Featureகட்டுரைகள்

சாமானியனின் சரடு…..சரடு…3…. ( கட்டுரை )… சங்கர சுப்பிரமணியன்.

கடந்த அங்கத்தில் வெள்ளைக்காரர் பார்த்த அப்பெண் அவர் கண்ணுக்கு அழகான  பெண்ணாகத் தெரிவாளா? அல்ல பேயாகத் தெரிவாளா? நிச்சயம் பேயாகத்தான் தெரிந்திருப்பாள்.
அந்த வெள்ளையர் தலைதெறிக்க ஓடியிருப்பார். அல்லது மயக்கமுற்று கீழே விழுந்திருப்பார். ஏனென்றால் அப்படிப்பட்ட சூழ்நிலை அவருக்கு இதற்குமுன் வந்ததிருக்காது. மறுநாள் காலையில் ஊராரிடம் அவர் பார்த்ததை சொல்வார். நாம் பேய்க்கு பாதங்கள் இருக்காது என்று சொல்லித் திரிவதுபோல் அவரும் சொல்வார்.
ஆனால் வேறுவிதமாக சொல்வார்.

என்ன சொல்வார் தெரியுமா? பேய் ஏதோ ஒன்றைக் கால் பாதங்களில் அணிந்திருக்க வேண்டும். அது நடந்து போகும்போது “ஜல் ஜல்” என்று சத்தம் கேட்டது என்று அவர்
சொல்லியிருப்பார். அப்படியே பேய் கதையும் பரவிவிடும். இது ஒரு கற்பனைதான். ஆனால் பேய்க்கதை அவ்வூரில் இப்படி ஏதாவதொரு வகையில் பரவிவிடும். அங்கும் இதை நம்பாதவர்களும் இருப்பார்கள்.

பேய்க்கு இன்னொரு உதாரணத்தையும் சொல்கிறேன். ஒரு ஊரில் இரு நண்பர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவன் மற்றவனுக்கு பெரிய நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டான். அதனால் வெகுண்டெழுந்து நண்பனை
நயவஞ்சகமாக ஒரு கண்மாய் கரைக்கு அழைத்துச் சென்று கரையில் வைத்து
கொலை செய்கிறான். இந்த செய்தி ஊரெல்லாம் பரவுகிறது. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு கொலை நடந்த கண்மாய்க் கரையில் வினோதமான சத்தம் கேட்கிறது என்ற வதந்தியை ஒருவர் பரப்பினால் என்ன ஆகும்? அதன் பின் அது உண்மையாக நம்பப்பட்டு விடும்.

நாளடைவில் அந்த ஊர்க்காரர்கள் அந்த கண்மாய்க் கரையருகே தனியாக செல்லவே அஞ்சக்கூடும். இந்த சந்தர்ப்பத்தில் கொலையுண்ட நபர் கண்மாய்க் கரையில் காணப்படுவதாக ஓரிருவர் புரளியை கிழப்பிவிட்டால் ஊரில் யாரும் அந்தக் கண்மாய்க் கரைக்கு தனியாக செல்லமாட்டார்கள்.
தனியாக சென்றால் அங்கே காணப்பட்டதாக சொல்லப்படும் பேய்
ஒரு கைபார்த்து விடும் என்று அச்சம் கொள்வார்கள். இப்போது அவ்வூருக்கு
இந்த பேய்க்கதையைப் பற்ற தெரியாத ஒருவர் அந்த கண்மாய்கரை வழியாக வருகிறார் என்று வைத்துக்
கொள்வோம்.

அவர் எப்படி வந்திருப்பார்? அவர் இரவு நேரத்தில் வந்திருந்தால்கூட தனிமையைக் கலைக்க ஏதாவதொரு பாடலை பாடியபடியே பயமின்றி
வந்திருப்பார். ஆனால் அவரிடம் அவர் யார் வீட்டுக்கு வந்தாரோ அந்த வீட்டிலுள்ளவர்கள் என்ன நீங்கள் அந்த கண்மாய்க் கரைவழியாகவா
வந்தீர்கள்? நல்லவேளை ஒன்றும் நடக்கவில்லை. அங்கே ஒரு கொலை நடந்தது. கொலையுண்டவர் பேயாக சுற்றித் திரிகிறாராம். ஒன்றிரண்டு பேர் கண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் என்னவாகும்? மறுமுறை பட்டப்
பகலில்கூட தனியாக வர அச்சமடைவார். இப்படித்தான் பேய்கள் உருவாகி வாழ்ந்து வருகின்றன.

சாமிகள் மனைவி குழந்தைகள் மாமன் மச்சான் அண்ணன் தம்பி அக்கா தங்கை என்று இருப்பது போல் பேய்களுக்குள்ளும் உறவுகள் இருக்குமா? ஏனெனில் ஆட்கள் மீது சாமி வருவதுபோல் ஆட்கள் மீது பேய் வருகிறது. சாமி அருள்வாக்கு சொல்கிறது  பேயும் ஏதேதோ பேசுகிறது. சாமி மலை ஏறுவதுபோல் பேயும் விடைபெறுகிறது. இன்னொன்றை கவனித்தீர்களா? இந்த சாமிவருவதும் பேய்பிடிப்பதும் சமூகத்தில் யாருக்கு நடக்கிறது யோசித்துப் பாருங்கள். இப்படி நடப்பது சமூகத்தில் எல்லோருக்கும் நடப்பதில்லை. சாமிக்கும் பேய்க்கும் பாரபட்சம் இல்லை என்றால் சமூகத்தில் அனைவருக்கும் அல்லவா இது நிகழவேண்டும். அப்படி ஒன்றும்
நிகழ்வதில்லையே, அது ஏன்?

பேய்களுக்குள் மதம் இருக்கிறதா?
எனது பிறந்த ஊரில் உறவினரின் மனைவி ஒருவருக்கு வேற மதத்தைச் சேர்ந்த பேய் பிடித்திருந்ததாக சொல்வார்கள். அந்தப் பெண்ணின்மீது பேய் வந்ததும் அப்பெண் வேறொரு மொழியில் பேசுவாளாம். கணவனை வாடா போடா என்றுதான் அச்சமயம் அழைப்பாளாம். சாமி மலையேறியதும் சாமி வந்தவருக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் தெரியாததுபோல் பேய் வெளியேறியதும் அப்பெண்ணுக்கும் ஒன்றும் தெரியாதாம்.

அடுத்ததாக, மனிதர்களில் சாதி இருப்பதுபோல் பேயிலும் பல வகைகள் உள்ளன. மனிதனை சும்மா சொல்லக்கூடாது. மனிதர்களில் சாதி மதமென பிரித்ததைப் போல பேய்களையும் பிரித்திருக்கிறான். பேய், பிசாசு, கொள்ளிவாய்ப் பிசாசு, குட்டிப்பிசாசு, மோகினிப் பிசாசு என்று பலவகையாகப் பிரித்து நமக்கு பேருதவி செய்துள்ளான்.

(தொடரும்)

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *