கோட்டையில் சலேக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மீதான துன்புறுத்தல்களை நிறுத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் திங்கட்கிழமை முற்பகல் இந்தப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளதுடன், இதில் பௌத்த பிக்குகளும் சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தோரும் கலந்துகொண்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ், கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதுடன், அதன் பின்னர் அவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
தடுப்புக் காவில் சுரேஷ் சலே கொடூரமான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதுடன், அவரின் உரிமைகள் மீறப்படுவதாக அவரின் சட்டத்தரணிகளும், உறவினர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர். அத்துடன் அங்கு அவர் கடும் மன அழுத்தத்தடன், உடல்நிலை மோசமடைந்த நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்ததாக கூறப்பட்டதுடன், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலைமையில் சுரேஷ் சலேக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்துமாறு வலியுறுத்தி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துறு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகளும், பௌத்த அமைப்புகளும் மற்றும் பல்வேறு சிவில் அமைப்புகளும் இணைந்து நேற்றுக் காலை முதல் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அந்தப் பகுதியில் சிறியளவிலான கூடாரமொன்றை அமைத்து, அவ்விடத்தில் அமர்ந்து இந்த சத்தியக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
![]()