தமிழ்மொழிபோல் வாழ்க!…. கவிதை… பாடும் மீன் சு.ஸ்ரீகந்தராசா

முத்தமிழின் சுவை மணக்கும் மூதறிஞர் பலர் வழங்கும்
எத்தனையோ துறைசார்ந்த எண்ணங்கள் நிறைந்திருக்கும்
வித்தகர்கள் வீசுகின்ற விவாதங்கள் கனல்பறக்கும்
தத்திநடை பயிலிளவல் சகலருக்கும் களம் அமைக்கும்
சித்தாந்தம் வேறுபட்டுச் சிந்திக்கும் மாந்தருக்கும்
புத்தம்புதுக் கருத்தைப் புரிந்துணர வாய்ப்பளிக்கும்
கத்தும் கடல்தாண்டிக் கண்டமெல்லாம் மணம் பரப்பும்
வித்தையறி அக்கினிக் குஞ்சுதனை வாழ்த்துகின்றேன்.
தமிழினத்திற் கறிவுவூட்டும் தக்கதொரு சுடராக
தமிழ் மொழியின் சிறப்புணர்த்தும் தளராத விளக்காக
அமுதெனவே தமிழ்பருகும் ஆர்வலர்க்கு விருந்தாக
தமதறிவை அனுபவத்தைத் தரணிக்குப் பயனாக்கும்
தமிழாய்ந்த பெரியோர்க்குத் தக்கதொரு வடிகாலாய்
அமைவுற்றுப் பதினாறாம் ஆண்டினிலே நடைபயின்று
எமதுகரம் வருகின்ற அக்கினிக் குஞ்சேநீ,
நமதுமொழி போலென்றும் நனிசிறந்து வாழியவே!!

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
அவுஸ்திரேலியா
![]()