வலி.வடக்கில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து யாழில் இராணுவம் கட்டும் ஆஸ்பத்திரியை இடிக்கவும்!

யாழ்ப்பாணம் – வசாவிளான் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்படும் இராணுவ மருத்துவமனைக் கட்டுமானங்களை உடனடியாக இடித்து அகற்றுமாறு வலிகாமம் வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சுகிர்தன் அறிவித்தல் அனுப்பியுள்ளார்.
வசாவிளான் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து இராணுவ மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட நிலையிலும், தற்போதுவரை எந்தத் தடங்கலும் இல்லாமல் கட்டுமானப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்தே, தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்படும் இராணுவ மருத்துவமனைக் கட்டுமானங்களை உடனடியாக இடித்து அகற்றுமாறு யாழ்ப்பாணம் பாதுகாப்புப்
படைகளின் கட்டளைத் தளபதிக்கு வலி.வடக்குப் பிரதேசசபைத்
தவிசாளர் சுகிர்தன் அறிவித்தல் அனுப்பியுள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமைக்குள் இந்தச் சட்டவிரோதக் கட்டடம் இடித்து அகற்றப்பட வேண்டும் என்றும்,
அல்லது முறையான அனுமதிபெற்று கட்டுமானப் பணிகள் இடம்பெற வேண்டும் எனவும் தவிசாளர்
சுகிர்தன் அனுப்பிவைத்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இல்லையேல் யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதிக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த அறிவித்தலின் பிரதி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
![]()