செவ்வந்தி குழுவை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து பிரபல பாதாள குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள இசாரா செவ்வந்தி உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்களை 72 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் புதன்கிழமை நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இவர்கள் ஐவரும் மூன்று இடங்களில் விசேட பொலிஸ் குழுக்களின் கீழ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை இந்த விசாரணைகளின் போது கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் இசாரா செவ்வந்தி ஊடாக பல்வேறு தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கணேமுல்ல சஞ்சீவ கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி பூசா சிறைச்சாலையில் இருந்து கொழும்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த போது நீதிமன்றத்திற்குள் வைத்து சட்டத்தரணி போல் மாறுவேடமிட்ட நபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த சம்பவத்துடன் தொடர்புடைய இசாரா செவ்வந்தி தலைமறைவாகியிருந்தார்.
அந்த சம்பவத்தின் துப்பாக்கிதாரி சம்பவ தினத்தன்றே கைதாகியிருந்த போதும், நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கி கொண்டு சென்று வழங்கிய செவ்வந்தியை பிடிக்க முடியாது போனது.
சம்பவத்தின் பின்னர் இசாரா செவ்வந்தி சில தினங்கள் இலங்கையில் தங்கியிருந்து பின்னர் யாழ்ப்பாணம் ஊடாக இந்தியா சென்று அங்கிருந்து நேபாளத்திற்கு சென்றிருந்தார்.
இவரை தேடி வந்த பொலிஸார், அண்மையில் கைதாகிய கெகல்பத்தர பத்மே ஊடாக செவ்வந்தி தொடர்பான தகவல்களை அறிந்து சில தினங்களுக்கு முன்னர் நேபாளத்தில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் அவரை கைது செய்ததுடன், அவருக்கு உதவிய யாழ்ப்பாண தம்பதியொன்று உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்திருந்தனர்.
கைதாகிய சந்தேக நபர்கள் ஐவரும் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இலங்கையில் இருந்து சென்ற விசேட அதிகாரிகள் குழுவினால் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
.இவர்கள் விசேட பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு மூன்று விசேட பொலிஸ் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி இசாரா செவ்வந்தி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்ஸி மற்றும் ஜே.கே.ப பாய் எனப்படும் ஜப்னா சுரேஸ் ஆகியோர் கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினரிடமும், கம்பகா பபா என்பவர் மேல் மாகாண வடக்கு குற்றவியல் விசாரணை பிரிவிடமும், நுகேகொட பபி எனப்படுபவர் மேல் மாகாண தெற்கு குற்றவியல் விசாரணை பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இவர்களை 72 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் கணேமுல்ல கொலை சம்பவம் தொடர்பில் இசாரா செவ்வந்தியிடம் நடத்தப்படும் விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளதாகவும், அந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
![]()