என்னைப் பற்றி விசாரித்தால் நீங்களே சிக்கவேண்டி வரும்!; எச்சரிக்கிறார் கம்மன்பில

எனக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படுவதாக இந்த அரசாங்கம் இதுவரையில் 13 தடவைகள் கூறிவிட்டது. ஆனால் நடந்தது எதுவும் இல்லை. இதனால் என்னைப் பற்றிய விசாரணைகளுக்கென பணத்தை செலவழித்து எதிர்காலத்தில் நிதி வீணடிப்பு வழக்குகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரின் காவி உடையை அகற்றியமை தொடர்பாக உதயகம்மன்பில வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஞானசார தேரரின் காவி உடையை அகற்றியமை தொடர்பாக நான் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஆனால் இந்த அரசாங்கம் பொறுப்பேற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் என்னைக் குறிவைத்து விசாரணைகள் நடத்தப்படுவதாக அவர் இதுவரை 13 தடவைகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இப்போது அந்த 13வது விசாரணையும்ஆரம்பமாகியுள்ளது. இது அவருக்கு மறந்திருக்கலாம். இதனால் அமைச்சருக்கு நாம் ஞாபகப்படுத்துகிறோம்.
இதேவேளை என்னை நீதிமன்றங்களுக்கு இழுத்துச் சென்றனர், பொலிஸாருக்கு அழைத்துச் சென்றனர், இறுதியில் அவர்களால் செய்துகொள்ளக்கூடியதாக இருந்த எதுவும் இல்லை. இது போன்று பொதுமக்களின் நிதியை வீணடித்துக்கொண்டு, என்னை விசாரிப்பதால் உங்களுக்கு எதிர்காலத்தில் நீதி வீணடிப்பு வழக்குகளைச் சந்திக்க நேரிடுவதற்கான காரணங்களாக அமையும் என்பதை நாம் நளிந்த ஜயதிஸ்ஸ அமைச்சருக்குக் கூறுகிறோம்.
நான் கருத்து வெளியிடுவதை நிறுத்தப் போவதுமில்லை; நளிந்த ஜயதிஸ்ஸ அமைச்சரை விமர்சிப்பதை நிறுத்தப் போவதுமில்லை. சிறுவயதில் ஒரு கார்ட்டூன் இருந்தது, அதாவது நரியானது முயலைப் பிடிப்பதற்காக எப்போதுமே பல உபாயங்களை, யோசனைகளைச் செய்கிறது; ஆனால் எப்போதுமே அந்த உபாயம் நரிக்கே தீங்காக முடிந்துவிடுகிறது. ஆனாலும் நரி முயலைப் பிடிப்பதற்கான உபாயத்தைக் கைவிடுவதும் இல்லை, முயல் தப்புவதைத் தடுப்பதும் இல்லை. இதுபோலதான் இந்த விடயமும் என்றார்.
![]()