இலங்கை

சி.ஐ.டி. அழைத்தும் நாட்டுக்கு வராமலிருந்தால் பாதாளக் குழுக்களின் நிலையே சிரந்திக்கும் ஏற்படும்

சீஐடியால் அழைக்கப்பட்டுள்ள சிராந்தி ராஜபக்‌ஷ நாட்டுக்கு வராமல் இருந்தால் டுபாய், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்தவர்களை அழைத்து வந்ததை போன்று அழைத்து வரப்படுவார் என்றும், இந்நாட்டு மக்களுக்குக் குற்றமிழைத்த எவரும் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படியென்றால் கடந்த காலங்களில் திருடர்களா இருந்துள்ளனர் என்று எழுப்பப்படட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கூறுகையில்,

அவர்கள் பகிரங்கமாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்த செயல்களின் விளைவுகளைத்தான் 2022-23 காலப்பகுதியில் நாட்டின் மக்கள் எதிர்கொண்டனர். எரிபொருள் விலைகள் உயர்ந்து, எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு, மருந்துகள் இறக்குமதி செய்ய முடியாமல், உரங்கள் கொண்டு வர முடியாமல், மக்கள் வரிசைகளில் நின்று உயிரிழந்து, நாட்டின் பொருளாதாரம் முடங்கியது. அதன் விளைவாகவே மக்கள் வீதிக்கு இறங்கி மக்கள் போராட்டத்தை நடத்தினர்.

அந்த பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவற்றைத்தான் தற்போது விசாரணைகள் மூலம் கண்டறிந்து வருகிறார்கள். ஒன்று, அவர்களின் தவறான பொருளாதாரக் கொள்கை; மற்றொன்று, அந்த தவறான கொள்கையைப் பின்பற்றியபோது அவர்கள் செய்த மோசடிகள், ஊழல்கள் மற்றும் அநீதிகள் வெளிப்பட்டு வருகின்றன. விமானங்களை கொள்முதல் செய்ததில் எவ்வளவு தரகு பணம் கைமாறியுள்ளது, மருந்துகள் கொள்முதல் செய்ததில் எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது, தரமற்ற மருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளனவா என்பது குறித்து தற்போது நீதிமன்றங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவை அனைத்தையும் விசாரணை நிறுவனங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகின்றன.

எனவே, அவர்கள் கத்தி கூச்சலிடுவதில் எந்தப் பயனும் இல்லை. எங்கள் ஆட்களைத்தான் கைது செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஏனென்றால், திருடர்கள் பெரும்பாலானோர் அங்கேயே இருக்கும்போது, அங்கிருந்துதானே அதிகமானோரைக் கைது செய்ய வேண்டியிருக்கும்? என்றார்.

இதேவேளை சிரந்தி ராஜபக்‌ஷவுக்கு சீஐடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், அவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பாமல் இருப்பது தொடர்பிலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்.

அவருக்கு சீஐடிக்கு வருமாறு கூறப்பட்டுள்ளது. வந்த பிறகு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர் வராவிட்டால், டுபாய், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்தவர்களைக் கூட நாங்கள் அழைத்து வந்திருக்கிறோம். பசில் ராஜபக்ஷ தொடர்பான வழக்குகளும் செயல்பாட்டில் உள்ளன. விசாரணை நிறுவனங்கள் அதுகுறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளன. பயப்படத் தேவையில்லை, இந்நாட்டு மக்களுக்குக் குற்றமிழைத்த எவரும் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றாலும் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *