முச்சந்தி

ஈழத்து மூத்த எழுத்தாளர் வாகரை வாணன் மறைவு

சந்தியாப்பிள்ளை அரியரெத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட ஈழத்து மூத்த எழுத்தாளரும், பல்துறை ஆளுமையாளருமான வாகரை வாணன் நேற்றுத் திங்கட்கிழமை (10) காலை வயது மூப்பின் காரணமாகத் தனது-85 ஆவது வயதில் மட்டக்களப்பு நாவற்குடாவில் காலமானார்.

மட்டக்களப்பு வாகரை மண்ணில் 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்-22 ஆம் திகதி பிறந்த வாகரை வாணன் தனது 15 ஆவது வயதில் எழுத்துப் பணியை ஆரம்பித்தவராவார். ஆங்கிலம், லத்தீன் மொழிகளில் புலமை கொண்டவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை ஆக்கிருப்பவர். இவர் 1982 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் தமிழ் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

வாகரை வாணன் பத்திரிகை ஆசிரியர், கவிஞன், ஆய்வாளன், மொழிபெயர்ப்பு இலக்கியவாதி, சிறுவர் இலக்கிய கர்த்தா, நாடகத் தயாரிப்பாளர், சிறுகதை ஆசிரியர், வரலாற்று ஆசிரியர் எனப் பல்வேறு பரிணாமங்களுடைய ஆளுமையாளர். இவர் தனது வாழ்நாளில் 42 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

கலைத் துறையின் மேம்பாட்டுக்காக உன்னதமான சேவையாற்றிய கலைஞர்களைக் கெளரவிக்கும் முகமாக இலங்கை அரசால் வழங்கப்படும் உன்னதமான விருதான கலாபூஷணம் விருது இவருக்குக் கடந்த- 2010 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது. அவ் ஆண்டே முதலமைச்சர் விருதும் இவருக்கு வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளது. இதுமாத்திரமன்றி எழுத்துப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகள், கெளரவங்களையும் இவர் குவித்துப் பெருமை சேர்த்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உத்தியோகபூர்வப் பத்திரிகையான ‘சுதந்திரன்’ பத்திரிகையில் இவர் பணியாற்றியவர்.

மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியால் 1960 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்ற அறவழிப் போராட்டங்களிலும் பங்குபற்றியவர். தமிழர் தேசியச் சிந்தனை மற்றும் தமிழ் உணர்வு கொண்ட ஆளுமையாகவும் இவர் அறியப்படுகிறார்.

இதேவேளை, மட்டக்களப்பு நாவற்குடா புனித சின்ன லூர்த்து அன்னை திருத்தலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (11) மாலை 3.30 மணியளவில் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அவரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு நாவற்குடா கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button