கவிதைகள்

“நல்ல நட்பை நம்முளம் இருத்துவோம்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா. 

கண்ணனின் நட்பைக் கெளரவர் வெறுத்தார்
கண்ணனின் நட்பைப் பாண்டவர் ஏற்றார்
நட்பை வெறுத்தார் நலமெலாம் இழந்தார்
நட்பை ஏற்றார் வெற்றியில் திகழ்ந்தார் 
 
ஆண்டவன் நட்பால் அடியார்  சிறந்தார்
அடியார் நட்பால் ஆண்டவன் உயர்ந்தார்
நட்பை ஆண்டவன் நம்பியே வருவான்
சுந்தரர் நட்பினைச் சிந்தையில் வைப்போம்
 
கூடா நட்பு  கேடாய் முடியும்
நல்ல நட்பு நன்மையே நல்கும் 
நல்ல நட்பை நம்முளம் கொண்டால்
எல்லாம் சிறக்கும் இன்பம் பெருகும்
 
முகநக நட்பு நட்பே அல்ல
அகநக நட்பே நட்பே யாகும் 
பகையினை நட்பாய் ஆக்கிடும் பாங்கில்
அமைந்திடும் நட்பே அதியுயர் நட்பு 
 
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
கூடும் அன்பினில் கும்பிடலே யன்றி
வீடும் வேண்டா விறலின் மேவினார்
நாடும் நட்பு நமக்கென்றும் நன்மையே 
 
பெரியவர் நட்பைப் பேணிட வேண்டும்
பணிவுடன் அவரைப் பணிந்திட வேண்டும்
கயவரின் நட்பைக் களைந்திட வேண்டும்
கருத்தெலாம் பக்குவம் இருத்திட வேண்டும் …. !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்   …. அவுஸ்திரேலியா 

Loading

One Comment

  1. நட்பு தானே நாம் யார் என்று நமக்கே உணர்த்தும். சான்றோரை, வல்லாரை, நல்லாரை, பண்பாளரை நட்பாய் கொண்டால் நாமும் நற்குணம் யாவும் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *