இலங்கை

எல்லாளனின் ஆத்மாவே நாட்டை ஆட்சி செய்கிறது;  அநுராதபுரத்தை பல்வேறு மதப் பூமியாக மாற்றச் சதி; விமல் குற்றச்சாட்டு

எல்லாளனின் ஆத்மாவே தற்போது நாட்டை ஆட்சி செய்கின்றது. இதனால் அநுராதபுரத்தில் பௌத்தத்தை பாதுகாக்கும் போராட்டத்தை முறையாக முன்னெடுக்க மகாசங்கத்தினர் மற்றும் மகாநாயக்க தேரர்கள் முன்வர வேண்டும் என்றும், அந்த போராட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்க தாம் தயாராக இருக்கின்றோம் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில்  நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.

அநுராதபுரம் புனித பூமியை பௌத்த பூமியென்றே யுனெஸ்கோ அடையாளப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ருவால்வெலிசாயவை சுற்றி வேலி அமைக்க கதைக்கப்படுகின்றது. அத்துடன் பௌத்த மற்றும் ஏனைய தொல்பொருள் இடங்களையும் பாதுகாக்கும் வகையில் அந்த பகுதியை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதன்மூலம் இதன்மூலம் பல்வேறு மத புனித பூமியாக அர்த்தப்படுத்தும் வகையில் வழியை ஏற்படுத்துகின்றனர்.

இது வர்த்தமானி அறிவித்தல் மட்டுமானது அல்ல. இந்த திட்டத்தின் அறிக்கை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இராமர் கோயிலை எங்கு அமைக்கலாம் என்ற விடயம் உள்ளது. பௌத்தம் தொடர்பில் இந்தியாவை விடவும் பழமையான சான்றுகள் அநுராதபுரம் பூமியிலேயே கிடைத்துள்ளன. எமது தொல்பொருள் ஆய்வாளர்கள் காபன் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் அநுராதபுரம் என்பது இந்தியாவினால் கட்டியெழுப்பப்பட்டுள்ள தொல்பொருள் இடங்களை பூச்சியத்திற்கு கொண்டு செல்லும் இடமாக இருக்கின்றது. இந்த பௌத்த புனித பூமியில் இன்னும் பூமியில் புதைந்து கிடப்பதை வெளியில் கொண்டு வராமல் தடுப்பதற்கே இந்த முயற்சிகள் நடக்கின்றன.

அங்கு அமைதியான முறையில் பௌத்த தேரர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பின்னர் சாகும் வரையிலான உண்ணவிரதப் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர். இதற்கு அரசாங்கம் எவ்வாறு முகம்கொடுத்தது. முதலில் நீதிமன்ற தடையுத்தரவை பெற்றது. இதேவேளை பிக்கு ஒருவரின் குழுவுடன் ஜே.வி.பியின் குண்டர்கள் குழுவொன்று அந்த சத்தியக்கிரக போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பௌத்த மதத்திற்கு இந்த அரசாங்கம் வழங்கும் இடம் என்ன என்பதனையே இந்த தாக்குதல் காட்டியுள்ளது. அநுரகுமாரவின் ஆட்சி போகும் பாதை என்ன என்பது இதில் தெரிகின்றது. இதனால் இந்த விடயத்தில் மகாநாயக்க தேரர்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக முன்வர வேண்டும்.

பெலவத்த தலைமையகத்தில் எந்தவொரு மத சின்னமும் இல்லை. எந்தவொரு கட்சியாக இருந்தாலும் ஏதாவது ஒரு மத அடையாளம் இருக்கும். ஆனால் இங்கு எந்தவொரு மத அடையாளமோ அல்லது விளக்கு பற்றவைக்கப்படுவதோ கிடையாது. இவ்வாறானவர்களுக்கு பௌத்த காவி உடை தரித்தவர்களை தாக்குவதில் பிரச்சினையில்லை. இந்த குழுவினருக்கு தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட இடமளித்தால் இந்த நாட்டில் பௌத்தர்களுக்கு வாழ்வதற்கான உரிமைக்கூட இல்லாமல் போகலாம். இப்போது இருப்பவர் மீண்டும் பிறந்துள்ள வடுக வம்ச ஆட்சியாளராகும். இவர் எல்லாளனின் ஆத்மாவாகும்.

இதனால் இப்போதுள்ள போராட்டத்தை முறையாக முன்னெடுக்க மகாசங்கத்தினர் மற்றும் மகாநாயக்க தேரர்கள் முன்வர வேண்டும். அத்துடன் இந்த போராட்டத்திற்கு எங்களால் முடிந்த பங்களிப்பு மற்றும் தலைமைத்துவத்தை தேசிய சுதந்திர முன்னணி வழங்கும். பெலவத்தை வடுக ஆட்சியின் பாதாள குழுக்களை அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *