ஜனாதிபதியின் பாரியாரும் என்னிடம் நலன் விசாரித்தார்; மண்டை உடைந்த தேரர் கூறுகிறார்

அநுராதபுரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளையில், ஜனாதிபதியின் பாரியார் தன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலன் விசாரித்ததாகப் ராஜாங்கனை சத்தாரதன தேரர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலின் பின்னர் வைத்தியசாலையில் இருந்தபோது ஜனாதிபதியின் பாரியாருக்கு மேலதிகமாக அமைச்சர் வசந்த சமரசிங்க, நாமல் கருணாரத்ன ஆகியோரும், வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பல பொலிஸ் அதிகாரிகளும் தன்னைப் பற்றி விசாரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸப தேரர் தரப்பினருக்கும் ராஜாங்கனை சத்தாரதன தேரர் குழுவினருக்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற மோதல் நிலைமை தொடர்ந்து சத்தாரதன தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய பின்னர் தலையில் கட்டுப் போடப்பட்ட நிலையில் தனது சமூக வலைத்தளத்தின் ஊடாக வீடியோவொன்றை வெளியிட்டே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நான் வைத்தியசாலையில் இருந்தபோது ஜனாதிபதியின் பாரியார் எனக்கு அழைப்பெடுத்து நலம் விசாரித்தார். நான் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒரு விடயம் அது. அதேபோல் அமைச்சர் வசந்த சமரசிங்க, நாமல் கருணாரத்ன உட்பட பெருமளவானோர் என்னைப் பற்றி விசாரித்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் நேரடியாகவே உயிர்ச்சேதம் விளைவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்றும், ருவான்வெலி மகாசாயவின் ஆசீர்வாதத்தினாலேயே தான் உயிர் தப்பியதாகவும் சத்தாரதன தேரர் தெரிவித்துள்ளார். பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர் தற்போதைய அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, புத்த சாசனத்திற்கும் நாட்டிற்கும் அழிவை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் இதன்போது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தான் எந்தவொரு தனிப்பட்ட இலாபத்தையோ அல்லது பணத்தையோ எதிர்பார்த்துச் செயற்படவில்லை எனவும், நாட்டையும் சாசனத்தையும் தூய்மைப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் தற்போதைய ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு எதிராக வரும் எந்தவொரு சதியையும் முறியடிக்க உயிரைக் கொடுத்தேனும் முன்னிற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
![]()