ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

காணாமல் போனவர்களின் 35 வது வருடாந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று 27 ம் திகதி சீதுவ, ரத்தொழுகம காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவு தூபிக்கு அருகாமையில் நடைபெற்ற நிலையில் கொழும்பில் நீதி அமைச்சுக்கும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்பாட்டமும் இடம்பெற்றது.
“நீதி என்பது சமூகத்தின் நல்வழியை தீர்மானிக்கும் அளவுகோல். அதன் தாமதம் அநீதியை கொண்டுவரும். நோக்கங்களை அடைவதில் சிக்கல்களை ஏற்படுத்தும். சமூகம் குணமடையாது என்பதை சுட்டிக்காட்டும்.” எனும் தொனிப்பொருளில்காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பிரனாந்து தலைமையில் ரத்தொழுகம காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் இடம்பெறும்.
வடகிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டு நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நினைவேந்தல் நிகழ்ச்சியின் பின்னர் காணாமல்போனாரின் குடும்ப ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கொழும்பில் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரிடம் பொதுவான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கையளிப்பதற்காக கொழும்பு சென்றனர். அங்கு நீதி அமைச்சுக்கும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அவர்கள் அமைதியாக ஆர்பாட்டம் செய்தனர்.
நீதி அமைச்சர் எமது கடிதங்களுக்கு பதில் அளிக்காதது ஏன்?, ஜனாதிபதி சகோதரரே உங்களை சந்திப்பதற்கு எங்களுக்கு நேரத்தை ஒதுகித் தாருங்கள் என்ற சுலோக அட்டைகளை ஏந்தி நின்றனர். நீதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் செயலாளர்களிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
![]()