இலங்கை 2027 நடுப்பகுதியில் வங்குரோத்தடையும்; கம்மன்பில கூறுகிறார்

நாட்டுக்கு பாரிய வெளிநாட்டு முதலீடுகள் எதுவுமே இதுவரை கிடைக்காத நிலையில் . 2027 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நாடு வங்குரோத்து நிலையடையும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில எதிர்வு கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு எதிர்வு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார ரீதியில் தற்போது நெருக்கடிக்குள்ளாகியுள்ள நடுத்தர மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் .மக்களின் வாழ்க்கை , பொருளாதார சுமைகளை புறம்தள்ளி ஜனாதிபதியின் எதிர்காலத்தை இலக்காகக் கொண்டே வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நெருக்கடிகள் மற்றும் திறைசேரியின் கையிருப்பை கொண்டு ஆராய்ந்துபார்த்தால் 2027 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நாடு வங்குரோத்து நிலையடையும் சாத்தியம் உள்ளது . ஏனெனில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டுக்கு பாரிய வெளிநாட்டு முதலீடுகள் எதுவுமே கிடைக்க வில்லை. தேசிய மட்டத்திலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளில் 20 சதவீதமேனும் நிறைவேற்றப்படாத வகையில் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நடைமுறையில் வெற்றிபெறாத வாக்குறுதிகள் பெருமளவில் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
![]()