இலக்கியச்சோலை

பகிர்வுகள் …. கலை இலக்கியப் பத்தித் தொடர்… பகிர்வு – 19… செங்கதிரோன்

செங்கதிரோன்

‘சாகித்யவிருது’ பெற்ற சோ. அருளானந்தம் (மன்னனூர் மதுரா)

கடந்தவருடம் (2025) இலங்கையில் வெளிவந்த சிறுவர் இலக்கிய நூல்களில் சிறந்த நூலுக்கான சாகித்ய விருது – 2026, இம்முறை மட்டக்களப்பைச் சேர்ந்த சோ.அருளானந்தம் அவர்கள் ஆக்கிய ‘சுயசிறுவர் இலக்கியம்’ ஆன ‘பூப்பூக்கும் ஓசை’ சிறுவர் பாடல் தொகுப்பு நூலுக்குக் கிடைத்துள்ளது.

சோ. அருளானந்தம்

சென்றவருடம் வெளிவந்த இந்நூல் மட்டக்களப்பு மகுடம் பதிப்பகத்தின் 101 ஆவது வெளியீடாகும். மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திவரும் கலை இலக்கிய நிகழ்வுத் தொடரின் 63 ஆவது நிகழ்வாக மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கமும் மகுடம் கலை இலக்கிய வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு 19.10.2025 அன்று மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் அதன் தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றிருந்தது.

இலங்கை கலாசார அமைச்சினால் வருடாவருடம் வழங்கப்பெறும் பல்வகை நூல் பரிசுகளான சாகித்யவிருது – 2026, சுய சிறுவர் இலக்கியத்திற்கான இறுதிச்சுற்றுக்கு சோ.அருளானந்தத்தின் ‘பூப்பூக்கும் ஓசை’ – ஸ்ரீ ரஞ்சனி விஜேந்திராவின் ‘சிந்துவின் தைப்பொங்கல்’ – சுஜி பொற்செல்வியின் ‘இசைக்கும் மொட்டுக்கள்’ ஆகிய மூன்று நூல்களும் குறும்பட்டியலிடப் பெற்றிருந்தன.

இவற்றிலிருந்து சோ.அருளானந்தத்தின் ‘பூப்பூக்கும் ஓசை’ விருதுக்குத் தெரிவானது. மற்றைய நூல்கள் சான்றிதழ் பெற்றன.

சுயசிறுவர் இலக்கிய நூல் தேர்வில் கலாநிதி முருகுதயாநிதி, திரு.எஸ்.கணபதிப்பிள்ளை, ஜனாப் எம்.பி.எம்.பைரூஷ் ஆகியோர் நடுவர்களாகத் திகழ்ந்துள்ளனர். பரிசளிப்பு விழா 08.09.2026 அன்று கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி இடமிருந்து விருதினைப் பெற்றுக்கொண்டார்.

அருளானந்தம் அவர்கள் 24.04.1955 இல் மன்னம்பிட்டியில் பிறந்தார். தந்தையார் சோமசூரியம், தாய் ஆரியவல்லி. ஆரம்பக்கல்வியை மன்னம்பிட்டி தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக்கல்வியை மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்திலும் பெற்று 1980/82 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய பயிற்சியை முடித்து பொலனறுவை ஹெவம்பிட்டி தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரிய நியமனம் பெற்றார். 1991 இல் அதிபர் நியமனம் பெற்ற இவர் 1992/94 காலப்பகுதியில் தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விமாணிப் பட்டம் பெற்றார்.

பள்ளிப்பருவத்திலேயே பதினாறு பதினேழு வயதாயிருக்கும்போதே எழுத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். பதினெட்டு வயதில் மித்திரன் பத்திரிகையில் வெளிவந்த இவரது ‘சித்திரைப் பெண்ணே!’ என்ற கவிதை மூலம் இவரின் எழுத்துலகப் பிரவேசம் நிகழ்ந்தது.

வீரகேசரி – மித்திரன் – தினக்கதிர் – சுடரொளி பத்திரிகைகளில் கவிதைகள் எழுதிய சமகாலத்தில் அவ்வப்போது அரசியல் பத்திகளும் எழுதி வந்தார். 1995 இல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி பூசா தடுப்புக்காவல் முகாமில் தடுத்து வைக்கப்பெற்றதால் எழுத்துத்துறையில் ஒரு தேக்கநிலையேற்பட்டது. எட்டுமாதகால தடுப்புக்காவலிலிருந்து விடுபட்டதும் 1986 இல் கண்டி மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்று 1994 இல் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்து 24.05.2015 இல் அதிபர் சேவையிலிருந்த ஓய்வுபெற்றார்.

நாடகப்பிரதியாக்கம் – நாடக இயக்கம் – வில்லிசை – மெல்லிசைப் பாடலாக்கம் – வாய்ப்பாட்டு (மெல்லிசை) எனக் கலைத்துறை ஆற்றல்களும் நிரம்பப்பெற்றவர்.

1983 இல் மன்னம்பிட்டியைச் சேர்ந்த கி. இரத்தினவல்லியைக் கரம்பற்றித் தனது தாம்பத்திய வாழ்வில் மகள் அனுஷ்யாவையும் மகன் ராஜிதனையும் பிள்ளைச் செல்வங்களாகப் பெற்றுப் பெருமகிழ்வு கண்டார்.

‘அக்கினிக் குஞ்சுகள்’ எனும் கவிதைத்தொகுதியை 2020 இல் வெளியிட்டிருந்தார். ‘பூப்பூக்கும் ஓசை’ அவரது இரண்டாவது நூலாகும். எதிர்காலத்தில் ‘மனக்கோலம்’ எனும் கவிதைத் தொகுதியை வெளியிடவுமிருக்கிறார்.

தான் பிறந்த ஊரான மன்னம்பிட்டியை இணைத்து ‘மன்னனூர் மதுரா’ எனும் புனைபெயரையும் வரித்துக் கொண்டு கவிதை இலக்கியம் படைத்துவரும் சோ.அருளானந்தம் அவர்கள் தனது சிறுவர் பாடல் தொகுப்பான ‘பூப்பூக்கும் ஓசை’ நூலுக்கு இம்முறை இலங்கை அரசின் ‘சாகித்யவிருது’ பெற்று குறிப்பாக மட்டக்களப்பு மாநிலத்திற்கும் பொதுவாகக் கிழக்கிலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார். தற்போது மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாசார அதிகார சபையின் (மத்தியஅரசு) தலைவராகவும் அண்மையில் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *