இலங்கை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; கோதா எந்த நேரத்திலும் கைதாகும் சாத்தியங்கள்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோதாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்திருந்த இந்த மனு நேற்று வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்ட போதே இந்த மனுவை தள்ளுபடி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு திட்டங்கள் உள்ளதாகவும், அவ்வாறு தான் கைது செய்யப்படுவதையோ அல்லது தன்னை கைது செய்து தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரியே முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுவில், பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் , குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு, மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்பான வழக்கின் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவிற்கும் மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த ஜுன் 3ஆம் திகதி வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது.

அன்றைய தினத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நீதிமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவை அடிப்படையாகக் கொண்டே குறிப்பிட்ட மூவருக்கும் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.

இதற்கமைய கோதாபய ராஜபக்‌ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், இதற்காக அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறான நிலைமையிலேயே தனது கைதை தடுத்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி அவர், தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த ஜுலை மாதங்களில் நீதிமன்றத்தில் ஆராயப்பட்டதுடன், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பான அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்போது இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்கள் குழாம், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *