மருத்துவமனையிலும் சலே உண்ணாவிரதம்; மனைவி கூறுகிறார்

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதத்தைத் தொடர்வார் என அவரது மனைவி திருமதி மனோரி சலே உறுதிப்படுத்தியுள்ளார்.
மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை தனது கணவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பியபோது, அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் இவ்வாறு கூறினார்.
“தற்போது அவர் எந்த உணவோ பானமோ அருந்தவில்லை. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தேவையான சிகிச்சையை அளிப்பதோடு, உப்புநீர்க் கரைசலைச் செலுத்தவும் மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும், அவர் தொடங்கியுள்ள உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
குடும்ப உறவினர்களின் கூற்றுப்படி, மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும் சுரேஷ் சல்லே, எந்த உணவும் உட்கொள்ளாமல் தனது போராட்டத்தைத் தொடர்கிறார்.
இதேவேளை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம், கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் சமர்ப்பித்த பிரேரணை ஒன்றின் ஊடாகவே இந்த விடயம் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களின் காவலில் இருந்த சுரேஷ் சலே, அவசர சிகிச்சைக்காக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், இதுவரையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
அங்கு தனக்கு மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதைகள் செய்யப்படுவதாகக் கூறி, குற்றப்புலனாய்வு திணைக்கள வளாகத்திற்குள்ளேயே அவர் உணவை தவிர்த்து உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்தே, அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து சுரேஷ் சலே இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
![]()