பகிர்வுகள் …. கலை இலக்கியப் பத்தித் தொடர்… பகிர்வு – 15 … செங்கதிரோன்


கலிக்கோ அப்துல் ரகுமானுக்கு வாழ்த்துப்பா
கடந்த இரு பத்திகளிலும் (பகிர்வு – 13 + பகிர்வு – 14) புதுக்கவிதை குறித்த எனது பார்வையினைப் பகிர்ந்து கொண்டேன். இவ்விரு பத்திகளையும் படித்த பலர் என்னுடன் உடன்பட்டார்கள். எவரும் முரண்பட்டுக் கொள்ளவில்லை.
கவிதைப் படைப்புக்கு யாப்பு ஒரு வழிகாட்டியே தவிர அதனைக் கட்டியழ வேண்டியதில்லை. யாப்பை வளைக்கலாம் – மீறலாம் – உடைக்கலாம். சட்டத்தை வளைப்பது – மீறுவது – உடைப்பது போல. ஆனால், அறிந்தவன்தான் அதனை வளைக்கவும் – மீறவும் – உடைக்கவும் வேண்டும்.
ஆனால், யாப்பு பற்றிய அறிவு அறவே இல்லாமல் கவிதை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் இறுக்கமான வசனமொன்றைத் துண்டு துண்டாக உடைத்து, வரிசையிலே வைத்தெழுதும் சொல்லடுக்கு வடிவத்தைக் கவிதையென்று கருதமுடியுமா? அவற்றையெல்லாம் கவிதையென்று கணக்கிலெடுக்க முடியுமா? பெரும்பாலான புதுக்கவிதைகளும் புதுக்கவிதைத் தொகுதிகளும் அப்படித்தானே இருக்கின்றன. அவை கவிதையா? இல்லையா என்பது ஒருபுறமிருக்க புதுக்கவிதை என்ற மகுடத்தில் புரியாத ‘புதிர்’களல்லவா வந்து குவிகின்றன. படைப்பாளி எதைச் சொல்லியிருக்கிறார்? எதனைச் சொல்லவருகிறார் என்பதே தெரியவில்லை. அதற்குப் பெயர் குறியீடாம்.
தமிழ்க்கவிதைப் பாரம்பரியத்தின் முதற்கட்டம் சங்கம் மற்றும் சங்கம் மருவிய காலத்துப் பண்டைத் தமிழ் இலக்கியங்களெனில் அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ள பின்னாளில் உரையாசிரியர்கள் எழுந்தார்கள். ஏனெனில் அவை கடுமையான செய்யுள் நடையில் அமைந்திருந்தன.
தமிழ்க்கவிதைப் பாரம்பரியத்தின் இரண்டாம் கட்டம் பக்தி இலக்கியங்களாகும். அவை அதற்கு முந்திய பண்டைத் தமிழ் இலக்கியங்களைவிடவும் எளிமைப்படுத்தப்பெற்றனவாய் படிப்பவர்களின் புலமைத் தகுதிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட விழுக்காடு விளங்கும் தன்மையிலே விளங்கின.
தமிழ்க்கவிதைப் பாரம்பரியத்தின் மூன்றாம் கட்டம் ‘பாரதியுகம்’ ஆகும். சாமான்யர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய சந்தங்களுடன் – இலகுவான மொழியில் கவிதைகள் எழுந்தன. இதைத்தானே வளர்ச்சியென்பது. புதுக்கவிதைகள் புரியாத புதிர்களாகவிருந்தால் அவற்றைப் புரிந்து கொள்ள பின்னாளில் உரையாசிரியர்கள் தேவைப்படுவார்களா? அப்படியானால் புதுக்கவிதையைத் தமிழ்க்கவிதைப் பாரம்பரியத்தின் வளர்ச்சிக் கட்டமாக வகைப்படுத்தலாமா?
இவ்வாறான வினாக்கள் ஒருபுறமிருக்க, புதுக்கவிதை வடிவத்தையும் ஓசை (சந்தம்) உள்ளதாக – உணர்ச்சி வெளிப்பாடாக யாப்பின் கூறுகள் அமைந்ததாகக் (உவமையணி – உருவகஅணி – உயர்வு நவிற்சியணி – தற்குறிப்பேற்ற அணி போன்ற அணிகளும் எதுகை, மோனைகளும், இயைபுத் தொடைகளும் அமைந்ததாகக்) கையாளமுடியும். அதற்குக் கவிதை பற்றிய முழுமையான புரிதல் அவசியம். கவிதையின் வடிவம் வேறு. கவித்துவம் வேறு, யாப்பு முதலில் கவிதைக்கு வடிவத்தை வழங்குகிறது. அதனால் யாப்பமைதியோடு எழுதுப்பட்டவையலெ;லாம் கவித்துவம் நிறைந்த கவிதைகளாகி விடவும் மாட்டாது. கவிதையின் வடிவம் உடல் என்றால் கவித்துவம் உயிர் போன்றது.
மரபோ புதுசோ கவித்துவமில்லாக் கவிதை உயிரற்ற உடல்போன்றது. கவிதையின் வடிவத்தைக் கனியாகக் கருதினால் அதில் ஊறிப்போயுள்ள சாறுதான் கவித்துவம். கனியைப் பிழிந்தால் சாறு கொட்டுவதுபோல கவிதையை நுகரும்போது கவித்துவம் உணரப்படல் வேண்டும்.
எனவே, கவிதையொன்று மரபுக்கவிதையென்று கூறப்பெற்றாலென்ன அல்லது புதுக்கவிதையென அடையாளப்படுத்தப் பெற்றாலென்ன அது கவிதை பற்றிய முழுமையான புரிதலுடன் யாப்பு பற்றிய அறிதலுடன் கவித்துவச்செறிவை வழங்கக்கூடிய கவிதைக்கு உயிர்நாடியான ஓசையுடனும் (சந்தத்துடனும்) – உணர்ச்சி வெளிபாடுகளுடனும் – பொருத்தமான யாப்புக் கூறுகளுடனும் படைக்கப்படுமாயின் அதுவே கவிதை. அது ‘மரபு’ ஆகவிருந்தாலென்ன அல்லது ‘புது’ சாகவிருந்தாலென்ன அது ஒரு பொருட்டல்ல என்பதுதான் ‘புதுக்கவிதைப்போக்கு’ க்கு எதிராகப் போர்க்கொடி ஏந்தாமல் விடக்கூடிய எனது சமரச நிலைப்பாடு.
இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பரீட்சார்த்தமாக ஒரு கவிதை படைக்கும் வாய்ப்பு எனக்குச் சிந்தித்தது.
2002 ஆம் ஆண்டு கொழும்பிலே நடைபெற்ற கம்பன் விழாவுக்குத் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த பேராளர்களுள் கவிக்கோ அப்துல்ரகுமானும் அடங்கியிருந்தார். அவரை அழைத்துத் தேநீர் விருந்தளித்துக் கண்ணியப்படுத்த கொழும்புத் தமிழ்ச்சங்கம் தீர்மானித்து அந்நிகழ்வில் ‘வாழ்த்துப்பா’ வொன்றினை வழங்கும் பொறுப்பை என் தலையில் சுமத்தியது அதுதான் மேற்கூறப்பெற்றவாறு எனக்குச் சிந்தித்த வாய்ப்பு. அந்த வாழ்த்துப்பா இதோ.
கவிக்கோ அப்துல் ரகுமான் – ‘புதுக்கவிதை’
இராமனுக்கு பக்த ஹனுமான்.
யாப்பை அறிந்து மீறி – தமிழ்க் கவிதை
யாத்த பெருங்கவிஞன்.
தமிழ்க்கவிதைப்,
போக்கறிந்து புதுக்கவிதை
படைத்துப் புகழ் படைத்தோன்.
மறரபறிந்த மா கவிஞனானாலும் – ‘யாப்பு’ச்
சிறையுடைத்துத்” தமிழ்க்கவிதை”ச்
சீதையினை மீட்டு வந்தோன்.
அறிந்தவனே அதை உடைத்து
ஆக்கம் படைத்தால்தான்
அரங்கேறும்! அதுதான்
ஆரோக்கியம் ஆகும். – ஆனால் இன்று
பூப்படையாப் பெண்களெல்லாம்
பிள்ளைபெற வந்ததுபோல் – கவிதை
யாப்பறியாப் பேர்களெல்லாம்
பாப்புனைய வந்துவிட்டார்.
யாப்பே வேண்டாமாம்!
‘யதார்த்த’க் கவிதைகளாம்!
ஓசை, உருவம், உணர்ச்சி, உள்ளடக்கம்
ஒன்றுமே வேண்டாமாம்!
புற்றுக்குள் ளிருந்தீசல்
புறப்பட்டு வந்ததுபோல்
“புதுக்கவிதை”ப் புலவர்கள்.
கொட்டும் குளவிக்
கூட்டைக் கலைத்ததுபோல்
எட்டுத்திக்கெங்கும்
இவர்கள்தான் ஏராளம்.
வெற்றுத்தகரத்தில்
வீணை ஒலிக்குமா? – இக்
கற்றுக்குட்டிகளால் – தமிழ்க்
கவிதை செழிக்குமா?
வாக்கியத்தை முறித்துப்பின்
வரிசையிலெ வைத்தெழுதி
ஆக்கியதால் வந்த சொல்
அடுக்கைத்தான் அதிகம் பேர்
சோக்கான கவிதையெனச்
சோடித்துக் காட்டுகிறார்.
கேட்பதற்கு யாருமில்லை
என்றெண்ணிப் – பேனாவால்,
கிறுக்கித் தள்ளுகிறார் – அவற்றில் சிலவற்றை
பொறுக்கி யெடுத்துப்பின்
புதுக்கவிதைப்,
புத்தகமும் போடுகிறார்.
முதற்பிரதி வாங்கவென முந்தும் புரவலர்கள்,
முன்னுரைகள் வழங்க மூத்த பேராசிரியர்கள்,
காலைப்பிடித்தால் இக்’கவிஞர்’ கூட்டத்தார்
கோலைப்பிடித்தெழுதிக் குவித்த வரிகளெல்லாம்
சாலச்சிறந்ததெனச் சாற்றும் கலாநிதிகள்
இருக்கும் வரைக்கும் – இந்த
‘இழவு’த் தொழில் இருக்கும்.
‘பம்மாத்து’ கவிதையிலே
பண்ணுமிப் போக்கினைநாம்
‘கவ்வாத்து’ப்பண்ணும்
காலம் வரவேண்டும்.
ஆதலினால் – கவிக்கோவே!
அப்துல்ரகுமானே!
தடம்புரளாதென்றும்
தமிழ்க் கவிதைத் தேரோட
வடம் இழுக்க வாருங்கள்!
வழ்த்துகிறோம்! வழ்த்துகிறோம்!!

‘வாழ்த்துப்பா’ வை நான் வாசித்துக் கொண்டிருக்கையில் கொழும்புத் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் சிலர் எங்கே இக்கவிதையைக்கேட்டு கவிக்கோ அப்துல்ரகுமான் கோபித்துக்கொண்டு விடுவாரோ என்றெண்ணி முகத்தைச் சுழித்துக்கொண்டனர். அவ்வாறான அசம்பாவிதங்கள் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை.
புன்சிரிப்புடன் கவிதையைச் செவிமடுத்திருந்த கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் நிகழ்வின் நிறைவில் கவிதையின் உள்ளடக்கத்தை மெச்சினார். கவிதையின் வடிவத்தையும் அதன் எடுத்துரைப்பு முறைமையையும் பாராட்டிய அவர் கவிதையின் பிரதியொன்று தனக்கு வேண்டுமென்று கேட்டுவாங்கித் தன்னுடன் எடுத்துச் சென்றார். மட்டுமல்ல புதுக்கவிதை பற்றிய எனது பார்வையுடன் தான் முழுமையாக உடன்படுவதாகவும் என்னிடம் கூறிச் சென்றார்.
![]()