இலக்கியச்சோலை

பகிர்வுகள் …. கலை இலக்கியப் பத்தித் தொடர்… பகிர்வு – 23… செங்கதிரோன்

செங்கதிரோன்

ஆற்றலின் ஆற்றுகை

மட்டக்களப்பு கதிரவன் கலைக்கழகமும் கண்ணகி கலை இலக்கியக் கூடலும் ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்த ‘ஆற்றலின் ஆற்றுகை’ எனும் மகுடமிடப்பெற்ற கலை நிகழ்வு 01.11.2026 அன்று மட்ஃபுதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் கண்ணகி கலை இலக்கியக்கூடலின் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு இரவு 8.00 மணிக்கு நிறை வுற்றது.

இந்நிகழ்வில் ஈழத்தமிழ்க்கலைஞர் ஒன்றியத்தின் தலைவர் வைத்திய கலாநிதி சி.சிவன்சுதன் தலைமையில் ஒன்றியத்தின் மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்களும் வருகை தந்து ஆற்றுகைகள் நிகழ்த்தினர். வடக்கும் கிழக்கும் கலைகளால் இணைந்த நிகழ்வாக இது அமைந்தமை சிறப்புடைத்தாகும்.

1976 இல் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் ஜனனித்து கடந்த ஐம்பது வருட காலமாக கலை இலக்கியம், பண்பாடு, கல்வி, ஆன்மீகம், சமூகப் பணிகளுக்கூடாகப் பயணித்து அண்மையில் (27.09.2026) தன் பொன்விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடிய கதிரவன் கலைக்கழகப் பொன்விழா ஆண்டின் 66 ஆவது நிகழ்வாக இவ் ‘ஆற்றலின் ஆற்றுகை’ இடம்பெற்றது.

கிழக்குமாகாணத் தமிழர்களைக் கலை இலக்கியப் பண்பாட்டுத் தளத்தில் ஒன்றிணைத்து அவர்களைக் கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி, பொருளாதாரம், ஆன்மீகம், சூழல் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் மேம்பாட்டை நோக்கி அறிவுபூர்வமாக ஆற்றுப்படுத்தும் சமூக அசைவியக்கமாக 2011 இல் ஆரம்பித்து ஆண்டுதோறும் கண்ணகி கலை இலக்கிய விழாக்களை பிரதேச ரீதியாக நடாத்திவரும் கண்ணகி கலை இலக்கியக்கூடலும் இந் நிகழ்வில் தன்னை இணைத்துக் கொண்டது.

அதுபோலவே, கடந்தவருடம் (2025) ஜனவரியில் வவுனியாவில் நடைபெற்ற அதன் முதலாவது தேசிய மாநாட்டில் உதயமாகி அகில இலங்கை ரீதியாகத் தமிழ்க்கலைஞர்களை ஒன்றிணைக்கும் வலையமைப்பாக இயங்கிவரும் ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியமும் இந்நிகழ்வில் தன்னை இணைத்துக் கொண்டது.

எதிர்காலத்தில் சைவப்புரவலர் வி. றஞ்சிதமூர்த்தி தலைமையிலான மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தையும் இணைத்துக்கொண்டு ஒரு கூட்டுச்செயற்பாடாக ‘ஆற்றலின் ஆற்றுகை’ எனும் இந்நிகழ்வைப் பிரதேச ரீதியாக முன்னெடுப்பதன் மூலம் கலை இலக்கிய ஈடுபாட்டை இளைய தலைமுறையினர் மத்தியிலே ஏற்படுத்துவதும் கலை இலக்கிய ஆற்றலுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களது ஆற்றல்களை வெளிக்கொணர்வதும், மூத்தோர்களின் வழிகாட்டலிலும் நெறிப்படுத்தலிலும் தமிழ்ச்சமூகத்தின் கலை இலக்கிய பண்பாட்டு ஆன்மீக விழுமியங்களை அடுத்த தலைமுறைக்கு மடைமாற்றம் செய்யும் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் தமது எதிர்கால இலக்குகளாகும் என இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

எழுபத்தைந்து வீதம் பாடசாலைச் ச pறார்களினதும் இளைஞர் யுவதிகளினதும் ஆற்றுகைகளும் இருபத்தைந்து வீதம் முதியோர்களின் ஆற்றுகைகளும் இடம்பெற்ற இவ் “ஆற்றலின் ஆற்றுகை” நிகழ்வு பொத மக்களின் அமோக வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது.

கனகச்சிதமாக வடிவமைக்கப்பெற்ற மேடை ஒழுங்குகளும், முறையாகப் பயிற்சியளிக்கப் பெற்று ஆற்றுகை செய்யப்பெற்ற பாடசாலைச் சிறார்களின் அவைக்காற்றுகைகளும் கதிரவன் கலைக்கழகத் தலவர் கதிரவன் த. இன்பராசாவும் அவருக்குத் துணையாக நின்ற தனுஷ்கரன் சோலையூரானும் வழங்கிய வசீகரமான நிகழ்ச்சித்தொகுப்பும் நிகழ்வுக்கு மெருகூட்டின. ஐந்து மணிநேரம் அலுப்புத்தட்டாமல் பார்வையாளர்கள் ஆர்வமுடன் நிகழ்வு இன்னும் நீடிக்காதா என்ற எதிர்பார்ப்புடன் பங்கேற்று மகிழ்ந்ததையும் அவதானிக்க முடிந்தது.

நிகழ்வில் பங்கேற்ற அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்தின் தலைவர் வைத்தியகலாநிதி சி. சிவன்சுதன் அவர்களின் தனிப்பட்ட மற்றும் கண்ணகி கலை இலக்கியக்கூடலும் கதிரவன் கலைக்கழகமும் இணைந்தும் வழங்கிய அனுசரணையில் கற்றல் உபகரணங்கள் அடங்கிய ஊக்குவிப்புப் பரிசுப்பொதிகளும் வழங்கப் பெற்றமை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தன.

நிகழ்வில் பங்குபற்றிய முதியோர்கள் மேடையில் பாராட்டிக் கௌரவிக்கப்பெற்றனர்.

இளைய தலைமுறையினரின் கலை இலக்கிய ஆற்றல்களை வெளிப்படுத்தக் களம் அமைத்துக் கொடுக்கும் இவ்வறான நிகழ்வுகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும்படியும் அதற்கான நிதி அனுசரணைகளைத் தாம் வழங்க ஆயத்தமாகவுள்ளதாகவும் பார்வையாளர்களாக வந்திருந்த பல நலன்விரும்பிகள் தாமாக முன்வந்து தமது எண்ணத்தை ஏற்பாட்டாளர்களிடம் வெளிப்படுத்தினர்.

01.11.2026 அன்று தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்துள்ள ‘ஆற்றலின் ஆற்றுகை’ எதிர்காலத்தில் கிழக்கிலங்கையில் கலை இலக்கிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தவல்லது என்ற நம்பிக்கையை அன்றைய தினம் ஊட்டியது.

நிகழ்வுக்குத் தலைமைதாங்கிய செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணனின் “அரசியலில் சாதிக்க முடியாத சமூக ஒற்றுமையும், சமூக மேம்பாட்டையும் கலை இலக்கியங்களினூடாகச் சாதித்துக் காட்டும் எத்தனமே இது” என்ற அறிவிப்பு பலத்த கரவொலிகளின் மத்தியில் அவையில் ஓர் அதிர்வையும் அருட்டுணர்வையும் ஏற்படுத்தத் தவறவில்லை. ‘கலைகளால் ஓர் இணைவு’ என இந்நிகழ்வை வர்ணிக்கத் தோன்றிற்று.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *