முச்சந்தி
இந்திய அமெரிக்க உறவில் முறிவு?… வலுவடையும் அமெரிக்க பாகிஸ்தான் உறவு!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

இந்தியா ரஷ்யாவிடமிருந்து மிகப்பெரிய அளவில் எரிபொருளை இறக்குமதி செய்வது மட்டுமல்லாமல், அவ்வாறு வாங்கப்பட்ட எரிபொருளின் பெரும்பகுதியை உலக சந்தையில் மீள் விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ் சாட்டியுள்ளார்.
மேலும் இந்தியாவின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரியை கணிசமாக உயர்த்துவேன் என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்தியாவும் அமெரிக்காவும் பல்வேறு துறைகளில், குறிப்பாக இராணுவம், தொழில்நுட்பம், மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன. இந்த உறவு பல ஆண்டுகளாக வலுவாக இருந்து வருகிறது. மேலும் இரு நாடுகளும் எதிர்காலத்தில் மேலும் நெருக்கமாக இணைந்து செயல்பட ஆர்வமாக இருந்தன.
ஆனால் தற்போது இந்தியாவை கடுமையாக எச்சரித்த டொனால்ட் டிரம்ப், இந்திய அரசு ரஷ்ய எரிபொருளால் இலாபமீட்டுவதே காரணம் மட்டுமா அல்லது அதைவிட வேறு காரணங்களுமா என்பதை டிரம்ப் தனது ட்ரூத் சமூக தளத்தில் தெளிவாக பதிவிடவில்லை.
இந்தியா மீது வரி தாக்கம்:
ஆயினும் வரி உயர்வின் அளவு குறித்து டிரம்ப் தெளிவாக எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த அறிவிப்பு இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவால் இந்தியா மீது சுமத்தப்பட்டுள்ள வரி மற்றும் அதன் தாக்கமானது குறுகிய காலம், நீண்ட காலம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறுகிய காலத்தில் ஏற்றுமதி நிச்சயம் குறையும். இதனால் ஏற்றுமதியாளரின் வருவாயும் குறையும். வரிகளால் விலைகள் அதிகரிக்கும். இத்துடன், கையெழுத்தாகியிருக்கவேண்டிய வர்த்தக ஒப்பந்தம் இதுவரை நடைபெறாததால் இந்தியாவிற்கு நிச்சயமற்றதன்மை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் நீண்ட கால தாக்கம்தான் மிகவும் முக்கியமானது ஏனென்றால், வரிகள் ஒராண்டுக்கு மேல் இருந்தால், விநியோக சந்தையில் மாற்றங்கள் ஏற்படலாம். இந்தியா சந்தைகளை விரிவுபடுத்த வேண்டும். குறுகிய காலத்தில், உடைகள், மருந்துகள், இயந்திர பகுதிகள், கடலுணவு மற்றும் தொழில் உற்பத்தி பொருட்கள் மீதுதான் அமெரிக்க வரிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என நம்பலாம்.
அமெரிக்க பாகிஸ்தான் உறவு:
இந்தியாவுடன் முரண்படும் அமெரிக்கா, இப்போது பாகிஸ்தானுக்கு எதிராக அதன் வரிகளை குறைத்து கடைப்பிடித்துள்ளது. அமெரிக்க வணிகங்களுக்கு ஆதரவாக உலகளாவிய வர்த்தகத்தை மறுவடிவமைக்கும் தனது அண்மைய முயற்சியின் போது, ஆகஸ்ட் முதல் நாளில் வர்த்தக ஒப்பந்த காலக்கெடுவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பல நாடுகள் மீது அதிக வரிகளை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
ஆனால் அவர் பாகிஸ்தான் மீதான வரிகளை குறைத்து, முந்தைய 29 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாகக் குறைத்தார். ரஷ்யாவுடனான வர்த்தகத்தைத் இந்திய அரசு தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மேல் பரஸ்பர வரிகளை அதிகரிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தி உள்ளார்.
ஏற்கனவே உயர்த்தப்பட்ட 25 சதவீத வரிகளை விட அதிகமாக, இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கான வரிகளை கணிசமாக உயர்த்துவதாகக் கூறியுள்ளார்.
சிக்கலான மாறிவரும் உறவு:
தற்போது அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு சிக்கலான மாறிவரும் உறவு உள்ளது. இரு நாடுகளும் ஒரு காலத்தில் நெருங்கிய கூட்டாளிகளாக இருந்தன. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் உறவுகள் மோசமடைந்துள்ளன. குறிப்பாக பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் பிராந்திய அரசியல் போன்ற விஷயங்களில் இரு நாடுகள் இடையே கருத்து வேறுபாடுகள் பல உள்ளன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு நெருங்கிய உறவு இருந்தது. பனிப்போரின் போது, அமெரிக்கா சோவியத் யூனியனுக்கு எதிரான ஒரு கூட்டணியில் பாகிஸ்தானை ஒரு முக்கிய பங்காளியாக கருதியது. ஆப்கான்
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கியது. அதே நேரத்தில் பாகிஸ்தான் அமெரிக்காவின் பிராந்திய நலன்களை ஆதரித்தது.

ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்கா – பாகிஸ்தான் இடையே உறவுகள் மோசமடைந்துள்ளன. பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் போதுமான அளவு செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கும் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளையும் குறைத்து வந்தது. மேலும் பாகிஸ்தான், அமெரிக்கா தனது பிராந்திய நலன்களை புறக்கணிக்கிறது என்றும், தனது சொந்த நலன்களை மட்டுமே கவனித்துக்கொள்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
1971இல் பாகிஸ்தானுக்கான அமெரிக்க ஆதரவு:
தற்போதைய நிலையில் பல தசாப்தங்களாக பாகிஸ்தானை அமெரிக்கா எவ்வாறு ஆதரித்து வருகிறது என்பதைக் காட்டும் 1971 ஆம் ஆண்டு செய்தித்தாள் பதிவை பகிர்ந்து கொண்டதன் மூலம் இந்திய இராணுவம் அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளது.
பங்களாதேசத்தின் 1971 போருக்கு முன்னரான தயாரிப்புப் பணிகளில் அமெரிக்கா பல தசாப்தங்களாக பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை எவ்வாறு வழங்கி வந்தது என்பதை இது விவரிக்கிறது.
வங்கதேசத்தில் இஸ்லாமாபாத்தின் ஆயுத ஆக்கிரமிப்பின் பின்னணியில், பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக நேட்டோ சக்திகளும் சோவியத் ஒன்றியமும் எவ்வாறு தொடர்பு கொள்ளப்பட்டன என்பது குறித்து அப்போதைய பாதுகாப்பு உற்பத்தி அமைச்சர் வி.சி. சுக்லா மாநிலங்களவையில் கூறியதாக செய்தித்தாள் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோவியத் ஒன்றியமும் பிரெஞ்சு அரசாங்கமும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்க மறுத்தாலும், அமெரிக்கா தனது ஆதரவைத் தொடர்ந்ததாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவும் சீனாவும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை விற்றதாகவும் அது கூறியது. இது 1971 ஆம் ஆண்டு இந்தியாவுடனான போரை பாகிஸ்தான் இரு நாடுகளும் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு நடத்தியிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
டிரம்ப -மோடி உறவு:
டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், பிரதமர் மோடியுடனான அவரது உறவு நெருக்கமான நட்புறவாக இருந்தது. சமீபத்தில் நடந்தவை இந்திய அரசுக்கு கணிசமான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வருட பாகிஸ்தானுடனான போரின்போது போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட்டதாக டெனால்ட் டிரம்ப் அறிவித்த விதமும், அதன் பின்னர் அதையே அவர் திரும்பத் திரும்ப கூறியதால் இந்திய நாடாளுமன்றத்தில் இதைக்குறித்த விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் மோடிக்கு ஏற்பட்டது.
இருதரப்பு விவகாரத்தில் நீங்கள் எப்படி அமெரிக்கா தலையிட அனுமதித்தீர்கள் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. எப்போதும் குறிப்பாக பாதுகாப்பு விவகாரங்களில் கடுமையான நிலைப்பாட்டையே எடுக்கும் பாரதிய ஜனதா கட்சி சற்று பின்னடைவான நிலையை நோக்கி இதனால் சென்றது.
புதிய வர்த்தக ஒப்பந்தமானது மோடி டிரம்ப் இருவருமே செயல்முறை சார்ந்த தலைவர்கள் அல்ல என பல ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. மேலும் இந்த விவகாரதில் வெளியுறவு அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகம் என இரண்டின் தலையீடும் அதிகமாக இருக்கும். குறிப்பாக மிகவும் சிக்கலாக இருக்கும் வர்த்தக ஒப்பந்தத்தில் தலையீடு அதிகமாக இருக்கும். முன்பு மோடிக்கு டிரம்புடன் நல்லுறவு இருந்தாலும் இந்த விஷயத்தில் தற்போது செய்யக்கூடியது ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.
2020இல் மோடி டிரம்பிற்காக பெரிய அளவிலான ஆதரவு நிகழ்ச்சிகளை நடத்தி, ‘அப்கி பார் டிரம்ப் சர்க்கார்’ என்று கூறி அவருக்கு மரியாதை கொடுத்து இருந்தார்.

இந்தியா மீது டிரம்ப் வரிவிதித்த விதமும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியதற்காக அபராதங்களை விதித்தும் இறையாண்மை மீதான தாக்குதலாகும் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும் இந்திய அமெரிக்க உறவுகளில் பெரிய முறிவு ஏதும் ஏற்பட்டதாக இன்னமும் தெரியவில்லை.
இருப்பினும், சில வர்த்தக மற்றும் அரசியல் காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் எழுவதுண்டு. எடுத்துக்காட்டாக, அமெரிக்கா இந்தியா மீது சில வர்த்தக வரிகளை விதித்தபோது, அது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சிறிய சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது இரு நாடுகளின் உறவை முறித்துக் கொள்ளும் அளவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை எதிர்வரும் காலங்களில் தான் தெரியவரும்.
![]()