சந்நிதி முருகன் சூரன் போரை முன்னிட்டுத் திறக்கப்பட்ட தொண்டைமானாறு பாலம்; இன்று நண்பகலுடன் மூடப்படும்

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான சூரன்போர் உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் இலகுவாகப் பயணிப்பதற்கு ஏதுவாகத் தொண்டைமானாறு நீரேரியில் அமைந்துள்ள உவர்நீர்த் தடுப்பணையுடன் இணைந்த நடைபாதைப் பாலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை முதல் இன்று திங்கட்கிழமை நண்பகல்- 12 மணி வரை திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனின் ஊடகப் பிரிவு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவும், அவரது பணிப்பின் படியும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை தொடர்பில் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் பொறியியலாளர் சி.விகிர்தன் அறிவித்துள்ளார்.
குறித்த தடுப்பணையுடன் இணைந்த நடைபாதைப் பாலம், செல்வச்சந்நிதி ஆலயத்தையும். நீரேரியின் மறு கரையையும் நேரடியாக இணைப்பதால் சூரன்போர் உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சுற்றுப் பாதையைத் தவிர்த்து இலகுவாக ஆலயத்தைச் சென்றடைய முடியும் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()