ஜனாதிபதி கூறியதை ஏற்க முடியாது; ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவேன்

பெருந்தோட்ட கம்பெனிகளுடன் காணி குத்தகை ஒப்பந்தத்தை நீடிப்பது தொடர்பில் ஜனாதிபதி கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறாக ஒப்பந்தம் நீடிக்கப்படுமாக இருந்தால் எப்போதாவது ஆளும் கட்சிக்கு நான் வந்தால் அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிவேன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை கேட்கும்போது மிகவும் கவலை அடைந்தேன். ஏனெனில் ஜனாதிபதி முன்வைத்த கடந்த இரண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கும் எதிர்க்கட்சியில் இருந்து நான் ஆதரவு வழங்கியிருந்தேன். ஜனாதிபதி மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை மதித்தே அவ்வாறு செயல்பட்டேன்.
ஆனால் இந்த முறை முன்வைத்த வரவு செலவு திட்டத்தை கேட்கும் போது உண்மையில் வேதனையாக இருந்தது. ஏனெனில் வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்ட மக்களுக்களின் அபிவிருத்திக்காக எந்த ஒரு திட்டத்தையும் முன் வைத்திருக்கவில்லை. 2025 ஆம் ஆண்டு மலையக மக்களின் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டில் 62 வீதம் இந்திய அரசாங்கத்தினால் கிடைத்திருக்கும் ஒரு அன்பளிப்பு. அதனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் மலைய மக்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் நிதி போதுமானதாக இல்லை என நாங்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தோம். அதனை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டு இருந்தார். ஆனால் இந்த முறையும் ஒதுக்கப்பட்ட நிதியில் 62 வீதம் இந்திய அரசாங்கத்தின் நன்கொடையாகும்.
குறிப்பாக கடந்த வருடம் இந்திய அரசாங்கத்தின் நன்கொடையாக 2224 மில்லியன் ரூபாவும் இந்த வருடம் இந்திய அரசாங்கத்தின் நன்கொடையாக 4290 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டிருக்கிறது இதனை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதி மலையக மக்களுக்கு போதுமான அளவு நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் கடந்த வருடம் மலை மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு சதிகளுக்காக 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது ஆனால் இந்த முறை 100 மில்லியன் மாத்திரமே ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
பெருந்தோட்டங்களை பொறுத்தவரையில் இன்று முதலீட்டாளர்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. ஆனால் மலையக தரிசு நிலங்களை பெருந்தோட்ட இளைஞர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
மேலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 200 ரூபா சம்பளம் அதிகரிப்பு வழங்கி உள்ளதாக ஜனாதிபதி தெரிவிக்கிறார் ஆனால் இந்த சம்பள அதிகரிப்பு தனியார் தோட்டங்களில் இருக்கும் யாருக்கும் கிடைக்கவில்லை. அதனால் இந்த வரவு செலவு திட்டத்தின் போது தொழிலாளர் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின் போது அது தொடர்பான கணக்கு வழக்குகளை சமர்ப்பித்தே ஆக வேண்டும். அரசாங்கம் வழங்கியிருக்கும் 200 ரூபா எத்தனை தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும்.
அத்துடன் காணி உரிமை தொடர்பில் ஜனாதிபதி கதைப்பார் என்று நான் எதிர்பார்த்தேன் ஆனால் ஒரு வார்த்தை கூட அது தொடர்பில் கதைக்கவில்லை. ஆனால் பெருந்தோட்ட கம்பெனிகளுடன் குத்தகை ஒப்பந்தத்தை அதிகரிப்பது சரியான முடிவு என ஜனாதி சொன்னது சரியான முடிவு என முடிந்தால் யாராவது சொல்லட்டும். அது அது தவறான முடிவு அது இப்போது பேசப்பட தேவையில்லை. அது 1942ல் மேற்கொள்ளப்பட வேண்டியது ஒன்று. இன்று மலையகத்தில் பிரச்சனையாக இருப்பது பெருந்தோட்ட கம்பெனிகள் ஆகும். அதனால் தொடர்ந்தும் பெருந்தோட்ட கம்பெனிகளுடன் காணி குத்தகை ஒப்பந்தத்தை நீடிப்பது தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே பெருந்தொட்ட காணிகளை குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டால் எப்போதாவது ஆளும் கட்சிக்கு நான் வந்தால் அந்த ஒப்பந்தத்தை கிழித்து விடுவேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் . சிலவேளை, பெருந்தோட்ட கம்பனிகள் 200 ரூபா வழங்க ஏற்றுக்கொண்டிருப்பது, இந்த குத்தகை ஒப்பந்தத்தை நீடித்துக்கொள்ள ஜனாதிபதியுடனான இணக்கப்பாட்டுடனா என்ற சந்தேகம் எழுகிறது. அப்படியானால் அது லஞ்சமாகும். என்றார்.
![]()