ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில்; விடுதலைப் புலிகளுக்கும் அப்பால் ஒருசக்தி இருந்ததா?; சந்தேகம் எழுப்பும் சோனியா காந்தி

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவுகள் மூலமாக விடுதலைப் புலிகளின் பங்கு உறுதி செய்யப்பட்டுத் தண்டனைகள் அளிக்கப்பட்ட போதிலும், அந்தப் படுகொலைக்கு பின்னணியில் இருந்த ‘முழுமையான சதி’ மற்றும் அனைத்து உண்மைகளும் முழுமையாக வெளிவரவில்லை , ராஜிவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகளுக்கும் அப்பால் ஒருசக்தி இருந்ததா என்ற சந்தேகம் உள்ளதாக ராஜிவ் காந்தியின் மனைவியும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி தெரிவித்துள்ளார் .
அத்துடன் ராஜிவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒரு வருடத்திற்கு முன்பே உளவுத்துறை எச்சரித்திருந்தும் எந்த வித முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. விடுதலைப்புலிகள் மறைந்திருக்கும் இடம் தொடர்பாக இரகசிய தகவல்கள் கிடைத்தபோதும் அவர்கள் கைது செய்யப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
தற்போது வெளியான தனது சுயசரிதையான “பிலோங்கிங்: ஏ ஜேர்னி ஒப் லவ்” (Belonging: A Journey of Love) என்ற புத்தகத்தின் ஒரு நெஞ்சை உருக்கும் பகுதியில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது கணவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தி 10 ஜன்பாத் இல்லத்திற்கு எட்டிய அந்தத் துயரமான நிமிடங்களை நினைவுகூர்ந்துள்ளார்.
வி. பி. சிங் தலைமையிலான அப்போதைய அரசு, ராஜீவ் காந்திக்கான எஸ்பிஜி பாதுகாப்புப் பிரிவை விலக்கிக் கொண்ட ஒரு வருடத்திற்குள் இந்தத் தாக்குதல் (விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படைத் தாக்குதல்) நடத்தப்பட்டது .ராகுல் காந்திஒரு நாள் என்னிடம் , “அப்பாவின் பாதுகாப்பிற்கு ஏதேனும் செய்யாவிட்டால், நான் விரைவில் அவரது இறுதிச் சடங்கிற்காக வர வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியும்” எனக் கூறி எச்சரித்தார்.
இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு, ராஜீவ் காந்தியை பிரதமர் பதவியை ஏற்க வேண்டாம் என கெஞ்சினேன் அவர்கள் உங்களையும் கொன்றுவிடுவார்கள்’ என நான் எச்சரித்தேன் அதற்கு ராஜீவ் ‘அவர்கள் எப்படியும் என்னைக் கொல்லத்தான் போகின்றார்கள் எனக் கூறினார் என்றும் கூறியுள்ளார்.
மே 21, 1991 அன்று இரவில், தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தற்கொலை படைத் தாக்குதல் மூலம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது இந்தத் துயரம் நிகழ்ந்தது.
முற்றிலும் குழப்பம் நிறைந்த அந்த ஆரம்ப கட்ட நிமிடங்களில், கற்பனை செய்ய முடியாத அந்தத் அதிர்ச்சிச் செய்தியிலிருந்து தாயைப் பாதுகாப்பதற்காக அவரது மகள் பிரியங்கா காந்தி எவ்வாறு உறுதியுடன் செயல்பட்டார் என்பதைப் பற்றி இந்தப் புத்தகம் விரிவாக விவரிக்கிறது.
மெட்ராஸில் (தற்போது சென்னை) தேர்தல் பிரசார களத்தில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக வந்த அவசர தொலைபேசி அழைப்பைப் பெற்ற பிறகு, பிரியங்கா தன்னிடம் வந்ததாக சோனியா காந்தி எழுதுகிறார். பிரியங்கா வேகமாகப் பேசி, குண்டுவெடிப்பு பற்றி குறிப்பிட்டதுடன், உடனடியாகப் புறப்படத் தயாராகுமாறு தனது தாயை வலியுறுத்தினார்.
முதலில் அந்த வார்த்தைகள் சோனியா காந்திக்கு விளங்கவில்லை. இருப்பினும், அந்தப் பரபரப்பான விளக்கத்தை விட, தனது மகளின் குரலில் இருந்த பேரச்சத்தின் தவிப்பே தன்னைப் உறையச் செய்தது என்று சோனியா காந்தி விளக்குகிறார்.
மூச்சு விடக்கூட முடியாமல், அவர் எழுந்து நின்று, பின்னர் தனது மகளின் கைகளில் சரிந்தார். பிரசாரப் பயணத்தில் ராஜீவ் காந்தியுடன் தான் ஏன் செல்லவில்லை என்று கதறியபடி சோனியா காந்தி அந்த கொடூரமான நிஜத்தைப் புரிந்துகொள்ளப் போராடியபோது, அந்த இல்லத்துப் பணியாளர்கள் தாழ்வாரங்களில் நின்று அழத் தொடங்கினர்.
அளவிலா துயரத்தில் மூழ்கியிருந்தபோதிலும், 19 வயதே ஆன பிரியங்கா காந்தி தனது தாயின் முன்னிலையில் மிகுந்த நிதானத்துடன் நடந்துகொண்டார். அன்று இரவு பிரியங்கா தன் தாயின் முன்னிலையில் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தாமல், வீட்டின் அனைத்து நடவடிக்கைகளையும் தனது முழு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதாக சோனியா காந்தி நினைவுகூர்கிறார்.
பிரியங்கா அறைகளுக்கு இடையே தொடர்ந்து சென்று, மூத்த அரசியல் தலைவர்களுடன் அவசர தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பேசினார், சென்னைக்கான பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார், மேலும் துயரத்தில் இருந்த தன் தாய் மனதை உடைக்கும் தொலைபேசி உரையாடல்களைக் கேட்காதவாறு பாதுகாத்தார்.
ராஜீவ் காந்தி இறந்துவிட்டதாகப் பாதுகாப்புப் பணியாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வந்தபோது, சோனியா காந்தி கீழே விழாமல் இருக்க பிரியங்கா அவரைத் தாங்கிப் பிடித்து, மெதுவாகப் படுக்கையறைக்கு அழைத்துச் சென்றார்.
அச்சமயத்தில் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்த ராகுல் காந்தியைத் தொடர்புகொள்ள எடுத்த வேதனையான முயற்சியையும் இந்த சுயசரிதை விவரிக்கிறது. அந்தத் துயரச் செய்தியைத் தெரிவிப்பதற்காக ஒரு குடும்ப நண்பர் இறுதியாகத் தொலைபேசியில் ராகுலைத் தொடர்புகொண்டபோது, ராகுல் காந்தி உடனடியாக, “அப்பா இறந்துவிட்டார், அல்லவா?” என்ற அதிர்ச்சியளிக்கும் முன்உணர்வோடு கூடிய கேள்வியைக் கேட்டார்.
ஸ்ரீபெரும்புதூரில் தனது தந்தையுடன் இருக்க வேண்டிய ராகுல் காந்தி, கடைசி நேர அட்டவணை மாற்றத்தால் வெளிநாட்டிலேயே தங்க நேரிட்டது என்றும் சோனியா காந்தி குறிப்பிடுகிறார். ஒரு தேசியத் துயரத்தின் மத்தியில் தள்ளப்பட்ட ஓர் அரசியல் குடும்பத்தின் ஆழ்ந்த தனிப்பட்ட வலியையும், அவர்களின் மன உறுதியையும் இந்த சுயசரிதை ஒரு நெருக்கமான பார்வையாக வழங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார் .
![]()