ஐ.ம.ச – ஐ.தே.க ஒன்றுசேர வேண்டும் சிறுபான்மை சமூகத்துக்கு சிறந்தது; ஹக்கீம் கூறுகிறார்

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிய வேண்டும் என்பதனை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புத்தளத்திற்கு விஜயம் செய்த மு.கா தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், ஹுசைனியாபுரம், பாலாவி, நாகவில்லு, புழுதிவயல் மற்றும் கரைத்தீவு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
புத்தளத்தில் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்த மு.கா தலைவர், மக்கள் பிரதிநிதிகள், மஸ்ஜித் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன் போது பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், குறைபாடுகள், கட்சி நடவடிக்கைகளில் காணப்படும் முன்னேற்றம் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் என்பனவற்றிலும் மு.கா தலைவர் கவனம் செலுத்தினார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
இலங்கை பாராளுமன்றத்தைப் பொறுத்தவரை ஐக்கிய மக்கள் சக்தி பலம் கொண்ட ஒரு கட்சியாக காணப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனான முரண்பாட்டை அடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது.இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தொடர்ந்தும் அரசியல் அரங்கில் முரண்பாட்டோடு காணப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்ட பின்னர்தான் எதிர்க்கட்சிகளுக்கிடையே ஒரு ஒற்றுமையான நிலைப்பாடு தேவை என உணரப்பட்டு அதற்கான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில், இடதுசாரி இயக்கங்களாகவும், சிறுபான்மை சமூகம் குறித்த விவகாரங்களில் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்ற சாதகமான கொள்கைகளை கொண்ட தரப்பினரை ஒன்று சேர வைப்பதில் சிறுபான்மை கட்சிகளாகிய எங்களுக்கும் நாட்டம் உள்ளது.
இதுபற்றி அந்தந்த தலைவர்களுடன் பேசியுள்ளோம். இருந்தாலும் அதனை சாத்தியப்படுத்துவது அவர்களுடைய கடமையாகும். அதுபற்றி நாம் தொடர்ச்சியாக வலிறுயுறுத்தி வருகிறோம்.
அவ்வாறு செய்கின்ற போது சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகளில் முரண்பாடான கொள்கைகளில் இல்லாத தரப்பினரை ஒன்று சேர்ப்பது குறித்தும் அவர்கள் சிந்திக்க வேண்டும்.
மேலும், தீவிரவாத கொள்கைகளுடன் , அந்த சிந்தனைகளுடன் இயங்கும் அமைப்பினரை கலந்துரையாடல்களுக்கு அழைப்பது, தமது கூட்டணிக்குள் இணைக்க முயற்சிப்பது குறித்தும் அவர்கள் சிந்திக்க வேண்டும்.
அவ்வாறானவர்களை ஒன்றினைப்பதனை தவிர்ப்பதுதான் எதிர்கால அரசியலுக்கு சிறுபான்மை சமூகத்தை பொறுத்தவரை சிறந்தது என்பதனை நாம் சொல்லி அவர்கள் தெரிய வேண்டியதில்லை என்றார்.
![]()