13 ஆண்டுகால போராட்டம்; ராணாவுக்கு கண்ணீருடன் குடும்பத்தினர் பிரியாவிடை

‘அனைவரையும் மன்னித்துவிடு. நீ செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று சொல்லி 13 ஆண்டாக கோமாவில் படுத்திருந்த ஹரிஷ் ராணாவுக்கு அவருடைய குடும்பத்தினர் கண்ணீருடன் பிரியா விடை கொடுத்தனர்.
கடந்த 2013ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் மொகாலியில் உள்ள தனது கல்லூரியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த டெல்லி அருகே காஸியாபாத் பகுதியை சேர்ந்த ஹரிஷ் ராணா, அதன் பிறகு சுயநினைவின்றி படுத்த படுக்கையாகவே இருந்து இருந்து வந்துள்ளார்.
அவரது தந்தை அசோக் ராணா, தனது மகனின் துன்பத்தைப் பார்க்க முடியாமலும், சிகிச்சைக்குத் தேவையான நிதி வசதி இல்லாததாலும், மகனைத் தானாக மரணிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த அறிக்கையில், ஹரிஷ் ராணாவின் உடல் முழுவதும் படுக்கைப் புண்கள் அதிகமாக இருப்பதாகவும், அவர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதையும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அறிக்கை மிகவும் மனவேதனையை அளிக்கிறது, அந்த இளைஞரை இதே நிலையில் தொடர்ந்து இருக்க விடுவது மனிதாபிமானமற்றது என்று நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹரீஷ் ராணாவின் உயிர்காக்கும் கருவிகளை அகற்றி கருணை கொலை செய்ய அனுமதி வழங்கியது.
மேலும் வீட்டில் உள்ள ஹரீஷ் ராணாவை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்து ஏய்ம்ஸ் டாக்டர்கள் முறையான வழிமுறைகளை பின்பற்றி அவருக்கு உயிர் நீக்க சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.
நீண்டகால சிகிச்சை அளித்தும் குணமடையாததால் உயிர் காக்கும் சிகிச்சையை கண்ணியமான முறையில் நிறுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.இந்தியாவிலேயே இத்தகைய அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில், ஹரிஷ் ராணாவின் குடும்பத்தினர் அவரோடு கடைசி 22 நிமிடங்களை கழித்த வீடியோ வெளியாகி பார்ப்போர் கண்களை குளமாக்கி வருகிறது.
அதில், ஹரிஷ் ராணாவின் தாயார் மிகுந்த சோகத்துடன் மகனின் அருகில் அமர்ந்திருக்க, பிரம்ம குமாரிகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு சகோதரி ஹரிஷின் நெற்றியில் திலகமிடுகிறார். படுக்கையில் இருக்கும் ஹரிஷின் தலையை கோதியபடி, “அனைவரையும் மன்னித்துவிடு. இப்போது நீ விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது, சரிதானே?” என்று அந்த சகோதரி மென்மையாக கூறுவதும் அதனை ஆமோதிப்பதுபோல் அசையாமல் படுத்திருக்கும் ஹரிஷ் தலையை மட்டும் அசைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
காஸியாபாத் நகரின் அமைதியான அந்தச் சந்தில், அசைவற்றுப்படுத்திருந்த ஹரிஷ் ராணாவின் படுக்கையைச் சுற்றி அமர்ந்து, அவரது குடும்பத்தினர் இறுதி விடை கொடுத்தனர்.
![]()