முச்சந்தி

ஆஸி கிரிக்கட்டில் உஸ்மான் கவாஜா நூல் சர்ச்சை!…  2018 பந்தை சேதப்படுத்திய ஆஸி வீரர்கள் யார்?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஐங்கரன் விக்கினேஸ்வரா

( இந்த நூல் வெறுமனே ஒரு கிரிக்கெட் வீரரின் சுயசரிதை வெளியீடு சார்ந்த செய்தி அல்ல. விளையாட்டில் நேர்மை, அணியின் கூட்டுப் பொறுப்பு, நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை, வீரர்களின் ஒழுக்கம் ஆகிய அடிப்படையான கேள்விகளை எழுப்பும் விவகாரமாக மாறியுள்ளது. எவ்வாறாயினும் ஒரு நூல் ஆயிரம் கதைகளைச் சொல்லலாம். ஆனால் உண்மைகளைப் பதிவு செய்வதே அதன் வரலாற்று வலிமை. உண்மைகள் ஒருபோதும் தோற்பதில்லை. அதுவே நூலின் வலிமையாக புலப்படும்)

அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் கடந்தகால இரகசியங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது ‘SABR’ எனும் நூல். ஆஸி கிரிக்கட் அணியின் ஒட்டுமொத்தப் பொறுப்பு குறித்து எழுந்துள்ள புதிய கேள்விகளால் சர்வதேச ஊடகங்களில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய அவமானங்களில் ஒன்றாகப் பதிவான 2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான பந்தைச் சேதப்படுத்திய (Sandpapergate) விவகாரம், எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உஸ்மான் கவாஜா வெளியிட்டுள்ள Sabr என்ற சுயசரிதை நூல், அந்தச் சம்பவத்தின் பின்னணியில் மறைக்கப்பட்டதாகக் கருதப்படும் பல தகவல்களை மீண்டும் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது.
Screenshot
இது வெறுமனே ஒரு கிரிக்கெட் வீரரின் சுயசரிதை வெளியீடு சார்ந்த செய்தி அல்ல. விளையாட்டில் நேர்மை, அணியின் கூட்டுப் பொறுப்பு, நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை, வீரர்களின் ஒழுக்கம் ஆகிய அடிப்படையான கேள்விகளை எழுப்பும் விவகாரமாக மாறியுள்ளது.
2018ஆம் ஆண்டு நடந்தது என்ன?
2018 மார்ச் மாதம் தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது அவுஸ்திரேலிய வீரர் கமரூன் பான்கிராஃப்ட், மஞ்சள் நிற மணல் தாளைப் (sandpaper) பயன்படுத்தி கிரிக்கெட் பந்தின் மேற்பரப்பை மாற்ற முயன்ற காட்சிகள் தொலைக்காட்சிக் கமராக்களில் பதிவாகின. இதன் மூலம் பந்தின் ஒரு பக்கத்தைச் சேதப்படுத்தி, பந்தை அதிகமாகத் தலைகீழாகச் சுழலச் செய்யும் (Reverse Swing) முயற்சி நடைபெற்றது அம்பலமானது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்போதைய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், துணைத்தலைவர் டேவிட் வார்னர் மற்றும் கமரூன் பான்கிராஃப்ட் ஆகியோர் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகினர். ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டுத் தடையும், பான்கிராஃப்டுக்கு ஒன்பது மாதத் தடையும் விதிக்கப்பட்டன.
அந்த நேரத்தில் இந்தச் சம்பவம் ஒரு சில வீரர்களின் தவறான நடவடிக்கையாகவே பெரும்பாலும் முன்வைக்கப்பட்டது. ஆனால், கவாஜாவின் புதிய நூல் இந்தப் புரிதலையே கேள்விக்கு உள்ளாக்குகிறது.
ஆஸி அணி அனைவருக்கும் தெரியுமா ?
கவாஜாவின் நூலில் இடம்பெற்றுள்ள முக்கியமான குற்றச்சாட்டு, பந்தைச் சேதப்படுத்தும் முயற்சி மூன்று வீரர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த ஒரு தனிப்பட்ட நடவடிக்கை அல்ல என்பதாகும். தென்னாபிரிக்கத் தொடரின் ஆரம்பத்திலேயே பந்தை அதிகமாகத் தலைகீழாகச் சுழலச் செய்வது குறித்து அணிக்குள் விவாதங்கள் நடைபெற்றதாக அவர் குறிப்பிடுகிறார். அணியின் பயிற்சியாளர் குழுவைச் சேர்ந்த ஒருவர், பந்தைச் சுழலச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததாகவும் கவாஜா தனது நூலில் எழுதியுள்ளார்.
2018ஆம் ஆண்டு போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியின்போது மணல் தாளைப் பயன்படுத்தி பந்தின் மேற்பரப்பை மாற்றிப் பரிசோதித்ததாகவும் அவர் விவரிக்கிறார். அந்தப் பரிசோதனையின்போது பந்தைப் பார்த்த வீரர்கள் சிரித்துக் கொண்டிருந்ததாகவும், அதன் மூலம் பந்தின் ஒரு பகுதி மிகவும் சொரசொரப்பாக மாற்றப்பட்டிருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
இந்த நடவடிக்கை குறித்து ஸ்டீவ் ஸ்மித் தனக்கு எதுவும் தெரிய வேண்டாம் என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறியதாகவும் கவாஜா தனது நூலில் பதிவு செய்துள்ளார். ஆனால், குறிப்பிட்ட வீரர்கள் அனைவரும் பந்தைச் சேதப்படுத்தும் திட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றனர் என்று அவரது நூல் நிரூபிக்கவில்லை. இங்குதான் இந்த விவகாரத்தின் முக்கியமான சர்ச்சை அடங்கியுள்ளது.
கேப் டவுன் சம்பவத்தின் பின்னணி
மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது மழை காரணமாகப் பந்து ஈரமாக இருந்ததாகவும், அதனை உலர்த்தி அதிகமாகச் சுழலச் செய்வதற்கு மணல் தாள் பயன்படுத்தப்பட்டதாகவும் கவாஜா விவரிக்கிறார். அந்த நேரத்தில் பான்கிராஃப்ட் பந்தைச் சேதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதைத் தொலைக்காட்சிக் கமராக்கள் படம்பிடித்தன.
இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் நற்பெயர் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கவாஜா தனது நூலில், இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் அணியின் மேலாளர் கவின் டோவியிடம், அனைவரும் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்ததாகக் கூறுகிறார்.
ஆனால், அணிக்குள் அனைவரும் அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பின்னர் நடைபெற்ற கூட்டத்திலும் தனது கருத்துக்கு முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார். இதன் மூலம், தவறுக்கான பொறுப்பை ஒரு சில வீரர்களின் மீது மட்டும் சுமத்திவிட்டு மற்றவர்கள் விலகிக்கொண்டார்களா என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார்.
பாட் கம்மின்ஸ் மீதான கேள்வி?
கவாஜாவின் கருத்துகள் வெளியானதைத் தொடர்ந்து தற்போதைய அவுஸ்திரேலிய அணித்தலைவர் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட், நாதன் லயன் உள்ளிட்ட வீரர்களின் பெயர்களும் விவாதத்திற்கு வந்துள்ளன. குறிப்பாக, பந்தைச் சேதப்படுத்தும் திட்டம் குறித்து அணியின் பந்துவீச்சாளர்களுக்கு முன்கூட்டியே தெரியுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் ABC தொலைக்காட்சியின் 7.30 நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் சாரா பெர்குசன் கவாஜாவிடம் இந்தக் கேள்விகளை நேரடியாக முன்வைத்தார். ஆனால், குறிப்பிட்ட வீரர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு குற்றம் சாட்ட கவாஜா மறுத்துவிட்டார். தனது நூலில் எழுதியிருப்பதைத் தாண்டி யாரையும் குற்றவாளியாக்க விரும்பவில்லை என்றும், இது பழிவாங்கும் முயற்சி அல்ல என்றும் அவர் தெரிவித்தார். அணியாக அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் விளக்கினார்.
இதற்கிடையில், கவாஜாவின் நூல் வெளியீட்டைத் தொடர்ந்து ஊடகச் சந்திப்புகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. சில வானொலி மற்றும் தொலைக்காட்சி நேர்காணல்களில் அவர் பங்கேற்கவில்லை. இதனால் அவரது நூலில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விவாதம் மேலும் தீவிரமடைந்தது.
ஆஸி கிரிக்கெட் அணி நிலைப்பாடு
இந்தப் புதிய தகவல்களுக்கு மத்தியில் கிரிக்கெட் அவுஸ்திரேலியா தனது முந்தைய விசாரணையின் முடிவுகளில் நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையில் கிடைத்த தகவல்கள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டதாகவும், புதிய தகவல்கள் இருந்தால் அவற்றையும் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் அதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கவாஜா தனது நூலில் குறிப்பிட்டுள்ளபடி, தன்னிடம் கிரிக்கெட் அவுஸ்திரேலியா அப்போது விசாரணை நடத்தவில்லை என்ற தகவலும் முக்கியமானதாகும். இதனால், அன்றைய விசாரணையின் முழுமை மற்றும் அதன் வரம்புகள் குறித்த கேள்விகளும் எழுகின்றன.
விளையாட்டின் வெற்றியை விட நேர்மை முக்கியமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் ஆஸி அணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை வெறுமனே பழைய சர்ச்சையை மீண்டும் கிளப்பும் முயற்சியாகப் பார்க்க முடியாது.
விளையாட்டில் வெற்றி பெறுவது முக்கியம். ஆனால், அந்த வெற்றியைப் பெறுவதற்காக விளையாட்டின் அடிப்படை விதிகளையும் ஒழுக்கத்தையும் மீறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
கவாஜா தனது நூலில், அவுஸ்திரேலிய அணியில் நீண்டகாலமாக நிலவிய ‘எப்படியாவது வெற்றி பெற வேண்டும்’ என்ற மனப்பான்மையே இத்தகைய பிரச்சினைகளுக்கு அடிப்படையாக இருந்ததாகவும் விமர்சிக்கிறார். அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் அணியில் பணிவு, ஒழுக்கம் மற்றும் விளையாட்டின் மீதான மரியாதை ஆகியவை மீண்டும் உருவாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார். ஜஸ்டின் லாங்கர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணியின் மாற்றமும் இந்தப் பயணத்தில் முக்கியமானவை என அவர் பாராட்டுகிறார்.
நீண்ட பொறுமை ஏன் ?
உஸ்மான் கவாஜாவின் Sabr நூல் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் கடந்தகாலத்தை மீண்டும் ஆராய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அணியில் சில வீரர்கள் தவறு செய்தால், அந்தத் தவறுக்கான பொறுப்பு அவர்களுடன் முடிந்துவிடுகிறதா? அல்லது அந்தச் சூழலை உருவாக்கிய அணியின் நிர்வாகம், பயிற்சியாளர்கள் மற்றும் ஏனைய வீரர்களுக்கும் பொறுப்பு உள்ளதா என்ற இந்த விவகாரம் எழுப்பும் அடிப்படையான கேள்விகளாகும்.
குறிப்பாக, ஒரு விளையாட்டு அணியின் நற்பெயர் என்பது அதன் வெற்றிகளால் மட்டுமே கட்டமைக்கப்படுவதில்லை. அதன் நேர்மை, வெளிப்படைத்தன்மை, தவறுகளை ஒப்புக்கொள்ளும் துணிவு ஆகியவற்றால்தான் அது நிலைத்து நிற்கிறது. வெற்றி பெறுவதற்காக விதிகளை மீறுவது விளையாட்டுத் திறமை அல்ல.
தவறை ஒப்புக்கொண்டு அதற்குப் பொறுப்பேற்பதே உண்மையான விளையாட்டு நேர்மை. அவுஸ்திரேலிய கிரிக்கெட் மீண்டும் உலகின் நம்பிக்கையைப் பெற வேண்டுமானால், 2018ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை மறந்துவிடுவது மட்டும் போதாது. அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதும் அவசியமாகும்.
எவ்வாறாயினும் ஒரு நூல் ஆயிரம் கதைகளைச் சொல்லலாம். ஆனால் உண்மைகளைப் பதிவு செய்வதே அதன் வரலாற்று வலிமை. உண்மைகள் ஒருபோதும் தோற்பதில்லை. அதுவே நூலின் வலிமையாக புலப்படும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *