முச்சந்தி

செம்மணிப் புதைகுழி அறிக்கையில் சோமதேவா குறிப்பிடாத முக்கிய தடயப் பொருட்கள்

செம்மணி அகழ்வின் போது இராணுவத்தினர் பயன்படுத்திய ஆட்லறிகளின் பாகம், பாடசாலை புத்தகப் பை, சிறுவர்களின் விளையாட்டு பொம்மை, சில காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டன. எனினும் அவை தொடர்பாக அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை என தெரிவித்த சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல்,

தொல்லியல் நிபுணத்துவத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களை பேராசிரியர் ராஜ் சோமதேவா அறிக்கையில் சமர்ப்பித்துள்ளார் என ஆட்சேபித்தார்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செம்மணி மனித புதைகுழி பற்றிய கலந்துரையாடலில் சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ சோமதேவா முன்னேற்ற சமர்ப்பித்த மூன்று அறிக்கையில் இருந்து இறுதியாக சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை வேறுபட்டுள்ளது என்பது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் சொல்லப்படுகிறது. பாரிய மனித புதைகுழி என்ற சொல் வேண்டும் என்று தவிர்க்கப்பட்டுள்ளது.

முன்னைய அறிக்கைகளில்,இந்தப் பிரதேசத்தில் பெரும் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாகவும் தெளிவாகச் சொல்லி இருந்தார். ஆனால் அது இந்த(கடைசி) அறிக்கையில் தவிர்க்கப்பட்டுள்ளது. பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. உடல்கள் புதைக்கப்பட்ட நிலைமையை பார்க்கும் போது வன்முறையான சூழல் மனித உரிமை மீறல் என்ற அடிப்படையிலேயே காணப்பட்டது. குறித்த விடயமானது இறுதியாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் காணப்படவில்லை.

பாரிய இயற்கை இடர்,தொற்றுநோய் காரணமாக சடலங்கள் புதைக்கப்பட்டதற்கான எந்த தடயமோ சான்றோ சமர்ப்பிக்கப்படவில்லை. அவர் சுகாதாரத் திணைக்களத்தின் வரலாற்றுச் சான்றுகள், வைத்தியசாலை ,பிரதேச சபை மூலம் விஞ்ஞானபூர்வ அறிக்கைகளை சமர்ப்பித்து அதன் மூலம் அந்த விடயங்களை நிரூபிக்க தவறிவிட்டார். அதனை நாம் வலிந்து ஆட்சேபிக்கின்றோம்.

அந்தப் பகுதி இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பகுதி. மேலும் 1995 தொடக்கம் 2010 வரையான காலப்பகுதி குடாநாடு முழுவதும் குறிப்பாக செம்மணியில் இராணுவம் நிலை கொண்டிருந்தது. பல காணாமல் போதல்கள் நடந்துள்ளன. 628 காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் உத்தியோகபூர்வமாக பதியப்பட்டுள்ளது.

இத்தகைய விடயங்களை பேராசிரியர் ராஜ் சோமதேவா தனது அறிக்கையில் கவனத்தில் எடுத்ததை காணமுடியாதுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் 54 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு குறிப்பிட்ட நீதிவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற விடயம் பரிந்துரைக்கப்பட்டது. அந்த விடயங்கள் கருத்தில் எடுக்கப்படவில்லை.ஒரு சில சான்றுப் பொருட்கள் தொடர்பாக எதுவிதமான தகவலும் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

அகழ்வின் போது இராணுவத்தினர் பயன்படுத்திய ஆட்லறிப் பாகம், பாடசாலை புத்தகப் பை, சிறுவர்களின் விளையாட்டு பொம்மை, சில காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை.

1994,1995,1991 ஆகிய காலப்பகுதிகளை சுட்டி நிற்கும் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட போதும் அது பற்றி அறிக்கையில் குறிப்பிடாதமை அறிக்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. மண் மாதிரிகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் இந்த அறிக்கையில் காணப்படவில்லை.

பிறசான்றுப் பொருட்களை ஆராய்வதே அவரது பணி. குறிப்பாக இந்த அறிக்கையில் முதலாம் பக்கத்தில் இருந்து 17 ஆம் பக்கம் வரை அந்த விடயங்கள் காணப்படுகிறது. 17 ஆவது பக்கத்தில் இருந்து என்பு தொகுதி பற்றிய விடயங்கள் ஆராயப்படுகின்றன. அந்த விடயங்கள் அவரது தொல்லியல் நிபுணத்துவத்திற்கு அப்பாற்பட்டது. அவற்றை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பது சட்ட வைத்திய துறை சார்ந்த நிபுணர் ஒருவராலேயே செய்ய முடியும். தேவையற்ற விடயங்களில் கருத்து வெளியிட்டார் என்றே தோன்றுகிறது.

எனவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பில் இந்த அறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

வேறு பிற சான்று பொருட்களைக் கொண்டு சுயாதீனமாக சர்வதேச தரத்தில் அறிக்கையை பெற சிபாரிசு செய்கின்றோம். சர்வதேச நிபுணத்துவ மேற்பார்வையில் அதனை செய்ய பரிந்துரைக்கின்றோம் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *