இராணுவத்தினரிடம் தொடர்ந்தும் எமது காணிகள் 36 ஆண்டு கால ஏக்கம்; அநுர அரசுக்கு புரியுமா?; பலாலியில் 22ஆவது வாரமாகப் போராட்டம்

தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழ்.வலிகாமம் வடக்குப் பலாலிப் பகுதியில் இதுவரை மீள்குடியேற முடியாத நிலையிலுள்ள மக்கள் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பலாலிச் சந்தியில் முன்னெடுத்து வரும் காணி மீட்புப் போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 22 ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்டது.
இந்தக் காணி மீட்புப் போராட்டத்தில் இதுவரை பலாலியில் மீளக் குடியமர முடியாத நிலையிலுள்ள காணிகளின் உரிமையாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் பங்கேற்றனர்.
36 வருடங்களாகத் தமது சொந்த மண்ணிலிருந்து பிரிக்கப்பட்டுப் பல்வேறு சிரமங்களுக்கும், துன்பங்களுக்கும் மத்தியில் வாழ்ந்து வரும் மேற்படி பகுதி மக்கள் எப்போது தமது வீடுகளுக்கும், காணிகளுக்கும் திரும்புவோம்? என்ற ஏக்கத்துடன் வாரம் தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எத்தனை காலம் தான் எமது சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழ்வது?, எமது பூர்வீக மண்ணில் வாழ்வதற்கான உரிமை எமக்கு இல்லையா?, நாங்களும் ஏனைய மக்களைப் போன்று மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டும் அதற்கு எமது நிலத்தை எங்களிடம் மீள ஒப்படையுங்கள்! எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கண்ணீருடன் உருக்கமான கோரிக்கையை முன் வைத்துள்ளனர். மழையிலும், வெயிலிலும் இடைவிடாது தொடரும் எமது போராட்டம் வெறுமனே காணிகளை மீட்டெடுப்பதற்கான கோரிக்கையாக மாத்திரமல்ல. எமது இழந்த வாழ்வாதாரம், குடும்ப உறவுகள், வாழ்வியல் மற்றும் பண்பாட்டு அடையாளங்களை மீளப் பெறுவதற்கான மக்களின் நீண்டகாலப் போராட்டமாகவும் அமைந்துள்ளது எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
22 வாரங்களைக் கடந்தும் எமது மக்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில் பலாலி மக்களின் எதிர்பார்ப்பும், ஏக்கமும் இன்னமும் தொடர்கின்றன. இந்த நிலையில் அநுர அரசே! சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள எமது மக்களின் அவலத்துக்கு எப்போது முற்றுப் புள்ளி வைக்கப்படும்?, எப்போது எமது பூர்வீக மண்ணில் மீண்டும் கால்பதித்து நிம்மதியாக வாழும் நாள் பிறக்கும்? எனப் பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். காணி விடுவிப்புச் சாத்தியமாகும் காலப் பகுதி வரை தமது போராட்டம் இடைவிடாது தொடருமெனவும் மக்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.
![]()