இலங்கையில் தூக்குமேடை தயார் நிலையில்

அரசாங்கம் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்தால், அதனை நிறைவேற்றுவதற்காக வெலிக்கடைச் சிறைச்சாலையின் தூக்குமேடை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக இரு அலுகோசுகள் (Hangmen) தயார் நிலையில் உள்ளதாகவும் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் கொண்டுவருவது குறித்து அரசாங்கம் மீண்டும் அவதானம் செலுத்தி வரும் பின்னணியிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, இந்த இரு அலுகோசுகள் வெலிக்கடைச் சிறைச்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது தங்களது வீடுகளில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், வழக்கமான சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு கடமைக்கான அழைப்புக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் அடையாளங்கள் ரகசியமாகப் பேணப்பட்டு வருகின்றன.
இலங்கையில் தற்போது தொழிற்படும் ஒரேயொரு தூக்குமேடை கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் மட்டுமே உள்ளது. முன்னர் கண்டி போகம்பறைச் சிறைச்சாலையிலும் தூக்குமேடை ஒன்று இருந்தபோதிலும், அச்சிறைச்சாலை மூடப்பட்டதைத் தொடர்ந்து வெலிக்கடைச் சிறைச்சாலை மட்டுமே மரண தண்டனையை நிறைவேற்றும் கட்டமைப்பைக் கொண்ட ஒரே இடமாகத் திகழ்கிறது.
சிறைச்சாலை அதிகாரிகளின் தரவுகளின்படி, தற்போது 806 கைதிகள் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்களுள் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 52 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் அடங்கலாக 58 பேர் உள்ளனர். மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒரு வெளிநாட்டவரும் அடங்குவதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மீண்டும் மரண தண்டனையை அமல்படுத்துவது குறித்து அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, சிறைச்சாலை அமைப்பின் இந்தத் தயார்நிலை மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற “ரடம எகட்ட” தேசிய செயல்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அதேவேளை, இலங்கையில் மரண தண்டனை நடைமுறையில் நிறைவேற்றப்படாவிட்டாலும், சட்டப் புத்தகங்களில் அது இன்னும் நீடிப்பது ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவாக உள்ள இலங்கைச் சதித்திட்டக் குற்றவாளிகளைப் ஒப்படைக்குமாறு கோரும் (Extradition) முயற்சிகளுக்குப் பெரும் தடையாக உள்ளது.
சர்வதேசச் சட்டக் கோட்பாடுகள் மற்றும் நாடுகடத்தல் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வெளிநாடுகளில் உள்ள சந்தேகநபர்களை இலங்கைக்குக் கொண்டுவருவதில் சட்ட ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் பெரும் சவால்கள் நிலவுவதாகத் தெரியவருகிறது.
பல ஐரோப்பிய நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ளதுடன், அதனை மனித உரிமை மீறலாகவும் கருதுகின்றன. இதன் காரணமாக, மரண தண்டனை அமலில் உள்ள நாடுகளுக்குச் சந்தேகநபர்களை ஒப்படைக்க அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
சில ஒப்பந்தங்கள் மரண தண்டனை விதிக்கப்படக் கூடிய நாடுகளுக்குக் குற்றவாளிகளை ஒப்படைப்பதை வெளிப்படையாகவே தடை செய்கின்றன. அல்லது சந்தேகநபருக்கு மரண தண்டனை விதிக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தைக் கோருகின்றன.
இலங்கையில் கொலை மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்கு நீதிமன்றங்கள் தொடர்ந்து மரண தண்டனை விதித்து வந்தபோதிலும், கடந்த ஐம்பது ஆண்டுகளாக மரண தண்டனையை நிறைவேற்றாமல் இடைநிறுத்தி வைக்கும் நடைமுறையே (de facto moratorium) பின்பற்றப்பட்டு வருகிறது. 1976 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையில் எந்தவொரு மரண தண்டனையும் நிறைவேற்றப்படவில்லை.
இலங்கையில் கடைசியாக 1976 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் “ஹொண்ட பப்புவா” என்று அழைக்கப்படும் எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த சந்திரதாஸ என்ற குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மரண தண்டனையை மீண்டும் அமல்படுத்தும் விவகாரம் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் எழுப்பப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மரண தண்டனையை அமல்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் காரணமாகத் அலுகோசுகள் புதிதாக நியமிக்கப்பட்டதுடன், 2019 ஜூன் மாதம் போதைப்பொருள் குற்றவாளிகள் நால்வருக்கான மரண தண்டனை ஆணைகளிலும் (Death Warrants) சிறிசேன கையெழுத்திட்டார்.
எனினும், இந்நடவடிக்கை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது. அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பால் அரசாங்கத்திற்குள் பிளவு ஏற்பட்டது.
சர்வதேச அளவில் மனித உரிமை அமைப்புகள் இதனைக் கண்டித்ததுடன், தண்டனையை நிறைவேற்றினால் இலங்கைக்கு வழங்கப்படும் ‘ஜி.எஸ்.பி பிளஸ்’ (GSP+) வரிச் சலுகை ரத்து செய்யப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்தது. இறுதியில், அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த இலங்கை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்ததால், மரண தண்டனைக்கான தற்காலிகத் தடை தொடர்ந்தது.
இதன் காரணமாக, நீதிமன்றங்களால் மரண தண்டனைகள் தொடர்ந்து விதிக்கப்பட்ட போதிலும், நாட்டில் நிலவிவரும் நீண்டகால மரண தண்டனை நிறுத்தி வைப்பு நடைமுறை தடையின்றி நீடித்து வருகிறது.
![]()