், றைஸ் குக்கர், காஸ் அடுப்பு இரண்டு ரூ இன் வன் றேடியோக்கள்,வீட்டிலை ஒரு ரூ இன் வன் றேடியோவைவிட ஒரு சின்ன பொக்கற் றேடியோவும் இருக்கிறது.

மூன்று பிள்ளைகளுக்கும் மூன்று சின்ன பொக்கற் றேடியோ தேவை.எனவே இன்னும் இரண்டு சின்ன பொக்கற் றேடியோ வாங்க வேண்டும்.மனைவிக்கும் யோகமலருக்கும் சாறிகள் வாங்க வேண்டும்.

யோகமலருக்கு தாலிகட்ட வேண்டுமென்றால் தாலிக்கொடி வாங்க வேண்டுமே என்று எண்ணிய போது மனம் பகீர் என்றது.என்ன செய்வது என்று தெரியாமல் மனம் சரியாகக் குழம்பத் தொடங்கியது.

நாளைக்கு படம் பார்க்கப் போவதற்கு யோகமலரையும் கூட்டிக் கொண்டு மச்சாளின் மகளிட்டை போக வேணும்.யோகமலரை முதன்முதலாகப் பார்க்கப் போறாள்.பார்த்தவுடன் நான் படத்துக்கு வரேலையென்று சொன்னாலும் சொல்வாள்.

யோகமலரைப் பார்த்ததும் என்ன மாதிரி நடக்கிறாளோ தெரியாது.யோகமலரும் „உங்க மச்சாளின் மகள் ஏதாவது சொன்னாங்கன்னா நானும் சும்மா இருக்க மாட்டேனுங்க’ என்று சொல்லிட்டாள்.

மச்சாளின் மகளும் சீண்டக்கூடியவள்தான்.என்ன இருந்தாலும் மச்சாளின் மகள் என்னுடைய இரத்த உறவு.ஆனால் யோகமலர் எனக்காக வாழ்ந்து எனக்கு முன்னாலேயே சாக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்.அவள் எனக்கு மனைவியாக வாழ வேண்டும் என்று துடியாகத் துடிக்கிறாள்.எனது நிலைமை போல வேறு யாருக்காவது வந்திருக்குமோ தெரியாது.

யோகமலரும் மச்சாளின் மகளும் இரண்டு பேரும் நாளைக்கு வாக்குவாதப்பட்டால் நிச்சயமாக என்னுடைய சிங்கப்பூர் வாழ்வு பற்றி மச்சாளின் மகள் தாய்க்கு கடிதம் எழுதாமல் விடமாட்டாள்.மச்சாளின் மகள் என்னோடு படித்த சக மாணவனைக் காதலிச்சுத்தான் கல்யாணம் செய்தவள்.

அவன் எம்மோடு படித்த சக மாணவியை காதலிச்சு பள்ளிக்கூடத்தைவிட்டு விலகியதன் பின்பும் அவளைக் காதலிச்சுக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும்.அவன் அவளையும் காதலிச்சு மச்சாளின் மகளையும் காதலிச்சதை அறிந்து மச்சாளுக்கும் மச்சாளின் மகளுக்கும் போய்ச் சொன்னன்.

ஒரு நாள் அவன் என்னைச் சந்திச்சு (சக மாணவியின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை) அவன் காதலிச்ச சக மாணவியை விட்டிட்டன்,உங்களின்ரை மச்சாளின் மகளைத்தான் கல்யாணம் செய்யப் போறன் என்று சொன்னான்.

நானும் அதைக் கொஞ்சமாகத்தான் நம்பினன்.ஏனென்றால் அவனைப்பற்றி எனக்குத் தெரியுமாகையால் மச்சாளிடமும் மகளிடமும் எதுக்கும் தீர விசாரித்து முடிவெடுங்கள் என்று சொல்லியிருந்தன்.

தான் காதலிக்கிறவனைப் பற்றி நான் குறை சொல்லுகிறன் என்பதில் மச்சாளின் மகளுக்கு என்மீது வெளிக்காட்டிக் கொள்ளாத கோபம் இருந்தது.அவனுடைய பெற்றோருக்கு மகன் காதலிப்பதோ கல்யாணம் செய்யப் போவதிலோ கொஞ்சமும் விருப்பமில்லை.அவர்கள் வசதியானவர்களாக இருந்தார்கள்.அவனுடைய தகப்பன் மலாயா பென்சனியர்.

ஏதோ அரைகுறை மனதுடன் அவர்கள் கல்யாணத்துக்குச் சம்மதிச்சார்கள். மச்சாளின் வீட்டிலை சாமி படத்துக்கு முன்னாலை மச்சாளின் மகளுக்கு அவன் தாலி கட்டினான் நானும் மனைவியும் மச்சாளின் தம்பியாரும் அவரின் மனைவியுமாக நின்றுதான் தாலி கட்டுதல் நடந்தது.

தாலி கட்டியவுடன் அவனின் வீட்டுக்கு நானும் மனைவியுந்தான் அவர்களிருவரையும் கூட்டிக் கொண்டு போய் விட்டனாங்கள். அவன் அவர்களுக்கு ஒரேயொரு மகன்.ஆதலால் பெரிய கற்பனைகள் இருந்திருக்கும்.ஆனால் சக மாணவியை கல்யாணம் செய்து கொள்ள மாணவியின் பெற்றோருக்கும் விருப்பமில்லை, அவனுடைய பெற்றோருக்கும் விருப்பமில்லை.

நாங்கள் கூட்டிக் கொண்டு போய் அவர்களிருவரையும் அவனின் வீட்டில் விட்ட போது ஏதோ வரவேற்றார்கள் அவ்வளவுதான்.வறுமைப்பட்ட குடும்பத்தில் தனது மகன் போய்ச் செய்திருக்கிறானே என அவர்கள் இந்தக் கல்யாணத்தை விரும்பாமல் விட்டிருக்கலாம்…

மச்சாளின் மகளையும் கூட்டிக் கொண்டு படத்துக்குப் போகப் போறேனே என நினைத்த போது பழைய நினைவுகள் வந்து மோதிக் கொண்டன.

நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியாது.யோகமலர் வாக்குவாதப்பட்டு வாய்தடுமாறி „அவர் எனக்கு தாலிகட்டப் போகிறார்’என்று கோபத்தில் சொல்லிவிட்டால்…அவ்வளவுதான்…மனம் பதை பதைத்தது.

மனதை ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்காக தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன என்று எனக்கு நானே சொல்லி மனதை ஆறுதல் படுத்திக் கொண்டன்.

சாப்பாட்டு இடைவேளை வந்தது.மேசையிலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன்.குட்டேய் லா என்று சொல்லிக் கொண்டு சுண்ணாக வம்சாவழிப் பெண்ணும் அவளுடைய தோழியும் வந்து நின்றனர்.

இன்னையோடு நீங்க வரமாட்டீங்க லா என்றவள் சாய்ச்சி என்எம்பிக்கு நீங்க போனா உங்க கேர்ள் பிரண்ட்டும் அங்கதான் அவங்களுக்கும் வேலையா என்றாள்.

ஓம் அங்கைதான் வேலை என்றன்.ஓ அப்படியா என்றவள் எனிவேய் குட்லக் லா என்று கைலாகு தர மற்றப் பெண்ணும் குட்லக் லா என்று கைலாகு தந்தாள்.

மீண்டும் வேலை தொடங்கியது.யோகமலரின் கழுத்தில் தாலிகட்டும் நாளை நினைச்ச போது மனச்சாட்சி குத்திக் கொண்டேயிருந்தது.

யோகமலர் என்மீது வைச்சிருந்த அந்தப் பாசமான காதலை நிராகரிக்க முடியவில்லை.நான் என்னை யோக்கியனாக புடம் போட விரும்பவில்லை.மனச்சாட்சிக்கும் உடலின் தேவைக்குமிடையில் நான் அல்லாடிக் கொண்டிருந்தன்.

அதிகாலை ஐஞ்சு மணிக்கு எனது வேலை முடிய, எழுந்து போய் ஒவ்வொருவராக கைலாகு கொடுத்து வேலையில் எனக்கு ஒத்துழைப்பு தந்தமைக்கு நன்றிகள் என்றன்.

பொறுப்பாளராக இருந்தவர் ஒரு சைனீஸ், அவருக்கும் நன்றி சொல்லிவிடுங்கள் என்று அவர்களிடம் இருந்து விடைபெறும் போது, மீண்டும் லீடர் மகேந்திரன் திங்கிங் எபவுட் யுவர் வேர்க் சற்றர்டே அண்ட் சண்டே யோசிங்க நீங்க விரும்பினா மன்டே வேலக்கு வாங்க குட் லக் அன்ட் குட்பை என்று சொன்னார்.

அவர்களுடன் ஐஞ்சு நாட்கள் மட்டுமே வேலை செய்தேன்..ஆனால் பல ஆண்டுகள் பழகியது போல ஒரு உணர்வு எனக்கு இருந்தது.வேலையைக் கொடுப்பவர்கள் மீது நன்றியுணர்வும் வேலையை விசுவாசமாகச் செய்யும் போதுகூட எம்மோடு வேலைசார்ந்து பழகும் மனிதர்கள் மீதும், எமது கைகள் தொட்டுணரும் சடப்பொருள்கள் மீதும் ஒரு பாசம் ஏற்படும்.வேலையில் நேர்மையீனமாகவும் ஒட்டுறவு அற்ற நிலையில் வேலை செய்பவர்களுக்கு இத்தகு உணர்வு ஏற்படுவது மிகக் குறைவு.

நான் வேலை செய்த அந்த இடத்திலுள்ள மிசின்களை ஒருமுறை பார்த்தன்.மெதுவாக நடக்கத் தொடங்கிய நான் திரும்பி மகேந்திரனுக்கும் மற்றைய இரண்டு தமிழ் இளைஞர்களுக்கும் கையைக் காட்ட அவர்களும் கையைக் காட்டினர்.

இரண்டு தமிழ்ப் பிள்ளைகளையும் திரும்பிப் பார்த்தன் அவர்களும் வேலையை முடித்து வந்து கொண்டிருந்தார்கள்.

நாங்கள் மூன்று பேருமாக மொலக்ஸ் கட்டிடத்தை விட்டு வெளியே வந்தோம்.அந்தக் கட்டிடத்தையும் மொலக்ஸ் என்ற எழுத்தையும் அதன் சின்னத்தையும் திரும்பிப் பார்த்தன்.எனக்கு இந்த வேலைக்காக சிபார்சு செய்த அந்த ஜிஇ சைனீஸ் நண்பரையும் நினைச்சுக் கொண்டன்.நாங்கள் மூவரும் பஸ்தரிப்பு நிலையத்தில் நின்று கொண்டிருந்தம்.

பஸ்களைத் தவறவிடாது பூன்லேறைவ் வீட்டுக்குப் போய் வேகமாக குளித்துவிட்டு படத்துக்குப் போவதற்கு யோகமலர் சொன்ன பஸ்தரிப்பு

நிலையத்திற்குப் போய் அவளையும் கூட்டிக் கொண்டு மச்சாளின் மகளின் வீட்டுக்குப் போக வேண்டும் என்று யோசித்துக் கொண்டு நிற்கையில், சுண்ணாக வம்சாவழிப் பிள்ளை „ உங்க பேர்சனல் மாற்றரை கேட்பதாக நினைக்காதீங்க லா நான் ஒரு விசயம் கேள்விப்பட்டன் உண்மையா „ என்று அந்தப் பிள்ளை சொல்லத் தொடங்க நான் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அந்தப் பிள்ளை சொல்லப் போவதை எதிர்பார்த்து நிற்க…

அந்தப் பிள்ளை சொன்னதைக் கேட்டுத் திகைத்துப் போயிட்டன், நான் அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை…..

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button