திரும்பிப்பார்க்கின்றேன் – அங்கம் 11… முருகபூபதி.

வரலாற்றுப் பின்னணியில் கொழும்பு அலரிமாளிகை !
மனையும் மாயமும் சகுனமும் சாத்திரமும் ! ! 
முருகபூபதி.
நாகரீகம் வளர்ந்த பின்னர் மக்களிடத்தில் நம்பிக்கைகளும் படிப்படியாக வளர்ந்தது. இதில் மதநம்பிக்கை, இன நம்பிக்கை, மொழி நம்பிக்கை, சாதி நம்பிக்கை, பாரம்பரிய நம்பிக்கை, சோதிட நம்பிக்கை, சகுன நம்பிக்கை, குடியிருக்கப்போகும் வீட்டின் மீதான நம்பிக்கை….. இவ்வாறு பலதரப்பட்ட நம்பிக்கைகள் உலகடங்கிலும் பரவலாக காணப்படுகிறது.
யேசுகிறிஸ்து நாதர் தன்னோடு சேர்த்து 13 பேர் கலந்துகொண்ட விருந்துதான் அவரது இறுதி விருந்தானது. அத்துடன் அவர் சிலுவையில் அறையப்பட்ட அந்த வெள்ளிக்கிழமை தினத்தை ஈஸ்டர் வெள்ளி என்றும் பெரிய வெள்ளி என்றும் மக்கள் நினைவுகூர்ந்தபோதிலும், 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வந்துவிட்டால், அன்றைய நாளில் வேலைக்குச்செல்லாமல் வீட்டில் இருந்துவிடும் நம்பிக்கையை இன்னமும் மேலைநாடுகளில் குறிப்பிட்ட பலர் பின்பற்றுகிறார்கள் என்பதை அறியமுடிகிறது.
உல்லாசப் பயணிகள் தங்கும் சில உயர்தர விடுதிகளிலும் 13 ஆம் இலக்க அறைகள் இருப்பதில்லை. ஏனென்றால் அது துரதிர்ஷ்டமான (Unlucky no) இலக்கமாம் !?
தமிழ்மக்கள் புதிதாக வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கு முன்னர் பூமி பூசை உட்பட பல சமயச்சடங்குகளையும் நடத்துவதுடன், அத்திவாரக்கல்லையும் நவரத்தினங்கள் – நவதானியங்கள் கலந்து சேர்த்துத்தான் பதித்துவிட்டு, இதர கட்டுமான வேலைகளை ஆரம்பிப்பார்கள்.
சிங்கள பெளத்தர்களிடமும் இத்தகைய சடங்குகள் இருக்கின்றன. அவர்கள் வீடு நிர்மாணித்தபின்னர், புதுமனை புகுவிழாவை பெளத்த தேரர்களை அழைத்து பிரித் ஓதி தங்கள் மதம் சார்ந்த நம்பிக்கையை
வெளிப்படுத்துவார்கள். வரும் தேரர்கள் வீட்டுரிமையாளரின் கரத்தில் மந்திரித்த நூலை கட்டிவிடுவார்கள்.![]()
இந்துக்கள் அய்யர்மாரை அழைத்து, ஓமம் வளர்த்து, பூசை செய்து கும்பத்து நீரை வீடு முழுவதும் தெளித்து பிரார்த்தனை செய்து பால் காய்ச்சி விருந்தினர்களுக்கு வழங்கிய பின்னரே, சமையலறையில் சமைக்கத் தொடங்குவார்கள்.
இத்தகைய சடங்குகள் ஒவ்வொரு சமயத்தினருக்கும் வெவ்வேறுவிதமாக அமையும். அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில் நடப்பவை.
இந்தநிலையில், ஏற்கனவே மக்கள் குடியிருந்த வீடுகள் விற்பனைக்கு வரும்போது, அதனை ஏலத்தில் அல்லது வீடு விற்பனை முகவரிடமிருந்து வாங்குவதற்கு முன்னர், வீட்டின் காணி உறுதி பற்றிய விபரங்களை அறிந்துகொள்ளும் அதே சமயம், முன்னர் குடியிருந்தவர்கள் யார்..? என்பதையும், ஏன் விற்க முன்வந்துள்ளனர்…? எதற்காக ஏலத்தில் விடுகின்றனர்…? என்பதையெல்லாம் ஆராய்ந்து அறிவதும் வழக்கம்.
சட்டநுணுக்கங்கள் மட்டுமல்ல நம்பிக்கைகளும் அதற்கு ஒரு காரணமாக இருக்கும். வாங்கப்படும் வீட்டில் முன்னர் ஏதும் அசம்பாவிதம் ( தற்கொலை – கொலை – கொள்ளை ) நடந்திருந்தால் அதனை வாங்குவதற்கு தயங்குவார்கள். அல்லது அந்த எண்ணத்தையே கைவிடுவார்கள்.
தற்கொலை செய்துகொண்டவர்களின் அல்லது கொலை செய்யப்பட்டவர்களின் ஆவி அந்த வீட்டில் நடமாடக்கூடும் என்ற நம்பிக்கையினால் , அந்தத் தயக்கம் வந்துவிடும். இத்தகைய ஆவிகள் – பேய்கள் பற்றித்தான் தொடர்ந்தும் திரைப்படங்களும் பல மொழிகளிலும் வெளியாகின்றன. அவை வசூலையும் அள்ளிக்குவிக்கும் என்பதனால், அத்தகைய படங்களை தயாரிப்பவர்களும் அந்த முயற்சிகளில் ஆர்வம் காண்பித்தார்கள்.
இந்தப்பின்னணிகளுக்கு மத்தியில் இலங்கையில் மிகவும் பிரபல்யமான ஒரு மாளிகை பற்றி இந்தத் தொடரில் எழுத முன்வந்துள்ளேன்.
கொழும்பில் அலரிமாளிகை பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா..?
![]()
காலிவீதியில் கொள்ளுப்பிட்டியில் அமைந்த உல்லாசப்பயணிகள் தங்கும் பிரபல்யமான ஒபரோய் ஹோட்டலுக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த அலரிமாளிகையை , ஆங்கிலத்தில் Temple Trees எனவும் சிங்களத்தில் அலரியகஹ மந்திரய எனவும் அழைப்பர். அலரிமலர்கள் பூக்கும் மரங்கள் இந்தக்காணியில் நிரம்பியிருந்தமையால் அந்தப்பெயர் சூட்டப்பட்டு இன்றுவரையில் அழைக்கப்படுகிறது.
இந்த மாளிகையின் வரலாறு 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஆரம்பமாகிறது. பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த ஒரு பெருந்தனவந்தரிடமிருந்து கைமாறி, ஒரு பிரபல ஆங்கிலப்பத்திரிகையின் ஆசிரியரும் செல்வந்தருமான மற்றும் ஒருவரிடம் சென்று, 1856 ஆம் ஆண்டில் ஒரு பிரித்தானிய வெள்ளை இனத்து கனவானிடத்தில் வந்தது. அதன்பிறகு, அந்த மாளிகை பிரித்தானியரின் ஆளுகைக்குட்பட்டிருந்தாலும், இலங்கை சுதந்திரம் பெற்றபின்னர், முதலாவது பிரதமராக டீ. எஸ். சேனநாயக்கா பொறுப்பேற்றது முதல் அந்த மாளிகை இலங்கையில் காலத்துக்கு காலம் தெரிவாகும் பிரதமர்களின் வாசஸ்தலமானது.

இது இவ்விதமிருக்க, காலிமுகத்தில் அமைந்திருக்கும் பழைய நாடாளுமன்றத்திற்கு தேர்தல்களின் மூலம் தெரிவாகும் தொகுதிகளின் உறுப்பினர்கள் ( எம்.பி. மார் ) தங்குவதற்கு கொழும்பு -07 இல் மற்றும் ஒரு இடத்தில் சிராவஸ்தி என்ற மாளிகை குடியிருப்பும் இயங்கியது.
காலிமுகத்திடலில் வழக்கமாக மாலை வேளையில் குதிரைச்சவாரிக்குச் சென்ற பிரதமர் டீ. எஸ். சேனாநாயக்கா 1952 ஆம் ஆண்டு தவறிவிழுந்து மரணித்தார்.
அவருக்குப்பின்னர் பிரதமரான அவரது சகா, சேர். ஜோன் கொத்தலாவலையும் அதே அலரிமாளிகையை தனது உத்தியோகபூர்வ இருப்பிடமாக்கினார். எஸ்.டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்கா ( 1899 – 1959 ) ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து பிரிந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கி அடுத்துவந்த தேர்தலில் பிரதமரானபோதிலும், குறிப்பிட்ட அலரிமாளிகையை தனது இருப்பிடமாக்காமல், கொழும்பு -07 இல் அமைந்த தனது ரோஸ்மீட் பிளேஸ் இல்லத்திலேயே குடியிருந்தார்.
இந்த இல்லத்தில்தான் அவர் ஒரு பௌத்த பிக்குவால் சுட்டுக்கொல்லப்பட்டார். நல்லவேளை அந்தச்சம்பவம் அலரிமாளிகையில் நடக்கவில்லை. அவ்வாறு நடந்திருந்தால், அபசகுனம் அன்றிலிருந்தே ஆரம்பித்திருக்கும். அந்த மாளிகையை ராசியில்லாத வாசஸ்தலம் என்று அதன்பின்னர் அங்கு காலத்துக்கு காலம் குடியமர்வதற்கு வந்த தலைவர்கள் கருதியிருப்பார்கள்.
ஒரு பிரதமர் குதிரையிலிருந்து விழுந்து இயற்கை மரணம் எய்தினார். மற்றும் ஒருவர் படுகொலைசெய்யப்பட்டார்.
பண்டாரநாயக்காவின் எதிர்பாராத மரணத்தையடுத்து பிரதமரான ஒருவரைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா..? இவரும் இந்த அலரிமாளிகையில் வேண்டா வெறுப்போடு சிறிது காலம் இருந்தவர்தான். அதற்கு எந்தவொரு அதீத நம்பிக்கையும் அவருக்கு இருக்கவில்லை. இயல்பிலேயே அவரிடம் குடியிருந்த எளிமைதான் அதற்கு அடிப்படைக்காரணம்.
இலங்கையின் அரசியல் வரலாற்றைத் தெரிந்து வைத்திருக்கும் மூத்த தலைமுறையினர் இவரை நன்கு அறிவர். சமகாலத்தின் இளம் தலைமுறையினர் அவரை அறிந்திருக்கமாட்டார்கள்.
அவரது இயற் பெயர் டொன் விஜயாணந்த தகநாயக்கா. அக்கால பள்ளி மாணவர்கள் அவரை பணிஸ் மாமா எனவும் அழைத்தனர். நானும் மாணவப் பராயத்தில் அவரை அவ்வாறுதான் அழைத்தேன்.![]()
எங்கள் ஊரில் நான் ஆரம்ப வகுப்பு படித்த பாடசாலையில் மதியவேளையில் ஒரு பேக்கரியிலிருந்து ஒருவர் சைக்கிளின் கரியரில் பெரிய பெட்டியை இணைத்து அதில் எடுத்துவரும் சீனிப்பாணி தடவிய பணிஸ் மிகவும் சுவையானது. இடைவேளையில் எமக்கு உண்பதற்கு கிடைக்கும். அத்துடன் அவுஸ்திரேலியா – நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவு பெக்கட்டுகள் தலைமை ஆசிரியரின் அறையில் அடுக்கப்பட்டிருக்கும். மதியவேளையில் எங்கள் பெரியம்மா உறவுமுறையுள்ளவர் அங்கு வந்து விறகடுப்புமூட்டி பால் காய்ச்சித்தருவார்கள். பெரியம்மாவுக்கு மாதம் முடியும்போது பால் காய்ச்சிய கூலியை பாடசாலை நிருவாகம் வழங்கும்.
மாணவர்களுக்காக இந்த உபயத்தை செய்பவர் கல்வி மந்திரியான தகநாயக்கா அவர்கள்தான் என்று ஒருநாள் பெரியம்மாதான் எனக்கும் எனது மாணவப்பராயத்து நண்பர்களுக்கும் சொன்னார்கள். அன்றிலிருந்துதான் அமைச்சர் தகநாயக்காவை பணிஸ் மாமா என அழைக்கத்தொடங்கினோம்.
மக்கள் திலகம் எம். ஜீ. ஆர். தமிழக முதல்வரானதும் மாணவர்களுக்கு மதிய உணவாக சத்துணவு வழங்க முன்வந்தார். இன்றுவரையில் அந்த நடைமுறை தொடருகிறது.
அதற்காக அவரை எவரும் சத்துணவு மாமா என அழைக்கவில்லை. அவர் மக்கள் திலகமாகவே சுடர்விட்டு பிரகாசித்து மறைந்தார்.
எங்கள் அபிமானத்திற்குரிய பணிஸ்மாமா, தென்னிலங்கை காலியில் 1902 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி திரு. திருமதி முகாந்திரம் தியோனிஸ் சேபால பண்டித தகநாயக்கா தம்பதியரின்
புதல்வராகப்பிறந்தார். அதுவரையில் இவருடன் இவரது தாயாரின் கருவறையில் இருந்த மற்றும் ஒரு குழந்தையும் அன்றைய தினம் பிறந்தது.
இரட்டையர்களான இந்தக்குழந்தைகளில் விஜயானந்த தகநாயக்கா மாத்திரம் இலங்கை அரசியலில் பிரபலமானார். 1997 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி, தான் பிறந்த ஊரிலேயே மறைந்திருக்கும் இவரது எளிமையான வாழ்க்கை சொத்து சேர்ப்பதற்காக எப்பாடுபட்டாவது தேர்தல்களில் போட்டியிடுவதற்கு முன்வரும் வேட்பாளர்களுக்கு படிப்பினையாக இருக்கவேண்டும்.
கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தெரிவாகி, நாடாளுமன்றம் சென்ற பலர், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரும் கொழும்பில் குடியிருப்பதற்கு தமக்கு வழங்கப்பட்ட வீடுகளை மீள கையளிக்கவில்லை எனவும் அதற்காக அவர்களுக்கு எதிராக சட்ட நடடிவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்தி கசிந்தது.
கொரோனா வைரஸ் தொற்று பற்றிய செய்திகள் பத்திரிகை ஊடகங்களை ஆக்கிரமித்ததையடுத்து, எம்.பி. மார் தொடர்ந்தும் அடாத்தாக குடியிருக்கும் அந்த வீடுகளைப்பற்றிய செய்திகள் மறைந்துவிட்டன.
இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவும் ( இவர் அண்மையில் நடந்த க.பொ. த. சாதாரண தரப்பரீட்சையில் ஆங்கிலப்பாடத்திற்காக தோற்றியவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது ) அத்தகைய ஒருவீட்டில் வைத்துத்தான் இரண்டு தடவைகள் கைது செய்யப்பட்டார்.
இந்தப்பின்னணிச்செய்திகளுடன்தான் அலரிமாளிகைக்கு பிரதமராக ஒரு காலத்தில் வருகை தந்த, தகநாயக்காவின் வாழ்வையும் பணிகளையும் சொல்ல முன்வந்தேன்.
அவர் அங்கே வரும்போது தன்வசம் எடுத்துவந்தது, அவரது ஒருசில உடைகள் அடங்கிய சின்னஞ்சிறிய சூட்கேஸ்மாத்திரம்தான். அங்கிருந்து அவர் விடைபெற்று பஸ்ஸில் ஏறி புறப்பட்டபோதும் அவரிடமிருந்தது அதே சின்னஞ்சிறிய சூட்கேஸ் மாத்திரம்தான்!
மாணவப் பராயத்திலிருந்து எளிமையாக வாழக்கற்றுக்கொண்டிருக்கும் இவர், இடது சாரி சிந்தனைகளினால் கவரப்பட்டு முதலில் இணைந்தது லங்கா சமமாஜக்கட்சியாகும். மலையகத்தில் பசுமையை துளிர்க்கச்செய்த இந்தியத்தமிழர்களின்
வாக்குரிமை பறிப்பு உட்பட பல அநீதியான சட்டங்கள் அமுலுக்கு வந்த சமயங்களில் அம்மக்களுக்காக குரல் கொடுத்தவர்.
அன்றைய அரசாங்க சபைக்கு பிபிலை தொகுதியிலிருந்து தெரிவானவர். தனக்குச்சரியெனப்பட்டதை துணிந்து பேசுவார். செய்வார். தனக்கு எதிராக ஆளும்தரப்பு நடத்தும் வழக்குகளிலும் தனக்கென வாதாடுவதற்கு சட்டத்தரணிகளை நாடாமல் தமக்குத் தாமே நீதிமன்றில் தோன்றி வாதாடி வெற்றிபெறுவார்.
காலி மாநகர மேயராகவும் பணியாற்றியவர். காலி தொகுதியில் 1947 இலும் 1952 இலும் வெற்றிபெற்றவர். ஒருதடவை அன்றைய அரசு உடுபுடவைகளின் விலையை உயர்த்தியதை கண்டித்து, ஏழை மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு கோவணம் அணிந்து நாடாளுமன்றத்திற்கு வந்திறங்கினார்.![]()
ஆனால், சபாநாயகர் அவரை அந்த ஆண்டிகோலத்தில் நாடாளுமன்றின் உள்ளே அனுமதிக்கவில்லை.
ஆனால், சமகாலத்தில் தூய வெண்ணிற ஆடைகளை அணிந்து சொகுசு வாகனங்களில் நாடாளுமன்றம் வரும் அரசியல்வாதிகள், அநாகரீகமாக நடந்து அம்மணமாகியிருக்கிறார்கள். மிளகாய்த்தூள், கத்தி சகிதம் வந்து நாடாளுமன்றில் தோன்றி கேவலமாகப்பேசி ஆர்ப்பாட்டம் நடத்திய “அம்மணக்காட்சி” களை ஊடகங்களில் பார்த்திருக்கின்றோம்.
தகநாயக்கா , பண்டாரநாயக்கா உருவாக்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து 1956 இலும் காலி தொகுதியில் தெரிவாகி கல்வி அமைச்சரானார். அக்காலப்பகுதியில்தான் (1956 – 1959) நாம் பாடசாலையில் சீனிப்பாணி தடவிய பணிஸ் சாப்பிட்டோம். சுவையான பால் அருந்தினோம்.
எதிர்பாராத வகையில் பண்டாரநாயக்கா 1959 செப்டெம்பரில் ஒரு சரஸ்வதி பூசை காலத்தில் கொல்லப்பட்டபோது, அவரால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அன்றைய மகா தேசாதிபதி ஒலிவர் குணதிலக்கா, தகநாயக்காவை பிரதமராக்கினார். அந்த இடைக்கால அரசில் இவர் பாதுகாப்பு , வெளிவிவகாரம் உட்பட கல்வி அமைச்சையும் பொறுப்பேற்றிருந்தார்.
எனினும் இவர் அங்கம் வகித்த ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இவரது தெரிவை விரும்பவில்லை. இவருக்கு இடையூறுகளை செய்தனர்.
எளிமையை விரும்பியவர், ஊழலுக்கு எதிரானவர். இவர் பிரதமராகவும் முக்கிய அமைச்சுகளுக்கும் பொறுப்பாகவும் இருந்ததால் தங்களால் அரசியலைவைத்து பிழைக்கமுடியாது என்பது அந்த எதிர்ப்பாளர்களின் எண்ணம்.
அவர்களின் இடையூறுகளை பொறுக்கமாட்டாத பிரதமர் தகநாயக்கா அதிரடியாக சில அமைச்சர்களை நீக்கினார். அவர்களின் பதவிகளை தன்னுடன் இணைந்து பணியாற்றக்கூடியவர்களிடம் ஒப்படைக்கப்பார்த்தார்.
எனினும் அது நிரந்தரமாக சாத்தியமாகவில்லை. தாமதிக்காமல் அரசை கலைத்துவிட்டு தேர்தலுக்கு நாள் குறித்தார். அதற்கு முன்னர் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொகுதிவாரியாக தேர்தல் நடப்பதுதான் வழக்கம். .
அதனால் பணம் வீண் விரயமாவதை விரும்பாத தகநாயக்கா ஒரே நாளில் நாடு முழுவதற்கும் தேர்தல் நடத்தும் நடைமுறையை அறிமுகப்படுத்தினார்.
அவர் பிரதமராக பதவியிலிருந்த காலம் ஓராண்டுதான். ஆனால், அந்த ஓராண்டிற்குள் அவர் இலங்கை அரசியல் வரலாற்றில் முன்மாதிரியான தலைவர் என்ற பெயரையும் புகழையும் பெற்றார்.
பண்டாரநாயக்காவின் மறைவுக்குப்பின்னர், அவர் பிரதமராக அந்த மாளிகைக்குள் அடியெடுத்துவைத்தபோது அதுவரையில் அவர் பார்த்திராத பிரதமரின் படுக்கை அறையைப்பார்த்துவிட்டு, பேராச்சிரியம் கொண்டார். “ஒரு மனிதர் படுத்துறங்குவதற்கு இத்தனை பெரிய அறை தேவைதானா?
நான் தனிமனிதனாக இங்கே வந்துள்ளேன். அத்துடன் பிரம்மச்சாரி. வேறு எந்தத் தொடர்புகளும் இல்லை. படுத்துறங்குவதற்கு ஒரு சிறிய படுக்கை மாத்திரம் போதும் ” என்று அதிகாரிகளிடமும் அங்கிருந்த சேவகர்களிடமும் சொல்லியிருக்கிறார்.
ஆனால், அரசின் நடைமுறைகளை அவர்கள் அவருக்காக மாற்றவில்லை.
படுக்க ஒரு சிறிய படுக்கை – உண்பதற்கு ஒரு தட்டம் – அருந்துவதற்கு ஒரு கோப்பை – அணிவதற்கு சில உடைகள்! இவைதானே தனக்குத்தேவை. இந்த மாளிகை எனக்கு எதற்கு? என்று அவர் சொன்னபோதும் நிர்ப்பந்தங்களினால் ஏற்கநேர்ந்தது.
வெளிவிவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டமையால் வெளிநாட்டு தலைவர்கள், அமைச்சர்கள், உள்நாட்டிலிருக்கும் வெளிநாட்டு ராஜ தந்திரிகள் வந்து சந்திப்பதற்கு இந்த அலரி மாளிகைதான் உங்களுக்கு உகந்தது என அதிகாரிகள் வலியுறுத்தியமையால், அங்கு தங்குவதற்கு முடிவுசெய்தார்.
பொதுத்தேர்தல் அவர் தீர்மானித்தவாறு ஒரே நாளில் நடந்தது. இன்றுபோல் அன்று தொலைக்காட்சியோ இணையத்தளங்களோ
இல்லை. இலங்கை வானொலி தொகுதிவாரி தேர்தல் முடிவுகளை நள்ளிரவு முதல் ஒலிபரப்பத்தொடங்கும்.
பிரதமர் தகநாயக்கா அலரிமாளிகையில் இருந்தவாறு முடிவுகளை வானொலியில் செவிமடுத்தார். அதிகாலை விடிவதற்குள் வந்திருந்த முடிவுகளின் பிரகாரம் அவரது தோல்வி நிச்சமாகிவிட்டது.
விடிந்ததும், சபாநாயகருக்கும் மகா தேசாதிபதிக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்டு,” தனது பதவிக்காலம் முடிந்துவிட்டது. நான் ஊருக்குப்புறப்படுகின்றேன். மீண்டும் கொழும்புவரும் சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களை சந்திக்கின்றேன்” என்றார்.
“இன்றும் நீங்கள்தான் காபந்து அரசின் பிரதமர். தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியானதும் தேர்தல் ஆணையாளர் அறிவிக்கும்வரையில் அங்கேயே இருங்கள். ஊருக்குச்செல்லவேண்டாம்” என்று அவர்கள் வலியுறுத்திச்சொன்னபோதிலும், அவர்களின் வேண்டுகோளை அலட்சியம் செய்து, ” இவர்கள் யார் எனக்குச்சொல்வது, மக்கள் சொல்லிவிட்டார்கள். மக்கள்தான் என்னை இங்கே அனுப்பியவர்கள். அதே மக்கள் இன்று தீர்ப்புச்சொல்லிவிட்டார்கள். நான் போகிறேன்” எனச்சொன்னவர்தான் “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்று வாழ்ந்து காண்பித்த தகநாயக்கா அவர்கள்.
தன்னிடமிருந்த பழைய சிறிய சூட்கேஸினுள் தனது ஒரு சில உடைகளை மாத்திரம் எடுத்துக்கொண்டு, அலரிமாளிகையில் பணியிலிருந்த சேவகர்களிடம், ” மங் என்னாங் புதாலா” ( நான் சென்று வருகிறேன் மகன்மரே ) எனச்சொல்லிவிட்டு அந்த பிரமாண்டமான மாளிகையின் பிரதான வாயிலிலிருந்து வெளியேறி, காலி வீதியை கடந்து எதிர்ப்பக்கம் சென்று கொழும்பு புறக்கோட்டைக்குச்செல்லும் இ.போ. ச. பஸ்ஸில் ஏறிச்சென்று, அங்கிருந்து காலிக்குச்செல்லும் பஸ்கள் வந்து தரிக்கும் இடத்தில் நின்றார்.
லேக்ஹவுஸ், வீரகேசரி, ரைம்ஸ் ஒஃப் சிலோன் பத்திரிகை நிறுவனங்களிலிருந்து தேர்தல் முடிவுகளை வானொலியில் கேட்டு எழுதிக்கொண்டிருந்த ஊடகவியலாளர்கள், காபந்து பிரதமர் தகநாயக்கா அடுத்து என்ன செய்யப்போகிறார்? என்பதை அறிவதற்கு அலரிமாளிகைக்கு தொடர்பு கொண்டனர்.
அங்கிருந்துகிடைத்த பதில், “மாத்தயா கமட கியா!” ( அய்யா ஊருக்குப்போய்விட்டார்)
ஊடகவியலாளர்கள் தாமதமின்றி புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு விரைந்தனர். தகநாயக்கா பஸ் நடத்துனரிடம் பணம் நீட்டி டிக்கட் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தன்னைத்தேடி வந்த ஊடகவியலாளர்களிடம், ” இனித்தான் உங்களுக்கு அதிகம் வேலை இருக்கும். எதற்காக வீணாக என்னைத்தேடி வந்தீர்கள். திருப்பிப்போய், செய்யவேண்டிய வேலைகளை கவனியுங்கள், ” எனச்சொல்லிக்கொண்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்.
வெளியே அவரை அதிசயத்துடனும் அதிர்ச்சியுடனும் பார்த்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களிடம், ” மங் என்னாங் புதாலா” ( நான் சென்று வருகிறேன் மகன்மாரே) எனச்சொல்லிக்கொண்டு விடைபெற்றார் கல்வி மான் எனப்பெயரெடுத்து “பணிஸ்மாமா” வாக அழைக்கப்பட்ட அந்தக்கனவான்.
அவரிடமிருந்து அந்த “ மகனே “ என்ற கனிவான வார்த்தையை பெற்ற பாக்கியசாலிகளில் நானும் ஒருவன். இதுபற்றி எனது சொல்லமறந்த கதைகள் தொகுப்பிலும் விரிவாக எழுதியிருக்கின்றேன்.
மக்களின் நன்மதிப்பும் பேராதரவும் அவருக்கு தொடர்ந்திருந்தது. மீண்டும் மீண்டும் காலி தொகுதியில் வென்று நாடாளு மன்றம் வந்தார். 1989 வரையில் அவர் அங்கு வந்தார். ஆனால், காரில் அல்ல. இ.போ. ச. பஸ்ஸில்தான் வந்து திரும்பினார்.
அவ்வாறு அவர் காலி முகத்திடலுக்கு முன்பாக அமைந்திருந்த முன்னைய நாடாளு மன்றத்திற்கு அவர் வந்து திரும்பும் காட்சிகளை பலதடவைகள் பார்த்திருக்கின்றேன். அக்காலப்பகுதியில் காலிமுகத்தில் வீதி அகலமாக்கும் பணியில் சப் ஓவஸீயராக பணியாற்றினேன்.
அவர் ஒரு குடை, கைப்பை சகிதம் நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்து பஸ்தரிப்பிடத்தில் இ.போ. ச. பஸ்ஸிற்காக காத்து நிற்க்கும்போது அருகில் சென்று உரையாடுவேன். அச்சமயம் காலி வீதி அகலமாக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை அன்றைய நெடுஞ்சாலைகள் – நீர்ப்பாசன அமைச்சர் மைத்திரிபால சேனநாயக்காவின் அமைச்சரவையின் திணைக்களம் நிரந்தர ஊழியர்களாக்கவில்லை. இதுபற்றிய கோரிக்கையை அவரிடம் விடுத்துள்ளேன்.
அனைத்தையும் செவிமடுத்துக்கேட்பார். பஸ் வருகையில், “ அந்த பஸ்ஸை நிறுத்தும் மகனே “ என்பார். அதற்குள் விரித்திருந்த குடையை மடக்கிவிடுவார்.
அவர்தான் அங்கு அவ்வாறு ஏறுவார் என முற்கூட்டியே தெரிந்துவைத்திருக்கும் நடத்துனரும் வெளியே இறங்கி மரியாதை செலுத்தி ஏற்றிவிடுவார்.
புறப்படும் தருவாயில், என்னைப்பார்த்து ” மங் என்னாங் புதே” (நான் வருகிறேன் மகனே ) என்று கனிவுபொங்கச்சொல்வார்.
இந்தக்கதைகளை ஒரு நாள் என்னுடன் மெல்பனில் பணியாற்றிய காலியைச்சேர்ந்த சிங்கள நண்பரிடம் சொன்னபோது, அவர், தகநாயக்கா பற்றி மற்றும் ஒரு சுவாரஸ்யமான தகவலைச்சொன்னார்.
அந்த நண்பர் கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த பஸ்ஸில் ஒருநாள் தகநாயக்காவும் பயணித்திருக்கிறார். இடைவழியில் தேனீர் அருந்துவதற்காக அந்த பஸ் ஒரு கடை வாசலில் நிறுத்தப்பட்டதாம். இருவரும் அந்தக்கடையின் பின்புறக் காணியில் சிறுநீர் கழிக்கச்சென்றுள்ளனர்.
தகநாயக்கா ஒரு தென்னை மரத்தின் அருகில் நின்று சிறுநீர் கழித்தவாறு சிங்களத்தில் ராகத்துடன் ஒரு பாடலை பாடினாராம்.
அதன் அர்த்தம்: ” தென்னையே, நாம் உனக்கு உவர்ப்பான சிறுநீரைத்தந்தாலும், நீயோ எமக்கு சுவையான இளநீரைத்தானே தருகிறாய் ! நீ வாழ்க! உன்னைப்படைத்த இறைவனும் வாழ்க”
இலங்கை சென்ற சமயத்தில் இந்த சுவாரஸ்யங்களையும் சேர்த்து தகநாயக்கா பற்றி எனக்குத்தெரிந்த கதைகளை ஒரு சிங்கள நண்பரிடம் சொல்லிவிட்டு, ” இறுதிவரையில் அவர் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து மறைந்துவிட்டார் ” என்றேன்.
” ஆனால், அது தவறு அந்திமகாலத்தில் அவர் ஒரு முதிய ஏழை விதவைப்பெண்ணை பதிவுத்திருமணம் செய்ததாகவும் அதற்கும் ஒரு முக்கிய காரணம் இருந்ததாகவும் ” அந்த நண்பர் சொல்லி என்னை மேலும் மேலும் திகைப்பில் ஆழ்த்தினார்.
நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்களுக்கு அரச ஓய்வூதியம் கிடைக்கும். தகநாயக்கா பிரம்மச்சாரி. அதனால் அந்த ஓய்வூதியம் அவரது மறைவுடன் நிறுத்தப்பட்டுவிடும். அவ்வாறு நிறுத்தப்படாமல் யாராவது ஒரு ஏழை விதவைப்பெண்ணுக்கு கிடைத்தால் அவளது குடும்பத்தினருக்கு அது உதவும் என்பதனால், அந்திமகாலத்தில் அவ்வாறும், எவரும் நினைத்தும் பார்த்திருக்க முடியாத ஒரு நல்ல பணியை தீர்க்க தரிசனத்துடன் செய்துவிட்டுத்தான் எங்கள் தாயகத்தின் கர்மவீரர் தகநாயக்க விடைபெற்றுள்ளார்.
என்னை ” புத்தே ” என்று அழைத்த அந்த சிங்களத் தந்தைக்கு மாத்திரம் இந்தப்பதிவை சமர்ப்பிக்கவில்லை!
அந்த அலரிமாளிகைக்காக கடந்த காலங்களில் அடிபட்ட இன்றைய இலங்கை சிங்களத்தலைவர்களுக்காகவும் இதனை இங்கு சமர்ப்பிக்கின்றேன்!
சகுனம், சாத்திரம் பார்க்கும் இன்றைய தலைவர்கள் அந்த அலரிமாளிகையில் நிரந்தரமாக குடியிருப்பதற்கு தற்போது விரும்புவதில்லை போலும்!
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரில்மாதம், அலரி மாளிகையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையைச்சேர்ந்த 30 வயதுடைய தில்ருக்ஷ சமரசிங்க என்பவர் தன்வசம் இருந்த துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.![]()
இக்காலப்பகுதியில் இலங்கை ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, பிரதமரை மாற்றுவதற்கு எடுத்த அதிரடி நடவடிக்கையினால், அந்த அலரிமாளிகையை விட்டு வெளியேற மாட்டேன் என்று அடம்பிடித்தவர்தான் ரணில் விக்கிரமசிங்கா.
பிரதமருக்கென உருவான அலரிமாளிகையில்தான் மகிந்த ராஜபக்ஷ இரண்டு தடவையும் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதிகளில் தங்கியிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் 2015 இல் மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்கும் வரையில் அவர் அலரிமாளிகையில்தான் குடியிருந்தார். தேர்தல் முடிவுகளையடுத்து, ரணில் விக்கிரமசிங்காவை இரவோடு இரவாக அங்கே அழைத்து அதனை ஒப்படைத்துவிட்டு வெளியேறினார்.
மீண்டும் தற்போது பிரதமராகியிருக்கும் அவர் விரும்பியிருந்தால், அந்த மாளிகையை மீண்டும் தமது வாசஸ்தலமாக்கியிருக்கமுடியும். அல்லது ஜனாதிபதியாகியிருக்கும் அவரது தம்பி கோத்தபாய ராஜபக்ஷவும் தனது அண்ணர் ஜனாதிபதியாகவிருந்த காலத்தில் பயன்படுத்திய அதே அலரிமாளிகையில் சென்று குடியேறியிருக்க முடியும்.
ஆனால், அந்த மாளிகை தற்போது கூட்டங்கள் நடத்துவதற்கும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கும்தான் பயன்படுத்தப்படுகிறது. விசாலமான அறைகள், அலங்கார தரைவிரிப்புகள் மற்றும் சகல வசதிகளையும் அம்மாளிகை கொண்டிருந்தாலும், சில அபசகுனங்கள் நடந்துவிட்டன.
சில வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட பத்திரிகையாளரும் கேலிச்சித்திர ஓவியருமான பிரகீத் எக்னலிகொட என்பவரின் மனைவி சந்தியா எக்னலிகொட என்பவர், “ தனது கணவரை காணாமலாக்கியவர்களுக்கு கடவுள் உரிய தண்டனை தரவேண்டும் “ என்று சாபமிட்டு எடுத்துச்சென்ற கற்பூரம் எரிந்துகொண்டிருந்த தேங்காயை அதே அலரிமாளிகையின் முன்னால் வீதியில் சிதற அடித்துவிட்டுச்சென்றார்.
![]()
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி முதல் அந்த பத்திரிகையாளரைக் காணவில்லை.! பத்து ஆண்டுகளாகிவிட்டன. இன்னமும் அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாது!?
ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. ஆனால், அதனையெல்லாம் விட மிகவும் வலிமையானது அவரின் மனைவி தேங்காய் அடித்துச்சொன்ன சாபம். அந்த சாபமும் பலித்தது. அச்சம்பவத்தையடுத்து நடந்த தேர்தலில் மகிந்தர் தோல்வி கண்டார். இனி அவருக்கு ஜனாதிபதியாகும் சந்தர்ப்பம் இல்லை.
சாத்திரம் சகுனம் பார்க்கும் சிங்கள அரசியல் தலைவர்கள் திருப்பதிக்கும் சென்று வருவார்கள். கைகளில் மந்திரித்த நூல் கட்டுவார்கள். நல்லநேரம் பார்த்து தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வார்கள்.
சுபநேரத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்கள்!
எந்த சுபநேரமும் பார்க்காமல் வந்திருக்கும் ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரி, தற்போது முழு உலகையும் அச்சுறுத்துகிறது.
—0—
![]()
அருமை.