கிழட்டு யானையும் கூட்டு சவாரியும்!

கிழட்டு யானையும் கூட்டு சவாரியும்!
பாவம் இந்த கிழட்டு யானை. 4 சதாப்தங்களுக்கு மேலாக கடுமையாக உழைத்தே – களைத்துவிட்டது. அந்த யானையால் முன்னேறியோர் ஏராளம். அரசியல் முகவரி பெற்றோரும் தாராளம். அதனால்தான் இன்றளவிலும்கூட அவருக்கென தனிப்படையொன்று உள்ளது. சமூகவலைத்தளங்களில் சொம்பு தூக்கி – கம்பு சுத்தும் சைபர் படைபிரிவும் பக்கபலமாக உள்ளது.
பல நோய்களை சுமந்தபடி வலம்வரும் யானையை அதன் வழியில் விட்டுவிட்டால் கோவில் திருவிழாக்களில் பங்கேற்று, பலரை மகிழ்வித்து கடைசி காலத்தை ஓட்டிவிடும்.
அதற்கென இருந்த ‘மிஸ்டர் கிளின்” பட்டமும் சு(ஊ)ழல் காற்றில் பறந்துவிட்டது.
கோவிலுக்கு சென்றால் கோவில் யானை என்ற மரியாதையாவது மிஞ்சும். நான்குபேர் கையெடுத்து கும்பிடும் நிலையும் உருவாகும். அந்த யானைக்கு கௌரவமானதொரு கடைசிகாலம் கிடைக்க வேண்டும் என்பதே உண்மையான ஆதரவாளர்களின் ஏகோபித்த கோரிக்கையாகும். ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை.
அரசியல் ரீதியில் வங்குரோத்து அடைந்தவர்கள் – தமது இருப்புக்காக – பிழைப்புக்காக கொஞ்சம்கூட இரக்கமின்றி கிழட்டு யானைமீது கூட்டு சவாரிக்கு தயாராகின்றனர்.
அதுமட்டும் அல்ல கோவில் யானையை கொம்பன் யானையெனக்கூறி அரசியல் சமர் களத்தில் நிறுத்தியுள்ளனர் . ‘ இந்த யானையால் மட்டுமே முடியும், அதனால்தான் விமோசனம் கிட்டும், அனுபவமே ஆசான், அனுபவத்தால் அகிலம் வெல்லும் யானை படை.” என்றெல்லாம் அனல் பறக்கும் அறிவிப்புகள் வெளிவருகின்றன.
இப்படியான ஓவர் பில்டப்புகளால் யானையாலும் பின்வாங்க முடியவில்லை. சூழவுள்ளவர்களை கைவிடவும் மனமில்லை. ‘அனுபவம்” என்ற அஸ்திரத்தை மட்டும் ஏந்தி – தள்ளாடும் வயதிலும் களத்தில் வந்து நிற்கின்றது.
தன்னை பற்றி புகழ்ந்து பேசும் இந்த தரப்பு, தன்னை விடவும் சிறப்பான சவாரி கிடைத்துவிட்டால் மறுகணமே காலை வாரி -கைவிட்டு அதில் பயணிப்பார்கள் என்பதை இத்தனை வருடகால அனுபவத்தில் இந்த யானை அறிந்து வைத்திருக்க வேண்டும். இப்படி இருந்தும் எதற்காக இந்த பயணம் என்ற வினா எழுகின்றது.
சரி கிழட்டு யானையை வைத்து ஒரு புறம் இவ்வாறு அரசியல் படம் ஓட, மறுபுறத்தில் கிழட்டு மைனாவுக்கு மையடிக்கும் செயல் இடம்பெறுகின்றது. எப்படியும் தீபாவளிக்கு முன்னர் அந்த அரசியல் படமும் திரைக்கு வந்துவிடும். ஆக இனி வரும் காலம் அரசியல் களத்தில் தரமான – சிறப்பான சம்பவங்கள் அரங்கேறும் காலப்பகுதியாகவே இருக்கக்கூடும்.
ஆர்.சனத்
![]()